புதன், 30 செப்டம்பர், 2020

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம் - என்ன நடந்தது?

BBC : உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர்

கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார். டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். கடந்த திங்கட்கிழமை அலிகார் முஸ்லிம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். என்ன-நடந்தது?

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல் வெட்ட தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த பெண் சென்றிருந்தார். அப்போது உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்து பிறகு கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயங்களுடன் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பிபிசியிடம் பேசும்போது, செப்டம்பர் 14ஆம் தேதி எனது சகோதரி, தாய், மூத்த சகோதரர் புல் வெட்ட சென்றோம். பிறகு சகோரர் கைநிறைய புல்லுடன் திரும்பினார். எனது தாயார் முன்பகுதியில் புல் வெட்டச்சென்றார். அப்போது அங்கு நான்கு பேரும் எனது சகோதரியை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்தனர் என்று தெரிவித்தார்.

சுயநினைவிழந்த நிலையில், அருகே உள்ள உள்ளூர் சமுதாய மருத்துவ நிலையத்துக்கு அந்த பெண்னை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு அங்கிருந்து அவர் அலிகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 13 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு திங்கட்கிழமை அவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், அவரது உயிர் செவ்வாய்க்கிழமை காலை பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தனது சகோதரிக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்ட அவரது சகோதரர், "எனது சகோதரியின் முதுகெலும்பு உடைந்திருந்தது. அவரது நாக்கு வெட்டப்பட்டிருந்தது. அவரது கையை அசைக்கக்கூட முடியவில்லை. செய்கை மூலம் வலியைத் தாங்கிக் கொண்டு அவர் பேச முற்பட்டார்" என்று தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நடந்த சம்பவத்தை உத்தர பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி கடுமையாக கண்டித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கவும் அரசு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி வலியுறுத்தினார்.

மற்றொரு முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது அரசு உணர்வற்று இருப்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுவதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கடந்த வார இறுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டியலின சமூகத்தினருக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளரும் ஆஸாத் சமாஜ் கட்சி தலைவருமான சந்திரசேகர் ஆஸாத் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நடந்த சம்பவத்தை கண்டித்து தேசிய அளவிலான போராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம், பட்டியலின பெண்களும் சிறுமிகளும் நடைமுறையில் எவ்வாறு தாக்கப்படுகிறார்கள் என்ற யதார்தத்தை புரிய வைக்கிறது.

 இதுபோன்ற சம்பவங்களில் உள்ள புள்ளிகளை இணைத்தால், தலித்துகள், தலித் பெண்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியிலான வன்முறைகளின் பெரிய விஷயம் புரியும். இதை மட்டும் விதிவிலக்கான கொடூர வழக்காக தனித்துப் பார்க்காமல் மிகப்பெரிய பார்வையுடன் இந்த விஷயத்தை அணுகவும் 

ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் வீரிடம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக பிபிசி பேசியது. "குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவாக நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

காவல்துறை அலட்சியமாக செயல்பட்டதா?

ஹத்ராஸ் சம்பவத்தில் தொடக்கத்திலேயே புகார் தெரிவிக்கப்பட்டபோதும் அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை என்று உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் பிபிசியிடம் தெரிவித்தனர். சம்பவத்துக்கு பிந்தைய 10 நாட்களில் கூட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்ப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டனர்.

சர்க்கிள் அதிகாரியிடம் எனது சகோதரி வாக்குமூலம் அளித்த பிறகே கூட்டுப்பாலியல் வல்லுறவு பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன என்று கூறிய அவர், தொடக்கத்தில் கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின்கீழ் மட்டும் புகாரைப் பதிவு செய்து ஒருவரை மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவராக காவல்துறையினர் சேர்த்தனர் என்று உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கூறினார்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் பிபிசி கேட்டபோது, தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்தான் புகார் கூறினர். விசாரணையின் தொடர்ச்சியாக அந்த பெண்ணின் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

கூட்டுப்பாலியல் தொடர்பான விவரம் மருத்துவ அறிக்கையில் முன்பே உறுதிப்படுத்தப்பட்டது குறித்து அவரிடம் பிபிசி சுட்டிக்காட்டியபோது, அந்த விவரங்களை இப்போதைய நிலையில் பகிர்ந்து கொள்ள முடியாது என்று காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.

முதுகெலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு அறுபட்ட நிலையில் சுயநினைவை இழந்த ஹத்ராஸ் பெண்ணின் சம்பவம், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டுப்பாலியல் வல்லுறவு கொடுமைக்கு உள்ளான துணை மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமையை நினைவூட்டுவதாக பலரும் டிவிட்டர் பக்கத்தில் இடுகைகளை பகிர்ந்துள்ளனர்.

நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வழக்கு

டெல்லி சம்பவத்தில் உயிரிழந்த அந்த 23 வயது பெண் "நிர்பயா" வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு கடந்த மார்ச் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்து விட்டார். மற்றொரு நபர், சம்பவம் நடந்த நாளில் சிறார் என கூறியதால், அவரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் தண்டனை காலம் முடிந்ததும் அவரை விடுதலை செய்தது. அவரது இருப்பிடம், பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த சம்பவத்துக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கூட்டுப்பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்ட பிறகும், தொடர்ந்து பல இடங்களில் ஹத்ராஸ் சம்பவங்கள் போல பல கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன.

 

 

 Dev J :யோகி ஆளும் UPயில் 19 வயது வால்மீகி பெண், உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் 4 இழிபிறவிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் பின் நடந்த கொடூர தாக்குதலில் முதுகெலும்பும், கழுத்தெலும்பும் நொறுக்கப்பட்டு - அதாவது நிர்பயாவை கொன்றது போலவே குரூரமாக கொல்லபட்டிருக்கிறாள்.

உங்களில் எவ்வளவு பேருக்கு இந்த செய்தி தெரியும்.

இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, சுசாந்த் பிணத்தை தூக்கிக்கொண்டும், தீபிகா படுகோனின் காரை துரத்திக்கொண்டு ஓடும் ஊடகங்கள்.

பிணம் தின்னும் காட்டேரிகள் ஆட்சிசெய்யும் வேளையில் சட்டம்?

கருத்துகள் இல்லை: