புதன், 3 ஆகஸ்ட், 2016

விஜயதரனிக்கு சபாநாயகர் : பெண் என்றும் பாராமல் நடவடிக்கை எடுப்பேன்?

பெண் உறுப்பினர் என்று பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணிக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்து பேசினார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி(விளவங்கோடு) குறுக்கிட்டு, ‘தனக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார். விஜயதரணி பேசிய அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்: அமைச்சர் பதிலுரைக்கு பிறகு பேச வாய்ப்பு தருகிறேன். அதற்கு முன்பு பேச வாய்ப்பு தரமாட்டேன். தொடர்ந்து இதுபோன்று குறுக்கிட்டு பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.


அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்: ஒவ்வொரு கட்சி சட்டமன்ற தலைவர்கள் தங்கள் தரப்பில் யார் பேச வேண்டும் என்று பட்டியல் கொடுக்கின்றனர். அதன் அடிப்படையில் பேரவையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பேச அழைக்கப்படுகின்றனர். இப்போது அமைச்சர் பதிலுரை நடந்து கொண்டிருக்கிறது. நாளை பேசலாம். சபாநாயகர் தனபால்: விஜயதரணி என்னை சந்தித்து பேச வாய்ப்பு கேட்ட போது, இன்று இரண்டு அமைச்சர்கள் பேச வேண்டியதுள்ளது. நாளை பேசுவதாக இருந்தால் உங்கள் சட்டமன்ற தலைவரிடம் பட்டியல் கொடுங்கள் பார்க்கலாம்  என்றேன்.  அதை ஒப்புக் கொண்ட விஜயதரணி, இப்போது பேச அனுமதி கேட்கிறார்.

(காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமியை நோக்கி), ‘விஜயதரணியின் நடவடிக்கையை நியாயம் என்கிறீர்களா?, பெண் உறுப்பினர் சபையில் இப்படி நடப்பது நியாயமா? உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பெண் உறுப்பினர் என்றும் பார்க்க மாட்டேன் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.  தினகரன்.காம்

கருத்துகள் இல்லை: