அவருக்கு எதிராக அக்ரஹாரம் மட்டும் அவதூறு பரப்பவில்லை. அவர்களைவிட அதிகமான அவமதிப்பை; அவதூறை அடுத்த தலைமுறை அம்பேட்காரியர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். சர்வதேச பேராசியப்பெருந்தகைகள் முதல் சாமானிய சமூக ஊடக தலித் போராளி வரை.
அப்படி பெரியாரை திட்டமிட்டு தொடர்ந்து அவதூறு செய்யும் அம்பேட்காரியர்களுக்கு அக்ரஹாரத்தின் சடகோபுர ஆசிகளும் ஆதரவும் (பொருளாதார ரீதியாகவும் தொழில் கூட்டணியாகவும்) அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பெரியார் மீதான அக்ரஹாரத்தின் வெறுப்புக்கு நியாயம் உண்டு. தம் ஏகபோகத்தை பெருமளவு குறைத்த ஒரு சித்தாந்தியை அவர்கள் வெறுப்பது இயல்பு. அது நியாயமில்லாவிட்டாலும். ஆனால் தமிழ்நாட்டின் நவீன அம்பேட்காரியர்களின் பெரியார் வெறுப்புக்குப்பின்னிருப்பது — அப்பட்டமான சுயஜாதிப்பாசம்; கடைந்தெடுத்த சுயநலம் (அவரவர் வாழ்வின் வர்த்தக/தொழில்முறை தேவை).
1. இரண்டு இயக்கங்களின் தலைமைகளுக்கும் முதல் தகுதி ஜாதி. மற்றதெல்லாமே இரண்டாம்பட்சம் தான். இரண்டுமே தத்தம் ஜாதிகளின் அனைத்திந்திய பரவலை அதன் தேசிய கட்டமைப்பு வலிமையை அரசியல் மூலதனாக கொண்டு செயல்படுகின்றன. ஒருதரப்பு தம் ஜாதிய ஏகாதிபத்தியத்தை நீட்டிக்கப்போராடுகிறது. மற்றது தங்கள் ஜாதிய ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட விரும்புகிறது. நாங்கள் ஏற்கனவே ஆண்ட பரம்பரை என்கிற அயோத்திதாசரின் புனைவுலக “ஆய்வு” இவர்களுக்கு தமிழ்நாட்டில் பெரிதும் உதவுகிறது.
2. இரண்டுமே ஏக இந்திய தத்துவத்தையே விரும்புகின்றன. பரப்புகின்றன. தங்கள் அரசியலை இந்திய அளவிலான அடையாளத்தோடே அவை திட்டமிட்டு கட்டமைக்கின்றன. மாநில அரசியலில் இயங்குவதை இருதரப்புமே பெரிதாக விரும்புவதில்லை. அது குண்டுசட்டி அரசியல் என்பதே இருதரப்பின் உண்மையான மதிப்பீடு.
3. இருதரப்புமே மாநில அரச அதிகாரங்கள் படிப்படியாக குறைவதையே விரும்புகின்றன. சுயாட்சி மிக்க மாநிலங்கள் உருவாவதை இருதரப்பும் தத்தம் அரசியல் இருப்புக்கு எதிரானதாகவே பார்க்கின்றன.
ஒருதரப்புக்கு ஜெய்ஶ்ரீராம்; மறுதரப்புக்கு ஜெய்பீம்.
இதில் ஒன்று ஆதிக்கத்தின் நீட்சி; மற்றது ஆதிக்க எதிர்ப்பு என்பது வலுவான வாதமாக மேலுக்கு தோன்றலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்திய அரசியலில் ஏகஹிந்தியம் என்கிற ஏகாதிபத்தியத்துக்கும் டில்லி சுல்தானியத்துக்கும் எதிராக ஒரு நூற்றாண்டுகால போராட்டத்தை ஜனநாயக ரீதியில் நடத்தி, அதில் நின்றுபிடித்து 2011 வரை கணிசமான வெற்றியும் பெற்ற ஒரே இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திராவிடர் இயக்க வரலாற்றில் அடுத்தகட்ட நகரலை தடுப்பதில் இந்த இருதரப்புமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இயங்கும். கடந்த 25 ஆண்டுகால தமிழ்நாட்டு “தலித் அரசியல் எழுச்சியும்” அதன் உப விளைவுகளுமே அதற்கான நிதர்சன சாட்சியங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக