இந்தியாவிலேயே தன மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அந்நாளில் வெங்கடாசலம் என்பவரதுவீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.
50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. "மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது. இவரது இசையமைப்பில் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப் படம் நடிகர் ஸ்ரீராம் தயாரித்த ‘மர்ம வீரன்’. இப்படம் 1956-இல் வெளிவந்தது. ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர்.
’மர்ம வீரனில்’ 10 பாடல்கள். வழக்கமாக தாலாட்டுப் பாடல்களைப் பாடிவந்த பாலசரஸ்வதி தேவியை சிருங்கார ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாட வைத்தார் வேதா. அந்தப் பாடல் தான் ‘துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே’. இந்தப் பாடலை மிக அற்புதமாக பாடினார் பாலசரஸ்வதி தேவி.
1958-ஆம் ஆண்டு இரண்டு படங்கள். 1-’மணமாலை’ , ‘அன்பு எங்கே’. ‘மணமாலை’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் ஜெமினி கணேசன், சாவித்திரி. இவர்களுக்குப் பின்னணி பாடியவர்கள் ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா. அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான ‘நடக்காது ஜம்பம் பலிக்காது, என்னைத் தொடவே உன்னாலே முடியாது’ என்ற பாடல். ராகங்களை மெல்லிசையாக வழங்குவதில் விற்பன்னராக விளங்கியவர் வேதா.
அன்பு எங்கே’ படத்திற்காக ’பைலா’ பாணியில் ஒரு பாடலை உருவாக்கினார் வேதா. சிங்களப் படங்களுக்கு இசையமைத்து வாழ்க்கையை ஆரம்பித்த வேதா இலங்கையின் பைலா பாணியில் அனைவரையுமே எழுந்து ஆடவைக்கும் விதத்தில் இசையமைத்ததில் ஆச்சரியமில்லை. சிரிக்க வைத்த பாட்டு ஆனால் அனைவரையும் சிந்திக்க வைத்தது.
T.M.சௌந்தரராஜனின் இனிய குரலில் உருவான அந்தப் பாடல்தான் ‘டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பாரு தங்கம தில்லாலே’. வேதாவின் CLASSICAL பரிமாணத்தை காட்ட வந்த படம் பார்த்திபன் கனவு. கல்கி அவர்களின் சரித்திர நவீனத்திற்கு உயிரோட்டம் அளிப்பதுபோல் அமைந்தது வேதாவின் இசை.
"கண்ணாலே நான் கண்ட கணமே (மருதகாசி), பழகும் தமிழே பார்த்திபன் மகனே (கவியரசர்) இதயவானின் உதய நிலவே (விந்தன்), போன்ற மனதை மயக்கும் மெல்லிசைப் பாடல்கள் , பின்பு அந்தி மயங்குதடி என்று கல்யாணி ராகத்தில் பாரம்பரிய இசை (எம் எல் வசந்தகுமாரி) என்று ஒரு இசை விருந்தே படைத்திருப்பார் வேதா.
அந்தி மயங்குதடியில் இராகத்தின் விலாசங்களைக் காட்ட சிதார் சதிராடும். இதய வானின் பாடலில் வயலின்களின் மேற்கத்திய தாக்கத்தை நாம் உணரலாம். இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார்.
இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். "ஓராயிரம் பார்வையிலே" "நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன" பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன?
இவர் இசையமைத்த கடைசிப் படம் "ஜஸ்டிஸ் விஸ்வநாத்"’. அதன்பின்னர் வாய்ப்புக்கள் அமையவில்லை. கர்நாடகம் இந்துஸ்தான், பொப்பிசை, மெல்லிசை என்று எந்த பாணியிலும் இசையமைக்கும் திறமை கொண்டவர் வேதா. சினிமா உலகம் கற்பனைக்கு முதலிடம் தரும் இடமல்ல. அங்கு விற்பனைக்குத் தான் முதலிடம். திரையிசையில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும், பழைய பாடல்கள் தரும் சுகம் புதியவைகளில் இல்லை.
மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன
(நன்றி: திரு வாமனன் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக