வியாழன், 14 நவம்பர், 2019

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டி?

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டி?மின்னம்பலம் : சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் முன்கூட்டியே தங்களது தேர்தல் பணிகளைத் துவங்கிவிட்டன. திமுக சார்பில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (நவம்பர் 14) தொடங்கியது. விண்ணப்பத்தை பலரும் ஆர்வமுடன் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். விருப்ப மனுவை சமர்ப்பிக்க வரும் 20ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் விருப்ப மனு விநியோகத்தை இன்று துவங்கிவைத்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு விருப்ப மனு தாக்கல் செய்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மேயராக பதவி வகித்திருக்கும் நிலையில், அதுபோலவே உதயநிதி ஸ்டாலினும் மேயராக வேண்டும் என்று திமுகவினர் விரும்புகிறார்கள். ஆகவே, இன்னும் பலரும் உதயநிதி பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவின் நிகழ்ச்சிகள், போராட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், மக்களவைத் தேர்தலின்போதே அவர் போட்டியிட வேண்டும் என்று தற்போதைய விழுப்புரம் எம்.பி கவுதமசிகாமணி உள்ளிட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். எனினும், அவர் அப்போது போட்டியிடவில்லை. இந்த நிலையில் தற்போது சென்னை மேயர் பதவியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: