செவ்வாய், 29 செப்டம்பர், 2020

தட்டார்மடம்: கொல்லப்பட்ட இளைஞரின் தாயும் மரணம்.. அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவரான திருமணவேல்

தட்டார்மடம்: கொல்லப்பட்ட இளைஞரின் தாயும் மரணம்!

minnamblam :தட்டார்மடம் அருகே காரில் கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞர், சொத்து தகராறில் செப்டம்பர் 17ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த, அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவரான திருமணவேல் உட்படச் சிலர் மீது செல்வனின் தாயார் எலிசபெத் புகார் தெரிவித்திருந்தார். இவர்களுக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

செல்வன் கொலைக்கு நீதி கேட்டு, அவரது குடும்பத்தினர், திமுக, நாம் தமிழர் கட்சியினர் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வன் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் கடந்த 25ஆம் தேதி சொக்கன்குடியிருப்புக்கு சென்று செல்வனின் தாய் எலிசபெத், தந்தை தனிஸ்லாஸ், சகோதரர்கள் பங்காரு ராஜன், பீட்டர் ராஜன் ஆகியோரிடம் விசாணை நடத்தினர்.

மேலும், திருமணவேல், வழக்கில் கைதான முத்துகிருஷ்ணன் ஆகியோரை 7 நாள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு கோவில்பட்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே மகன் இறந்த சோகத்தில் சரியாகச் சாப்பிடாமல் செல்வன் தாய் எலிசபெத் மனவேதனையிலிருந்து வந்துள்ளார். உடல் நல பாதிப்பால் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சூழலில் நேற்று இரவு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் எலிசபெத் உயிரிழந்துள்ளார்.

மகன் இறந்த சோகத்தில் இனிமேல் யார் எனக்குச் சோறு போடுவார்கள் என்று எலிசபெத் சோகத்தில் புலம்பிக் கொண்டே இருந்ததாக உறவினர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். மகன் இறந்த இரு வாரத்துக்குள் தாயும் இறந்தது சொக்கன்குடியிருப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கவி

 


கருத்துகள் இல்லை: