தலைவர் சோனியா அதிரடி ! மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும்!
Veerakumar - tamil.oneindia.com :
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும்
மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா,
விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா, ஆகிய விவசாயம்
தொடர்பான 3 சட்ட மசோதாக்களை கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு
கொண்டு வந்தது.>இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இருப்பினும், இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்
தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் காரணமாக
விவசாயிகள் கொத்தடிமைகளாக மாற்றப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டி வருகின்றன. நாடு முழுக்க விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி
வருகின்றன.
இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண சாசனம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்
ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சனம் செய்திருந்தார்.
அதேநேரம் இந்த சட்டங்களுக்கு மாற்றாக தீர்வு அளிக்கும் வகையில்
சோனியாகாந்தி ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் தனது ட்விட்டர்
பக்கத்தில் இதுபற்றி கூறியிருப்பதாவது: காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய
அரசின் வேளாண் சட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறி, அரசியல் சாசனம்
வழங்கியுள்ள சட்டப்பிரிவு 254 (2) கீழ் சட்டம் இயற்றுவதற்கு பரிசீலிக்க
வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக்கொண்டு இருக்கிறார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல சட்டம் இயற்றப்பட்டால் மத்திய அரசின் சட்டம், மறுபடி
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு திருப்பி அனுப்பப்படும் என்பது
சட்டத்தில் இருக்கக்கூடிய அம்சமாகும். ஒருவேளை மத்திய அரசு சட்டத்துக்கு
எதிராக மாநில அரசு ஒரு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அனுமதி
கொடுத்துவிட்டால், மத்திய அரசின் சட்டத்தை அந்தந்த மாநிலங்களில்
செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாநில அரசின் சட்டம் செயல்பாட்டுக்கு
வரும், என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக