செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

சிறப்புக்கட்டுரை-காஷ்மீர்:மரணமும் விடுதலையும்-டி.எம்.கிருஷ்ணா!


‘மௌத்’ என்பது மரணத்தைக் குறிக்கும் அரபியில் இருந்து தோன்றிய உருது வார்த்தை. ஆனால், அந்த வார்த்தையின் ‘ஔ’ ஒலியை சுழற்றிச் சொல்லும்போது, புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்து, என் மறைவைக் குறித்து கற்பனை செய்யவும், அது சமாதானமானதாக இருக்குமா அல்லது வன்முறையானதாக இருக்குமா என்பதை யோசிக்கமுடிவதாகவும் உணர்கிறேன். என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்ன சொல்வார்கள்? நான் எப்படி நினைக்கப்படுவேன்? என் கடந்த காலமும், எதிர்காலமும் நொடிகளில் கண்முன் தோன்றி மறைகிறது. மரணத்தில் நினைவில் நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன்.
மறுபுறம், விடுதலை என்ற பொருளுடைய ஆசாதி எனும் பெர்சிய வார்த்தை, வாழ்வின் நறுமணத்தைச் சுமந்துசெல்லும் தென்றலோடு நம்மை மிதக்கவைப்பது. சுதந்திரங்கள் நசுக்கப்படாத ஜனநாயக நாட்டிலேயே நான் மட்டுப்படுத்தப்படுவதாக உணர்வதால், ஆசாதி என்றென்றைக்கும் நம்பிக்கையளிக்கும் வார்த்தைதான். நாம் பிறரைத் தடுத்தாலும்கூட, ஒருவரின் சொந்த ஆசாதியின் (விடுதலை) தேவைக்கு எல்லை இருப்பதில்லை. நாம் வாழ்வதுபோலவே மரிக்கிறோம். வாழ்வில் மரணம் இருக்கிறது.

என் கணினியின்முன் அமர்ந்து, இந்த வார்த்தைகளைப் பற்றி சிந்திக்கும்போது என் நாட்டின் வடக்கு எல்லையில் இருக்கும் காஷ்மீரீல் இருந்து வன்முறையின் வெளிப்பாடுகளையும், கதறல்களையும்தான் நான் பார்க்கிறேன். நான் கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனுடைய உயர் டெசிபல்கள் என் காதுகளை பாதித்திருக்கிறது. நான் உணர்ச்சியற்றவனாக மாறிவிட்டேன். துயரம், வலி, போராட்டம், வேதனை என மௌத்தின் (மரணத்தின்) அனைத்து உணர்ச்சிகளும் அற்றவனாக மாறியிருக்கிறேன்.
இந்த விவாதத்தில் பங்குபெறும் அனைவரும் நான் குழம்பிப் போய், உணர்ச்சியற்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் அதற்கு நான் எதிர்வினையாற்ற வேண்டும். மக்களை என் தரப்புகளை தேர்வு செய்யச்சொல்லி, ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ்ஷின் ‘ஒன்று, நீ எங்களோடு இருக்கிறாய் அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறாய்’ எனும் கருத்தை பின்பற்றச் சொல்கிறார்கள். நான் இதில் ‘எங்களுக்கு’ என்பதை விரைவாக விவரித்துக் கொள்கிறேன். நான் தேசிய பாதுகாப்பைப் பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லாத தாராளவாதியாக இருக்கலாம் அல்லது தேசியவாதியாகவோ, பாகிஸ்தானுக்காக அனுதாபிக்கிறவராகவோ, இஸ்லாமியரை வெறுப்பவராகவோ, காஷ்மீரி பண்டிட்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவராகவோ இருக்கலாம். ஆனால், பிறரின் இருத்தலை நிராகரிக்கும் குறிப்பிட்ட குழுக்களைத்தான் நான் தேர்வுசெய்ய வேண்டும்.
இந்த இரைச்சலுக்கு மத்தியில் மக்கள் மடிகிறார்கள். நான் மக்களை எனும்போது, தீவிரவாதிகளையும், போராளிகளையும், பார்வையாளர்களையும், இராணுவ அதிகாரிகளையும் சொல்லவில்லை. வெறும் மனிதர்களைச் சொல்கிறேன். போராளியோ, இராணுவ அதிகாரியோ, கடமையின் அழைப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், மனதின் ஆழத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறார்கள். இருப்பினும், இரண்டு தரப்பினரும் இறந்தவர்களை ஹீரோ ஆக்குகிறார்கள், பிணங்களை தூண்டிலாகப் பயன்படுத்தி மேலும் அதிக உயிர்களை, தேசப்பற்று அல்லது விடுதலைப் போராட்டம் எனும்பெயரில் இழக்கச் செய்கிறார்கள். நான் நிற்கும் இந்த இடத்திலிருந்து, பிற மனிதரைக் கொல்வதை எதுவும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு போர். மேலும், போரில் முதலில் இறப்பது மனிதம்தான். போரில் எல்லோருமே ‘நீதிக்காக’ கொல்வதுதான் முரண்.

இறந்த போராளி புர்ஹான் வானியை இழிவுபடுத்தவோ அல்லது அனுதாபிக்கவோ தோன்றும் சலனத்துக்கு இணங்கமாட்டேன். இரண்டுமே வெறுப்பின் நிலைகள்தான். அவருடைய நடவடிக்கைகளையோ, இராணுவத்தின் நடவடிக்கைகளையோ விவாதிக்கமாட்டேன். இரண்டுமே கொடூரமானவை. நிகழ்ந்தவை அனைத்துக்கும், இராணுவ அதிகாரி உட்பட அதன் விளைவாக புண்படுத்தப்பட்ட ஒவ்வொரு தனி நபருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். நாம் பல்வேறு நடவடிக்கைகளின் சரியான தன்மையைப்பற்றி விவாதிக்கும்போது, அவர்கள் எல்லோரும் பயத்தில் வாழ்கிறார்கள். ஏனென்று தெரியாமலே உயிரிழக்கிறார்கள்.
வானியின் கதையில் எதுவும் புதிதாக இல்லை. ஏற்கனவே, பல புர்ஹான்கள் இருந்திருக்கிறார்கள். நாம் இப்போதைய நிலைமையை கையாள்வதைப் பார்க்கும்போதும், இன்னும் அதிகம்பேர் வருவார்கள் எனத் தெரிகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான நாம் எப்படி வானியின் குரலில் இருக்கும் பல இளைஞர்களின் உண்மையைக் கேட்க மறுக்கிறோம்? இவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் அல்ல. அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள், அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள், சினமுற்று இருக்கிறார்கள். புர்ஹான் வானியை தீவிரவாதியாக்கியது பயங்கரவாதிகள் அல்ல, நாம்தான்! அவர்கள் அதைத் தொடர்ந்து திட்டமிட்டார்கள் என்பதை இந்திய அரசு எப்போது உணரப்போகிறது?
பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியும் இருக்கும் அரசியல்வாதிகள், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என எப்போதும் பறைசாற்றுகிறார்கள். அவர்கள் என்ன அர்த்தத்தில் சொல்கிறார்கள்? அந்த அரசியல் கோட்டுக்குள் கிடக்கும் நிலத்துண்டு நமக்கு என்கிறார்களா? அங்கிருக்கும் மக்கள் யாருக்குச் சொந்தமானவர்கள்? உங்களுக்கா, அவர்களுக்கா, நமக்கா அல்லது யாருக்குமே இல்லையா? வெவ்வேறு தொனியும், தமக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளும் உடையவர்களாக இருப்பினும், அவர்கள் அனைவரும் காஷ்மீரிகள். வேற்றுமைகள் நிறைந்த நாடு என நாம் பறைசாற்றுகிறோம் எனும்போது, நமக்குள்ளே தேசம் எனும் சித்தாந்தத்தை கேள்விக்குள்ளாக்கும் குரல்களும் இருக்கும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு குரல்தான். இதையும் நாம் கேட்டாக வேண்டும். ஏனெனில், ஜனநாயகம் என்பது அரசியலமைப்பு நிலை அல்ல, அது ஓர் மனநிலை.
வரிசையில் நின்று, ஊரடங்கு உத்தரவுகளை அனுஷ்டித்து, தேர்தல் தினத்தன்று வெளியே வந்து வாக்களிக்காதபட்சத்தில் காஷ்மீரிகள் நமக்குத் தெரியாத எண்ணிக்கையில் இருப்பவர்கள். ஆனால், காஷ்மீரில் இருக்கும் மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசும்போது, நாம் (இந்தியா) அவர்களுக்காக (காஷ்மீரிகள்) நிறைய செய்தும் அவர்கள் நன்றி இல்லாமல் இருப்பதுபோலத்தான் பேசுவோம். உண்மையிலேயே, அவர்களைப் பற்றி நாம் கவலைப்படுகிறோமா அல்லது ஆய்வாளர்கள் சொல்வதுபோல, மூலோபாய முக்கியத்துவம் மட்டும்தானா?
நாம் இந்தியாவின் குடிமகன்கள்? நாம் மெய்நிகர் இராணுவப் போராளிகளாக மாறிவிட்டோம். ஒரு ராணுவ வீரரையும், அவரைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பையும் நம்மால் வித்தியாசப்படுத்த முடியாதா? ஒரு ஜவானின் மரணம், பல மக்களைக் கொல்ல அனுமதி வழங்கும் காரணம் அல்ல. பெல்லெட்டுகள் அபாயகரமானவை அல்ல என்றால் நாம், ஆம் எனத் தலையாட்டுகிறோம். அந்தப் பள்ளத்தாக்கில் நடக்கும் மரணத்தின் நடனத்துக்கு இந்திய குடிமகன்களும், பாகிஸ்தான் குடிமகன்களும் உடந்தையாக இருக்கிறோம். ஏனெனில், வெறிகொண்ட ரசிகர்கள் ஆக்‌ஷன் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதுபோல பார்த்திருக்கிறோம். நாம் எப்போது இதை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நிறுத்தச் சொல்லப் போகிறோம்?

‘இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரிடமும் பேசுங்கள், ஒரு முடிவு கண்டுபிடியுங்கள்’, இந்த மாதிரியான வெற்றுரைகளை நம்ப மறுக்குமளவுக்கு நாம் இவற்றை திரும்பத்திரும்ப கேட்டிருக்கிறோம். நாம் ஒரு பிரச்னைக்கு சட்டரீதியான தன்மையையே கொடுக்காதவரையில், எப்படி அதற்கு முடிவு கொண்டுவர முடியும்? நாம் செய்வது எல்லாம், இந்தச் சூழலுக்காக, பாகிஸ்தான்மீது பழி போடுவதுதான். இதன்வழியே நாம் அவர்களுக்கு, சூழலை மேம்படுத்தும் அதிகாரத்தையளித்து நம்மை மேலும் பலவீனப்படுத்திக் கொள்கிறோம். எல்லை தாண்டும் பயங்கரவாதம் தீவிரமான அச்சுறுத்தல்தான், நாம் நம் எல்லைகளைக் காக்க வேண்டும். ஆனால், எல்லைக்கு உள்ளேயே எளிதில் நொருங்கும்நிலையில் இருக்கிறது நம் தேசம். இதை, நாம் அடக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் குறைகள் நிறைந்த ஒரு நாடு, இதனால் பல தவறுகள் செய்திருக்கிறோம், செய்வோம். நாட்டுக்குள் இருப்பவர்கள்தான் நாட்டுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ற யதார்த்தத்தில் இருந்து நாம் விலகி வர வர, பாகிஸ்தானை அதிகமாக பலப்படுத்துகிறோம்.
காஷ்மீர் ஒரு தீவிர அரசியல் பிரச்னை. ஆனால், அது காஷ்மீரிகளைப் பற்றிய கவலை, கருணை, கவனம்பற்றியதே தவிர அரசுகளையும், தீவிரவாத அமைப்புகளையும், இராணுவங்களையும் குறித்தது அல்ல. ஒருங்கிணைப்பு என்பது ஒருங்கிணைக்கப்படுபவற்றின் மனதில் இருந்து வர வேண்டுமே தவிர, ஒருங்கிணைப்பவரின் மனதிலிருந்து வரக்கூடாது. பிரதேசத்தில் நடக்கும் எந்த இயக்கமும், கவனத்தை இந்தியாவின் மணிமகுடத்தில் இருந்து பள்ளத்தாக்கின் மக்கள்மீது திருப்ப வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அதுவரை பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் மௌத்தின் (மரணத்தின்) யதார்த்தத்துக்கும், ஆசாதியின் (விடுதலை) நம்பிக்கைக்கும் இடையேதான் வாழ்வார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு

டி.எம்.கிருஷ்ணா- சென்னையைச் சார்ந்த கர்நாடக இசைக்கலைஞர்,கலை மக்களுக்காக என்ற கோட்பாட்டில் இசையை சபாக்களுக்குள் முடக்காமல் மக்களிடம் பகிரங்கப்படுத்தி வருகும் கிருஷ்ணா அரசியலிலும் மாற்று சிந்தனைகளை முன் வைக்கிறார்!  மின்னம்பல.கம
http://scroll.in/article/812334/death-and-freedom-for-peace-in-the-land-of-kashmir-we-must-show-genuine-empathy-with-its-people

கருத்துகள் இல்லை: