எப்போதும் இல்லாத அளவில் கீழடி 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என்று நான்கு இடங்களில் அகழாய்வு செய்யப்படுகிறது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த மாத கடைசியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெறுகிறது. இதனால் இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஆவணப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 10க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதில் அதிகபட்சமாக 18 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு தான் பெரிய அளவிலானதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது அதனை விஞ்சும் வகையில் அகரம் அகழாய்வில் முதல் முறையாக 25 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால்
தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த உறைகிணறு 80
செ.மீ விட்டமும் 380 செ.மீ உயரமும் கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீழடி அகரம் – உறை கிணறு
இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள், “கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு வரை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அரசு இதற்காக பணம் ஒதுக்கி அரங்காட்சியம் அமைக்கும் பணியை மேற்கொள்வதும் கூடுதல் சிறப்பு.
கீழடி அகழாய்வில் பழைமையான ஈமக்காடான கொந்தகையை அகழாய்வு செய்து முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருள்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்படி நான்கு இடங்களிலும் வெவ்வேறு வகையான அடையாளங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால் கொரோனா காலகட்டம், தொடர் மழைப் பொழிவு என 6-ம் கட்ட அகழாய்வு தடைக்குப் பின் செயல்பட்டுள்ளது.
எனவே மேலும் சில மாதங்கள் அகழாய்வு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். மழைக்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கலாம்” என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக