வியாழன், 14 நவம்பர், 2019

திருச்சிராப்பள்ளி காட்டுக்குள்ளே.. காருக்குள்ளேயே வைத்து.. தீவைத்து எரிக்கப்பட்ட பெண்

Hemavandhana /tamil.oneindia.com : -   திருச்சி: காட்டுக்குள்ளே.. காருக்குள்ளேயே வைத்து... பெண்ணை தீ வைத்து எரித்து விட்டனர்.. அவர் யார் என்ற விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 
திருச்சி சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி என்ற காட்டுப்பகுதி உள்ளது. சுமார் 930 ஹெக்டேர் பரப்பளவில் இந்த காடு உள்ளது. இன்று காலை காட்டுக்குள்ளே இருந்து நெருப்பு புகை வந்து கொண்டிருப்பதையும், கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதையும் அந்த வழியாக சென்றவர்கள் கவனித்தனர். இதுகுறித்து உடனடியாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசார், அருகில் சென்று பார்த்தபோது, காருக்குள் ஒரு நபரை வைத்து எரித்துள்ளனர். எரித்து கொல்லப்பட்டது ஆணா, பெண்ணா என்று கூட சரியாக தெரியவில்லை. முற்றிலும் கருகி இருந்தது.. அந்த காரின் உரிமையாளர் யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.
இந்த தகவல் பரபரப்பாக பரவி மக்கள் திரண்டு வர ஆரம்பித்துவிட்டனர். பின்னர், தச்சன்குறிச்சி சாலையை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ரெட்டி மாங்குடி கிராம மக்கள் சம்பவம் நடந்த பகுதியினை கடந்து செல்ல முடியாமல் சுமார் 12 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
காருக்குள் 90 சதவீதத்துக்கும் மேல் எரிந்த நிலையில் கிடந்த அந்த பிணம் யார் என்ற விசாரணை தீவிரமாக நடந்த நிலையில், அது பெண் என தெரியவந்துள்ளது. இப்போது பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். பெண்ணை யாராவது காட்டுக்குள் கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம், அடையாளம் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக தீ வைத்து எரித்திருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. 
ஒருவேளை கொலை செய்யப்பட்ட பெண் விபசார அழகியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சில மாசத்துக்கு முன்புதான் ஒரு பெண் இதே காட்டில் எரித்து கொல்லப்பட்டார். இப்போது மீண்டும் ஒரு பெண் எரித்துள்ளதால் பரபரப்பும் அதிர்ச்சியும் கூடி உள்ளது.

கருத்துகள் இல்லை: