ஞாயிறு, 28 மார்ச், 2021

Rahul Gandhi :அ.தி.மு.க.வின் முகக்கவசத்தை அகற்றினால் பா.ஜ.க. தெரியும்"- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

nakkeeran : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (28/03/2021) மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பங்கேற்றார். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
election campaign congress leader rahul gandhi at salem meeting

 பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "தமிழகத்தில் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம்; அவை இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே போராக இருக்கும். தமிழ் கலாசாரம், மொழி, வரலாற்றின் மீது முழுமையான தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் மொழி, கலாசாரம் மீதான தாக்குதலை முறியடிப்பதற்கான தேர்தல் இது. 

இந்தியாவை ஒற்றை சிந்தனைக்கு ஏற்றதாக மாற்றக்கூடிய முயற்சியை ஏற்க முடியாது. எந்தவொரு மொழியும், இன்னொரு மொழியை விட உயர்ந்தது எனக் கூறி விட முடியாது. தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்திற்காக நான் பேசவில்லை; எல்லா மொழிகளுக்காகவும் நிற்கிறேன். இது பழைய அ.தி.மு.க. என்று யாரும் நினைக்க வேண்டாம்; தற்போது இருப்பது 'முகக்கவசம்' அணிந்த அ.தி.மு.க.

 அ.தி.மு.க.வின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தான் தெரியும். பழைய அ.தி.மு.க. போய்விட்டது; தற்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினால் இயக்கப்படும் அ.தி.மு.க. உள்ளது. தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் முதல்வர் எதுவும் கேட்கவில்லை. தமிழகத்தைப் பாதிக்கச் செய்யும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புலனாய்வுத்துறை மத்திய அரசின் வசம் இருப்பதால் தவறு செய்த அ.தி.மு.க. முதல்வர் தலைகுனிய நேரிடுகிறது. தமிழகத்தில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பால் பல லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்". இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். 

 இந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்,

கருத்துகள் இல்லை: