வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஆர்எஸ்எஸ் சதித்திட்டங்களை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில்... இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு !

theekkathir.in :புதுதில்லி, ஆக. 4 – ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக படுகொலை போன்று பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை நடத்திட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு வலியுறுத்தியுள்ளது.
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை சார்பாக வைடர்ஸ்டேன்ட் என்ற ஆண்டு பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. இப்பத்திரிகையில் சில கட்டுரைகள் மத்திய அரசாங்கத்தை விமர்சிக்கும் உள்ளடக்கம் இருப்பதாக கூறி பாஜக மற்றும் ஏவிபிவியினர் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகை பிரதிகளை தீ வைத்து எரித்துள்ளனர்.



இந்நிலையில் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் இப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) அனிஷா பஷீர்கானிடம் விளக்கம் கேட்டுள்ளது. பாஜக அரசு மீதான விமர்சனத்தை முன்வைத்துள்ள கட்டுரைகள் மற்றும் படைப்புகளை உடனடியாக நீக்க வேண்டுமென பத்திரிகை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாணவர்கள், இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டனர்.
பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எம்.ராமச்சந்திரன், வைடர்ஸ்டேன்ட் பத்திரிகையின் உள்ளடக்கம் மத்திய அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சிக்கின்றது.
இப்பத்திரிகையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட எப்படி அனுமதியளிக்கப்பட்டது என்ற கேள்வியுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின், தலையீட்டினால், மாணவர் நலத்துறையின் தலைவர் (டீன்) பேரா.மூர்த்தி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பத்திரிகை வெளியீட்டு விழாவில் துணைவேந்தரும் மாணவர் நலத்துறையின் தலைவர் (டீன்) ஆகியோரும் பங்கேற்றனர். பொது நிகழ்ச்சியில் தான் பத்திரிகை வெளியிடப்பட்டது.
இருப்பினும் ஆர்எஸ்எஸ், பாஜக, ஏபிவிபி ஆகிய அமைப்பினர் திட்டமிட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் தலையீட்டின் மூலம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தின் சூழலை கெடுக்கும் நோக்குடனும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடனும், பிரச்சனைகள் பெரிதாக்கப்படுகின்றன.
இப்பல்கலைக்கழகத்தின் ஜனநாயக உரிமைகளை மீட்பதற்காகவும், தகுதியற்ற துணைவேந்தரை நீக்கிடவும் கடந்த 2015 ஜூலை – ஆகஸ்ட்டில் 18 நாட்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு பிறகுதான் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இப்பிரச்சனையில் தலையிட்டது. அப்போராட்டத்திற்கு பின் கல்வி வளாக ஜனநாயக சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாண்டிச்சேரி பல்கலை.யில் மாணவர்களின் உரிமைகளுக்காக இந்திய மாணவர் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக போராடி வந்துள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் கூட்டணி அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றி 11-0 பெரும் வெற்றிபெற்றது. மாணவர் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பத்திரிகை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்நிகழ்வை பயன்படுத்திக் கொண்டு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஹைதராபாத் மற்றும் ஜே.என்.யு பல்கலைக்கழகங்கள் போன்று குழப்பங்களை உருவாக்குவதன் மூலம் கல்விநிலைய ஜனநாயகத்தை படுகொலை செய்யவும் மேலும் தனது இந்துத்துவ அரசியலை புகுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மாணவர் சங்க மத்திய நிர்வாக குழுவின் சார்பாக பொதுச் செயலாளர் விக்ரம் சிங் அகில இந்திய தலைவர் வி.பி.சானு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: