மின்னம்பலம் - christopher : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியை இன்னும் போலீஸ் கைது செய்யவில்லை அவரது தாயார் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் கடந்த 12ஆம் தேதி 4ஆம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது அடையாளம் தெரியாத நபரால் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், குற்றவாளியை கண்டுபிடித்து சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கண்ணீருடன் சிறுமியின் தாய் புதிய தலைமுறைக்கு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
Please Uncle விட்ருங்க…
அவர் கூறுகையில், ”எனது பிள்ளைகள் வீட்டில் இருந்து இரண்டு ஸ்டாப் தள்ளி இருக்கும் பள்ளிக்கு ரயிலில் தான் செல்வார்கள். கடந்த 12ஆம் தேதி சீக்கிரமே பள்ளி முடிந்த நிலையில் பாட்டி வீட்டுக்கு செல்லும்போது, எனது மகளை அடையாளம் தெரியாத நபர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அப்போது அவனுக்கு போன் வந்த சமயத்தில், தப்பிக்க முயற்சித்த எனது மகளை பளார் பளார் என அடித்துள்ளான்.
அப்போது ’Please Uncle விட்ருங்க. Uncle.. என்னை விட்ருங்க Uncle. என்னை அடிக்காதீங்க.. என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு என் பொண்ணு அழுதுருக்கா. ஆனால் கத்தினால் உன் தொண்டையை அறுத்து கொலை செய்து பக்கத்தில் இருந்து பள்ளத்தில் போட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கான். அதற்கு பயந்து என் பிள்ளையும் அமைதியான நிலையில், மீண்டும் அடித்து வாய் எல்லாம் ரத்தம் வர பாலியல் வன்கொடுமை செய்திருக்கான்.
மறுபடியும் அவனுக்கு போன் வரவும், அவனிடமிருந்து தப்பித்து, அம்மா அம்மா என்று கத்தியபடியே எனது மகள் என்னை நோக்கி ஓடி வந்தாள். என்னம்மானு கேட்டேன். ”அம்மா.. இந்தமாதிரி ஒரு ஹிந்திக்கார பையன் என்னை Bad Touch பண்ணிட்டான்”னு சொன்னாள். அதுக்கப்புறம் பார்த்தால் என் பாப்பா ஆடையெல்லாம் ரத்தம்.. முகமெல்லாம் ரத்தம்.. அதுக்கப்புறம் என் பிள்ளையும் தூக்கிட்டு அவள் சொன்ன இடத்துக்கு போனோம். ஆனால் அங்கே யாருமே இல்லை” என்று கதறி அழுதபடியே கூறியுள்ளார்.
சுட்டுக்கொல்ல வேண்டும்!
தொடர்ந்து அவர், “ என் மகள் 4வது படிக்கிறாள். என் பிள்ளைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இப்போதும் முகமெல்லாம் வலிக்குது வலிக்குது என்கிறாள். எனது மகள் இப்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனது மகளை வன்கொடுமை செய்தவனை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உடனடியாக அவனை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. அவனை சுட்டுக்கொல்ல வேண்டும்” என்று சிறுமியின் தாய் கண்ணீருடன் பேசியுள்ளார்.
அமைச்சர் கீதாஜீவன் பதில்!
அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “இந்த வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை விரைவில் போலீசாரால் கைது செய்யப்படுவார். அவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். அதை நான் உறுதியளிக்கிறேன்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான சிகிச்சை மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சட்டப்படி அவருக்கு தேவையான உதவிகளும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக