minnambalam : உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்ட பட்டியலின பெண்ணின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் போலீசாரே நள்ளிரவில் அவசர அவசரமாகத் தகனம் செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண்ணை கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கி வன்கொடுமை செய்துள்ளது. அந்த பெண்ணின் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெறித்ததில் கழுத்து எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் கடுமையான முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ரவி, ராமு, சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது மற்றும் வழக்குப்பதிவு நடவடிக்கைகளிலும் போலீசார் அலட்சியம் காட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சூழலில் இரு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த ஹத்ராஸ் பெண், டெல்லி சஃப்தர்சங் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று மாலை உறவினர்களின் அனுமதியோ கையெழுத்தோ இல்லாமல் மருத்துவமனையை விட்டு உடலை வெளியே எடுத்து வந்ததற்காக சஃப்தர்சங் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் உடலை ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று உடலை நள்ளிரவு 2.30 மணியளவில் தகனம் செய்துள்ளனர். டெல்லியில் இருந்து 200 கிமீ தொலைவில் இருக்கும் ஹத்ராஸ் பகுதிக்கு நள்ளிரவில் அப்பெண்ணின் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது.
குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கு செய்து இன்று காலை தகனம் செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் குடும்பத்தினர் கெஞ்சியதாகவும், இதற்கு மறுப்புத் தெரிவித்து போலீசார் உடலை எடுத்துச் சென்று எரித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக நள்ளிரவு எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்சை உறவினர்கள் மறிப்பது போன்றும், அப்பெண்ணின் தாய் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறுவது போன்றும் புகைப்படங்கள் வெளியாகின. “எங்கள் வீட்டு பெண்ணின் முகத்தைக் கூட பார்க்க விடாமல் காவல்துறை வலுக்கட்டாயமாக உடலை எடுத்துச் சென்று விட்டனர்” என்று அப்பெண்ணின் தந்தை வேதனைத் தெரிவித்துள்ளார்.
இரவில் உடல் எடுத்துச் சென்ற போது பல இடங்களில் உறவினர்கள் மறித்திருக்கின்றனர். எனினும் அவர்களைத் தள்ளிவிட்டு போலீசார் உடலை எடுத்துச் சென்று இடுகாட்டில் தகனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் லட்சர் , தகனம் செய்யப்பட்ட இடத்தில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர் என்பதற்கான ஆதாரம் உள்ளது. இதை ஊடகங்களிடம் நான் பகிர்ந்துகொள்கிறேன். அதைத்தவிர ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதிகேட்டும் உபியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் முதல்வர் யோகி ஆதித்யநாத், “என்னைத் தொடர்புகொண்டு ஹத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி விசாரித்ததோடு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-கவிபிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக