BBC : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் தருமாறு இவர் கேட்டுள்ளார். திங்கட்கிழமை அன்று அப்பெண்ணை பல்லடத்திற்கு வரவழைத்த ராஜேஷ், சில நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று வேலைக்காக சிபாரிசு செய்துள்ளார். இருந்தும், வேலை கிடைக்காததால் இருவரும் ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இயல்பாக பழகியுள்ளனர்.
பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக தன்னை பேருந்துநிலையத்தில் இறக்கிவிடுமாறு அப்பெண் கேட்டுள்ளார். அவரை, தனது தம்பியோடு இருசக்கர வாகனத்தில் ராஜேஷ் அனுப்பியுள்ளார்.
ராஜேஷின் தம்பி அவரை பேருந்துநிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் கணபதிபாளையத்தின் அருகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
மேலும், அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.
வன்கொடுமை செய்யப்பட்ட வடமாநிலப் பெண் அடுத்தநாள் பல்லடம் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'புகாரளித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளோம். குற்றச்செயலில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வருகிறோம், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்' என தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக