சனி, 16 நவம்பர், 2019

600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதிய வசந்தா கந்தசாமியை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”

த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 24, 2016 :
600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் வசந்தா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2013-இல் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஏ. செல்வம், பொன். கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில்,
“நாட்டில் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக ஐஐடி திகழ்கிறது. இது பிற கல்வி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் நியமனங்கள், ஐ.ஐ.டி., விதிமுறைகளுக்கு முரணாக நடந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்வுகள் கடந்த 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றவை.
அந்தத் தேர்வுகளில் தேர்வானவர்கள் எல்லோரும் தற்போது ஓய்வு பெற்றிருப்பார்கள். பேராசிரியர்கள் நியமனத்தின் முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுவதால், எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை.
எனவே, சி.பி.ஐ., விசாரிக்கும்படி ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்கிறோம். மனுதாரர் வசந்தா ஓய்வு பெற்று விட்டார். எனவே, 1995-ஆம் ஆண்டு ஜூலை 27 முதல் இணைப் பேராசிரியராகவும், 1997-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் ஓய்வு பெற்ற நாள் வரை பேராசிரியராகவும் பணி செய்ததாக அவரைக் கருத வேண்டும்.
மேலும் அந்தத் தேதிகளில் இருந்து இந்தப் பதவிகளுக்கு வழங்கவேண்டிய ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் வசந்தாவுக்கு ஐஐடி கல்வி நிறுவனம் வழங்கவேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
17 ஆண்டுகள் நடந்த இந்த சட்டப் போராட்டம் குறித்து, பேரா. வசந்தா கந்தசாமி சொல்லும்போது,
“இறுதியாக தீர்ப்பு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது பற்றி 1997-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தேன். இறுதியாக, நீண்ட இருளுக்கும் ஒடுக்குமுறைக்கும் வெளிச்சம் கிடைத்துள்ளது.
தகுதியில்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்ட நான்கைந்து பேரால் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்காக என்னைப் போன்றவர்கள் பாதிக்கப்படுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும்.
என்னுடைய பணியில் முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களை நான் இழந்துவிட்டேன். என்னுடைய ஆய்வுப் பணிகளும் நூல்களும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால் மெட்ராஸ் ஐஐடி எனக்கு பதவி உயர்வு கொடுக்காமல் புறக்கணித்தது. 600 ஆய்வுக் கட்டுரைகளையும் 81 ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறேன். ஆனாலும் ஐஐடி என்னை பேராசிரியராக வர தகுதி இல்லை என நினைக்கிறது.

சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் நான் துணை வேந்தராகவும் வந்திருப்பேன். என்னுடைய இழப்பீட்டை எப்படி அவர்கள் நிவர்த்தி செய்ய முடியும்?” என்கிறார் கனலுடன்.
பேரா. வசந்தாவின் இணையதளம், உலக அளவில் முக்கியமான தரவு தளமாக உள்ளது. ஒரு நாளில் 10 ஆயிரம் பேர் வந்து பதிவேற்றப்பட்டுள்ள இ- புத்தகங்களை பார்வையிடுவதாக தெரிவிக்கிறார் வசந்தா.
கல்பனா சாவ்லா விருது பெற்ற இவர், 13 ஆய்வு மாணவர்களுக்கும் 100க்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்களுக்கு கணிதவியல் உயர்கல்வியில் உதவியிருக்கிறார். பேரா. வசந்தாவின் இந்த சட்டப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முறை வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி, டெக்கான் கிராக்கல் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

கருத்துகள் இல்லை: