வெள்ளி, 18 ஜூலை, 2025

திருவாரூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த 3 போதை ஆசாமிகள் கைது

Thiruvarur government school

 tamil.oneindia.com  - Pavithra Mani  : திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி அரசு தொடக்கப்ப பள்ளி சமையலறையை சேதப்படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. 
இச்சம்பவம் தொடர்பாக போதை ஆசாமிகள் மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 14 மாணவிகள், 17 மாணவர்கள் என 31 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியின் ஒரே ஆசிரியரான அன்புச்செல்வி, பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் கடந்த 11 ஆம் தேதி பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையிஸ், அன்றைய தினம் இரவு நேரத்தில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த குடிநீர் குழாய்களை உடைத்து எறிந்துள்ளனர். பின்னர், சமையலறையில் இருந்த பாத்திரங்கள், பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவையும் கலந்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் பள்ளிக்கு வந்து பார்த்தபோது சமையலறை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, குடிநீர்த் தொட்டியின் மூடி திறந்து கிடந்த நிலையில், அங்கு சென்று பார்த்தபோது மனிதக் கழிவுகள் மிதப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளர் விஜயராஜ் (36), உதவியாளர் செந்தில் (38), பெயின்டர் காளிதாஸ் (25) ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதையடுத்து, அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைதல், அரசுக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மூவரும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: