![]() |
பிரபாகரனின் ஆரம்ப காலத்து மிக முக்கிய நண்பர் இவர் (ராகவன்) புலிகளை பற்றிய இவரின் பார்வை ஒரு மிகவும் அதிகாரபூர்வமான வாக்கு மூலத்திற்கு ஒப்பானதாகும்
கந்தன் கருணை படுகொலைகள் நடந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதுவரையில் இந்த சம்பவம் வெளியுலகுக்கு தெரியவில்லை அல்லது தெரிந்தாலும் அப்படியே மக்கள் இதை கடந்து போய்விட்டார்கள்.
தேச விடுதலையை முன்னெடுத்த அப்பாவி போராளிகள் பாசிசவாதிகள் குருரமாக கொலைசெய்யப்பட்டனர்.
இந்த வேதனை வரலாற்று நினைவு குரலுக்கு இவரின் பதிவு மிகவும் பொருத்தமானது என்று கருதுகிறேன்.
இவர்களின் வரலாறு நினைவு கூறப்படவேண்டும்.
வெறும் பாசிசவாதிகள் மட்டுமே ஈழப்போராட்டம் என்று உலகம் கருதிவிடக்கூடாது .
Chinniah Rajeshkumar
: விடுதலைப்போராட்ட அமைப்பு என தன்னை வெட்கமின்றி சொல்லிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மிக கோரமான வரலாற்றுக்கறைகளில் முக்கியமானது கைது செய்யப்பட்டு வைத்திருந்த 63 ஈ பி ஆர் எல் எப் போராளிகளை சுட்டுக்கொன்று வேட்டையாடிய தினம். இது நிகழ்ந்தது 1987 இன் இதே தினத்தில். 1983 இல் நிகழ்ந்த வெலிக்கடை படுகொலைகள் இலங்கையின் கறை படிந்த வரலாற்றின் முக்கிய பக்கம் மட்டுமல்ல தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட ஒரு உந்து சக்தியாகவும் இருந்தது.
அத்துடன் பல மனச்சாட்சி கொண்ட சிஙகள அறிஞர்கள், அரசியல் வாதிகள் வெலிக்கடை படுகொலைகளை கண்டித்தது மட்டுமல்ல வெட்கித்தலைகுனிந்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒரு விடுதலை இயக்கம் என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒரு அமைப்பு சிறைக்கைதிகளை துப்பாக்கிகளால் ஈவிரக்கமின்றி கொன்ற செயல் என்னை பொறுத்தவரை வெலிக்கடை படுகொலைகளை விட இழிவான செயல்.
வெலிக்கடை படுகொலைகள் நிகழும் போது பல அரசியல் கைதிகள் அதற்கெதிராக தற்காப்பு யுத்தம் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
அவர்கள் தங்களுக்கு கிடைத்த பொருட்களை ஆயுதமாக்கி பதில் தாக்குதல் நிகழ்த்தியதால் பலர் தப்புவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
இன்றும் பலர் உயிர் வாழ்கிறார்கள். அத்துடன் எஞ்சியவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
ஆனால் புலிகள் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்த நவீன ஜாலியன் வாலாபாக் படுகொலை இது.
தப்புவதற்கான வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு நிகழ்ந்த வெறியாட்டம் அது.
அதற்குள்ளும் ஓரிருவர் அதிஸ்ட வசமாக தப்பினர்.
இதற்கெதிரான குரல்கள் யூ ரி எச் ஆர் போன்ற ஒரு சில அமைப்புகளை தவிர்ந்து வேறிடங்களில் எழவில்லை.
மக்கள் புலிகளின் மேலான அச்சத்தால் பேசாமல் இருந்தார்கள் என்பது ஓரு புறம் உண்மையெனினும் பெரும்பாலான ஊடகங்களோ அறிவு ஜீவிகள் என சொல்லிக்கொள்பவர்களோ இது பற்றி எவ்வித கண்டனமும் எழுப்பவில்லை.
மௌனத்தால் சம்மதம் தெரிவித்தனர் அல்லது புலிகள் சொன்னதை திருப்பிச்சொல்லும் கிளிப்பிள்ளைகளாயினர்.
புலிகளின் இந்த வன்முறைக்கும் பின்னர் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதற்கும் முட்டுக்கொடுத்தவர்கள் இன்றும் ஊடகவியலாளர்களாகவும் அறிஞர்களாகவும், அரசியல் ஆய்வாளராகவும் இலக்கியவாதிகளாகவும் இருக்கத்தான் செய்கின்றனர்.
புலிகளின் கருத்தியலை வளர்த்தவர்களும் இவர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக