மத வெறுப்புணர்வைத் தூண்டும் இந்துத்துவ கண்காட்சி
அமைப்பாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய
மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை
விடுத்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,
“மீனம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஏ.எம்.ஜெயின்
கல்லூரி வளாகத்தில் 8வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று
வருகிறது. இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சில அரங்குகள் முழுக்க
முழுக்க மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்து மதத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் மட்டும் இந்த
கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தால் அது பல்வேறு மத நம்பிக்கைக் கொண்ட
மக்களிடையே அது சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்து
ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கண்காட்சி
முழுக்க முழுக்க சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான
வெறுப்புணர்வைத் தூண்டும் தீய நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான அபாண்டமான, ஆதாரமற்ற
அவதூறு செய்திகளைப் பரப்பும் விதமாக “தாலிபான் நாடாகும் தமிழகம்” என்ற
தலைப்பில் கண்காட்சிக்குள் நுழைந்த உடனேயே அரங்குகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்து மக்கள் மனதில் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியையும்,
வெறுப்புணர்வையும் தூண்டும் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இந்த அரங்குகள்
அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிறிஸ்த்தவ மக்களின் சேவைகளைக்
கொச்சைப்படுத்தும் வகையிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு
மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் வகையிலும்
இந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு உதவி பெறும் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் வகுப்புவாத
உணர்வைத் தூண்டும் வகையிலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்
படுத்தும் விதமாகவும் நடைபெற்றுவரும் இக்கண்காட்சிக்கு காவல் துறை அனுமதி
அளித்துள்ளது கண்டனத்திற்குரியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இங்கு அழைத்து
வரப்பட்டு அவர்கள் பிஞ்சு நெஞ்சில் விஷம் விதைக்கும் வகையில் இந்த
கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வியை காவிமயமாக்கும் மோடி அரசின்
புதிய கல்வி கொள்கையின் முன்னுரையாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.
மத ரீதியான வெறுப்புணர்வைப் பரப்பி தமிழகத்தில் நிலவும் சமூக
நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இந்தக் கண்காட்சியை உடனடியாக தமிழக அரசு தடை
செய்யவதுடன் தீய நோக்கத்துடன் செயல்பட்ட இதன் ஏற்பாட்டாளர்களைக் கைதுச்
செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மத காழ்ப்புணர்ச்சியையும், வகுப்புவாத வெறுப்புணர்வையும் தூண்டும்
இக்கண்காட்சி நடத்துவதற்கு இடமளித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரி நிர்வாகத்தின்
மீதும் தமிழக அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென
கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக