திங்கள், 11 நவம்பர், 2019

முகேஷ். ரவுடி கும்பலில் சேர மறுத்ததால் சுட்டேன் .. கொலைகாரன் விஜய் வாக்குமூலம்

முகேஷ்
முகேஷ்
விஜய்
விஜய்
vikatan.com - மலையரசு : காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே வேங்கடமங்லத்தைச் சேர்ந்தவர் முகேஷ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். வேங்கடமங்கலத்தில் தனது வீட்டுக்கு அருகேயுள்ள நண்பர் விஜய்யின் வீட்டுக்கு செவ்வாய் கிழமை காலை சென்ற முகேஷ், நண்பருடன் சேர்ந்து தனியறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அறைக்கு வெளியே ஹாலில் விஜய்யின் சகோதர் உதயாவும் மற்றொரு சகோதரர் அஜித்தும் அவர் மனைவி ஒரு அறையிலும் இருந்துள்ளனர். அப்போது துப்பாக்கிச் சத்தம் `படார்’ எனக் கேட்க, வெளியே உட்கார்ந்திருந்த உதயா உள்ளே சென்று பார்த்துள்ளார். தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் முகேஷ் உயிருக்குத் துடித்துக்கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் கையில் துப்பாக்கியுடன் விஜய் அருகில் நின்றுள்ளார்.
உதயா சுதாரிப்பதற்குள் விஜய் அங்கேயிருந்து தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தாழம்பூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உயிருக்குப் போராடிய முகேஷை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கேயிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட முகேஷ், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்துள்ளார். பட்டப்பகலில் கல்லூரி மாணவர் ஒருவர் அதுவும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியைக் கிளப்பியது. விஜய் தப்பியோடிய நிலையில், வீட்டில் இருந்த அவரின் அண்ணன்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பப்ஜி வீடியோ கேம் சண்டையால்தான் இக்கொலை நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர் போலீஸார். தலைமறைவாக இருந்த விஜய், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் தான் உண்மை சம்பவங்கள் வெளிவந்துள்ளன. பெருமாட்டுநல்லூர் பகுதியில் ரவுடி கும்பல் இயங்கி வருகிறது. ரவுடி செல்வம் தலைமையிலான இந்தக் கும்பலில் விஜய் இருக்கிறார். இந்தக் கும்பலில் சேர சம்பவத்தன்று முகேஷை விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதனை அவர் மறுக்கவே வாக்குவாதத்தில் முகேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் விஜய். மேலும், முகேஷை சுட்டுக்கொன்ற துப்பாக்கியை தனது நண்பன் வீட்டில் பதுக்கிவைத்திருந்ததாக விஜய் தெரிவிக்க தற்போது அந்த துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலீஸாரை அதிரவைத்துள்ள இந்த வாக்குமூலம் சம்பவம் குறித்து மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: