திங்கள், 11 நவம்பர், 2019

சிவசேனாவை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு!

சிவசேனாவை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு!
மின்னம்பலம் :மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்திக்க சிவசேனா கட்சியிலிருந்து ஆதித்ய தாக்கரே ராஜ் பவன் சென்றுள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக - சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, 105 எம்எல்ஏக்கள் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது. இதனையடுத்து இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க இன்று இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியமைக்க சிவசேனா இன்று காலை முதல் பேச்சுவார்த்தையை துவங்கியது. முதல் கட்டமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையின் படி, சிவசேனா பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் பதவி விலகுவதாகவும் அறிவித்தார். அதன் பின்னர், தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சிவசேனா தலைவர்கள் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏ.கே. ஆண்டனி, படேல் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
இதற்கிடையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோருடன் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் முட்டுக்கட்டை குறித்து விவாதித்தார்.
மாலை நான்கு மணியளவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அரசாங்கத்தை அமைப்பது குறித்து தொலைபேசியில் உரையாடினர். இதனிடையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் லீலாவதி மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பிரிவில் சஞ்சய் ராவத் இருப்பார் என மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் சோனியா காந்தி சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கலந்தாலோசித்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, காங்கிரஸ் சிவசேனாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தனது ஆதரவுக் கடிதத்தை ராஜ் பவனுக்கும் அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து, சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் ஆளுநரை சந்திக்கும் நோக்கில் மும்பையில் உள்ள ராஜ் பவனை அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை: