திங்கள், 11 நவம்பர், 2019

மகாராஷ்டிராவில் தேசியவாத காங். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு.. காங்கிரஸ் , சிவசேனா கூட்டணி ?


NCP has been invited by the Governor to form the government in Maharashtra tamil.oneindia.com - veerakumaran : மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க, சிவசேனா விடுத்த, மூன்று நாள் கால அவகாசத்தை ஏற்க மறுத்த அம்மாநில ஆளுநர், மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளது புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தங்களிடம் போதிய பலமில்லை என்று கூறி ஆட்சி அமைக்க பாஜக மறுத்துவிட்டது.
இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து திங்கள்கிழமை இரவு 7.30 மணிவரை கெடு விதித்தார். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் இருப்பதை கடிதம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சிவசேனாவால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஆதரவையும் பெற முடியவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காததால் தேசியவாத காங்கிரசும், சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க மறுத்து வருகிறது. எனவே திங்கள்கிழமை இரவு சிவசேனா தலைவர்கள், குழு, ஆளுநரை சந்தித்து மேலும் மூன்று நாட்கள் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை சில நிமிடங்களிலேயே ஆளுநர் நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதை அடுத்து மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 24 மணி நேரத்தில், பெரும்பான்மை பலத்தை காண்பிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார்.

ஆளுநரின் இந்த உத்தரவால், ஒருவேளை காங்கிரஸ் சம்மதித்தால், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க இன்னும் வாசல்கள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. எனவே பந்து இப்போது காங்கிரசிடம் உள்ளது. ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்பதில் காங்கிரசின் கேரள மாநில தலைவர்கள் பெரும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆளுநர் பகத்சிங்கை இன்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்தியது தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு. இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அக்கட்சியை சேர்ந்த, ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், மஹாராஷ்டிராவில் 3 வது பெரிய கட்சி என்பதால், ஆளுநர் எங்களுக்கு அரசு அமைக்க அழைப்பு விடுத்தார். நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்தோம். ஆட்சியமைக்க, காலக்கெடு நாளை இரவு 8.30 மணிக்கு முடிவடைகிறது. அதற்குள் நல்ல முடிவு எட்டப்படும் என கருதுகிறோம், என்றார்.

கருத்துகள் இல்லை: