வெள்ளி, 15 நவம்பர், 2019

அதானி கம்பனி ஒன்பது மாதத்தில் 200 மடங்கு லாபம் பார்த்தது

Chinniah Kasi : தீக்கதிர் - நவம்பர் 15, 2019 : புதுதில்லி:
பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள்கூட இல்லாதவர் கௌதம் அதானி. ஆனால், தற்போது முகேஷ்அம்பானிக்கு அடுத்த இடத்தில், நாட்டின் இரண்டாவது பெரும் பணக்காரராக அதானி உருவெடுத்து இருக்கிறார்.
அவரது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.அந்த வகையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த ‘அதானி க்ரீன் எனர்ஜி’ (Adani Green Energy limited) என்ற மரபுசாரா எரிசக்தி நிறுவனம், கடந்த 9 மாதங்களில் மட்டும் 200 சதவிகித அளவிற்கு லாபமீட்டி, சக கார்ப்பரேட் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கடந்த 2018-19 நிதியாண்டின், ஜூலை - செப்டம்பர் காலாண்டில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிகர லாபம் மைனஸ் 187 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது 187 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது. ஆனால், 2019-20 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 102 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிஇருக்கிறது. அதேபோல, முந்தைய 2018 - 19 நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 449 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இது தற்போது 2019-20 நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில் 53.5 சதவிகிதம் அதிகரித்து, 689 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் எபிட்டாவும் (Earnings before interest, tax, depreciation and amortisation - EBITDA) 94.4 சதவிகிதம் அதிகரித்து 382 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2018 - 19 நிதியாண்டின் இரண்டாவது காலாண் டில் 196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.எபிட்டா தொகை மட்டுமல்ல, எபிட்டா மார்ஜினும் 55.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டில் எபிட்டா மார்ஜின் 43.8 சதவிகிதமாக மட்டுமே இருந்த நிலையில், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும், மின்சார தயாரிப்பினால் வரும் வருமானம் 3 சதவிகிதம் அதிகரித்து 462 கோடியைத் தொட்டுள்ளது.மேலும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், கடந்த ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாக, செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 970 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

இந்த சாதகமான அம்சங்களால், ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவன பங்குகளின் விலையும் 99 ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.கடந்த 2019 பிப்ரவரியில் அதானிக்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய். ஆனால், இன்று அதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 99 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. சுமார் 9 மாத காலத்துக்குள், அதானிக்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின்பங்கு விலை 200 சதவிகிதம் விலைஅதிகரித்து இருக்கிறது

கருத்துகள் இல்லை: