ஞாயிறு, 10 நவம்பர், 2019

ஸ்டாலின் : திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவிலும் ஓங்கி உயர்ந்து நிற்கிறது.

i am going to be a ductatorதினமணி :  சென்னை:; மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியபோது ‘நான் ஒரு சர்வாதிகாரியாக மாறப்போகிறேன்’ என்று. சொன்னது வெறும் பேச்சுக்காக அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (10-11-2019) காலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  சென்னை - இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:
இந்த ஓராண்டு காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று கம்பீரமாக நிமிர்த்து நிற்கிறது. தமிழக  அரசியலில்  மட்டுமல்ல; அகில இந்திய  அளவிலும் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. ஏற்கனவே  89  சட்டமன்ற உறுப்பினர்களை நாம் பெற்றிருந்தோம். இப்போது 100 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். யாரால்?
இது, தனிப்பட்ட என்னுடைய சாதனை அல்ல.  இந்தச் சாதனை அனைத்தும் உங்களைத்தான் சேரும். உங்களை உருவாக்கியிருக்கும் நம் தொண்டர்களைச் சேரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த முறை நமக்கு ஒரு இடம் கூட இல்லை.
ஆனால் இன்று, 24 பேர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால், இது தனிப்பட்ட எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல. தி.மு.கழகத் தொண்டர்களால், உங்களது ஓயாத உழைப்பால் கிடைத்த வெற்றி.
இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உட்கார்ந்திருக்கிறது என்றால், அது உங்களது சாதனை. இயக்கத் தொண்டர்களின் உழைப்பு. நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை - உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்றோம்.
தொண்டர்களின் உழைப்புதான் அதற்குக் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இங்கே பேசிய நம் பொதுக்குழு உறுப்பினர்கள் குத்தாலம் கல்யாணம் தொடங்கி , அனைவரும் நேரத்தின் அருமை கருதி உரையாற்றியிருக்கிறார்கள்.  பல்வேறு  கருத்துக்களை - கோபித்துக்கொள்வார்களோ என்று தயங்காமல், வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்கள். சிலர் பிரச்சினைகளை எடுத்துச்சொன்னார்கள். இவை எல்லாம் ஏற்கனவே நாம் அறிந்தவைதான். சில புதிய செய்திகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
நான் செயல்தலைவராகப் பொறுப்பேற்றபிறகு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தினோம். அந்தக் காலகட்டத்தில், அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து, ஆய்வு நடத்தினோம். மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரையும் தனித்தனியாக அழைத்துப்பேசி ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்தோம். முழுமையாக எடுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு நடவடிக்கைகள் எடுத்தோம். அதன் பலனாக, நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்தது.
நீங்கள் இங்கே கூறிய கருத்துகளையெல்லாம் என் மன ஏட்டில் குறித்துவைத்துக் கொண்டேன். அவையெல்லாம் காலச்சூழலுக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும், அதன்மீது தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியபோது நான் சொன்னேன், ‘நான் ஒரு சர்வாதிகாரியாக மாறப்போகிறேன்’ என்று. அது வெறும் பேச்சுக்காக அல்ல. கழகத்தின் வளர்ச்சிக்காக, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு நிலைநாட்டப் படவேண்டும் என்பதற்காக, நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்னேன்.
நீங்கள் கூறிய சில உண்மையான விமர்சனங்களை, சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்ற உறுதியை பொதுக்குழு மூலமாக எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்.
அதேபோலத்தான், தலைமைக் கழக நிர்வாகிகளாக இருந்தாலும், மாவட்டச் செயலாளர்களாக இருந்தாலும், மற்ற நிர்வாகிகளாக இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
யாரும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்து விடக்கூடாது.
பல லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். தங்களுக்குக்  கீழ் பணியாற்றுபவர்களை, தங்களுக்குக் கீழ்தான் என்று நினைத்துவிடக்கூடாது . அனைவருக்கும் பதவிகள் வழங்க முடியாது. சில ஆயிரம் பேர்தான் பொதுக்குழு உறுப்பினர்களாக முடியும். சில நூறு பேர்தான் செயற்குழு உறுப்பினர்களாக முடியும். நூறுக்கும் குறைவானவர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும்.   சில 10 பேர்கள் தான் தலைமைக் கழக நிர்வாகிகளாக முடியும். அதற்காக, இவர்கள் மட்டுமே கழகமா? இந்தப் பதவியைத் தாண்டி லட்சக்கணக்கான தொண்டர்களால்தான் கழகம் உறுதியாக நிற்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
அவர்களால்தான் நீங்கள் இந்த அரங்குக்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறீர்கள், அவர்களால்தான் நானும் இந்த மேடையில்  நின்று கொண்டிருக்கிறேன். இந்த எண்ணத்தை யாரும் எந்தச் சூழ்நிலையிலும் மறக்காமல் இருந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு எந்தக் கொம்பனாலும் எந்தக் காலத்திலும் முடியாது.
எப்படி நாடாளுமன்றத். தேர்தலில் நமது வெற்றியைப் பற்றி நான் பெருமை பொங்கச் சொன்னேனோ, அதேபோல் நமக்கு இருக்கும் வருத்தத்தையும் சொல்லியாக வேண்டும்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஆளும் கட்சி அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையைப் பயன்படுத்தி பணப் பட்டுவாடா செய்ததால் தோற்றோம் என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. நமது பணியில் ஏதோ குறைபாடு இருக்கிறது. அதுவும் தோல்விக்கு ஒரு காரணம். ஆகவே கழகத்தின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும்.
பொதுக்குழுவில் இரண்டு முக்கியமான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.
திருநங்கைகளை கழகத்தில் இணைக்க ஒரு சட்டத் திருத்தம்; "திருநங்கைகள்" என்ற பெயருக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தவர், தலைவர் கலைஞர் அவர்கள்.
அதேபோல், வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கான அமைப்பு; அவரவர் வாழும் நாடுகளில் அமைத்துக்கொள்ளவும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தி.மு.க.,வை நோக்கி மக்கள் வரவேண்டுமென்றால், மக்களை நோக்கி தி.மு.க. நிர்வாகிகள் வேகமாகச் செல்ல வேண்டும்.
நமது வெற்றியைத் தடுப்பதற்கு மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது.
1991- 96 வரையிலான ஜெயலலிதா ஆட்சி - அதைவிட மோசமான ஆட்சி இப்போது நடைபெறும் ஆட்சி. ஒரு கொள்ளைக் கும்பலிடம் தமிழ்நாட்டு அரசாங்கம் சிக்கிவிட்டது. தமிழகம் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
மிசாவிலேயே நான் இல்லையாம். இதை அரசியல் அறியாதவர்கள் பேசலாம். ஆனால் இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விவாதிப்பது வேதனையாக இருக்கிறது.
நான் மிசாவில்தான் கைது செய்யப்பட்டேன் என்று நானே சொல்லிக்கொள்ள சற்று நாணுகிறேன்.
உதாரணமாக, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். பஞ்சமி நிலம் இல்லை என்று நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன்.
"அதனை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.
"அதனை நிரூபிக்கவில்லை என்றால், மருத்துவர் ராமதாசும், அவர் மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத்தயாரா?" என்று கேட்டேன். இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்? குற்றம் சாட்டியவர்கள் தான், தாம் கூறிடும் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் பா.ஜ.க.,வைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, புகாரில் உண்மை இருந்தால் விசாரிக்கப்படும் என்றார்.
பஞ்சமி நிலம் என்று அவர்கள் கண்டுபிடித்தால், அவர்கள் வெளியிட மாட்டார்களா? தெரிந்துகொண்டே, வேண்டுமென்றே நாடகம் நடத்துகிறார்கள்.
இந்தப் பொதுக்குழுவில் நாம் எடுக்கவேண்டிய உறுதி, கோட்டையை விட்டு கொள்ளைக் கூட்டத்தை விரட்டிடுவோம் என்ற உறுதிதான்!
இந்தப் பொதுக்குழுவைச் சிறப்பாக நடத்தித் தந்திருக்கும் சென்னை மேற்குமாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கும், அவருக்குத் துணைநின்ற கழக நிர்வாகிகளுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் உரையாற்றினார்

கருத்துகள் இல்லை: