ஞாயிறு, 10 நவம்பர், 2019

திருநங்கைகள் திமுகவில் சேரலாம்: பொதுக் குழுவில் தீர்மானம்!

திருநங்கைகள் திமுகவில் சேரலாம்: பொதுக் குழுவில் தீர்மானம்!மின்னம்பலம் : திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் திமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் என சுமார் 3,000 மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கலைஞர் உருவப்படங்களுக்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கும், இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வகையிலும், வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கவும் கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் வழங்கப்படுகிறது எனவும், திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும், அடிப்படை பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கோரியும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், பொள்ளாச்சி வழக்கில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும், கோடநாடு வழக்கு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, சேலம் இரும்பாலை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை: