சனி, 3 அக்டோபர், 2020

ராஜகண்ணப்பன், எ.வ.வேலு மகனுக்கு திமுகவில் புதிய பதவி!

 minnambalam : திமுக தலைமைக் கழக பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள் கடுமையாக உழையுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.

தற்போது திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதுபோலவே புதிய கொள்கை பரப்புச் செயலாளர்களாக லியோனி, சபாபதி மோகன் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 3) வெளியிட்ட அறிக்கையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன்.

"தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய இவர் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார்.

தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாக, வேலூர் ஞானசேகரன், வேலூர் விஜய், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விஜய் அதிமுகவிலிருந்து அண்மையில் விலகி திமுகவில் இணைந்தார். ஞானசேகரன், பரணி கார்த்திகேயன் இருவரும் அமமுகவிலிருந்து விலகி வந்தவர்கள்.

பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பி.டி.அரசகுமார்

தலைமைக் கழகச் செய்தித்தொடர்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தீர்மானக் குழுச் செயலாளராக ஏ.ஜி.சம்பத்தும், தீர்மானக் குழு இணைச் செயலாளராக மு.முத்துசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தீர்மானக் குழு உறுப்பினர்களாக ஆ.நாச்சிமுத்து, வீரகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே.வேதரத்தினம், குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி துணைச் செயலாளராக அன்னியூர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். வேதரத்தினம் கடந்த மாதம் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பனும், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் இரா.இலட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கம்பன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமணன் அதிமுகவிலிருந்து விலகிவந்தவர்.

மீனவர் அணிச் செயலாளராக ஆர்.பத்மநாபன், மீனவர் அணி துணைச் செயலாளராக துறைமுகம் சி.புளோரன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை: