புதன், 3 ஆகஸ்ட், 2016

சசி புஷ்பா - ஜெயலலிதா - வைகுண்டராஜன் .... என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது.. ஒண்ணுமே புரியல்ல?

பார்லிமென்ட்டில் எம்.பி. சசிகலா புஷ்பா பேசிய அதிரடிப் பேச்சு அதிமுக, திமுகவில் மட்டுமல்ல காங்கிரஸ்,பாஜக, பி.எஸ்.பி.,கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அனைத்து அரசியல் தலைமைகளிடத்திலும் பெருத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ' இது மாநிலக் கட்சியொன்றின் உள்விவகாரம்' என்று மிக எளிதாகக் கடந்துசெல்ல முடியாத அளவுக்கு சசிகலா புஷ்பா,  " என் தலைவர் என்னை அறைந்தார்...பெண் பாதுகாப்பு எங்கே இருக்கிறது" என்று கண்ணீர் மல்க அவைத்தலைவரிடம் முறையிட்டது, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஆங்கில ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறிப்போயுள்ளார் சசிகலா புஷ்பா.

தமிழக அரசியல் வரலாற்றில், அதுவும் அதிமுக வரலாற்றில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, நேரில் அழைத்துப் பேசி ராஜினாமா செய்யச் சொல்லியும் 'என்னால் முடியாது, கம்பெல் பண்ணி என்னைப் பதவியைவிட்டு நீக்க முடியாது' என்று அழுத்தந்திருத்தமாக பேட்டி அளித்துள்ளவர் எம்.பி. சசிகலா புஷ்பா மட்டுமே. 'இந்த அளவிற்குத் துணிச்சல் சசிகலா புஷ்பாவிற்கு எங்கிருந்து வந்தது,


இவ்வளவு நாள் இல்லாத தைரியம் இப்போது மட்டும் எப்படி வெளிப்பட்டது' என்று அதிர்ச்சி விலகாமல் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்  அதிமுகவினர்.

அதே நேரத்தில், நாடளுமன்றத்தில் நடுநாயகமாக நின்றுகொண்டு, " எனது தலைவர்  என்னை அறைந்தார்,எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது" என்று கொப்பளிக்கும் கண்ணீரோடு சசிகலா புஷ்பா கொட்டிய வார்த்தைகள், கட்சி பேதமின்றி எல்லா தலைவர்களின் இதயத்தையும் தாக்கியுள்ளது. இது குறித்து அவர் நேற்று (திங்கள்) டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் சசிகலா புஷ்பா செய்தது தவறு என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மாற்றுக் கட்சியில் சேருவதற்காக அவர் இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார் என்றும் பல்வேறு விதமாக விவாதிக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலா தோழி என்றால்,  இன்னொரு சசிகலா எதிரியாக மாறிவிட்டார் என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தை நன்கறிந்தவர்கள்.

ஜெயலலிதா - வைகுண்டராஜன்...பனிப்போர்!


இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் திடுக் புகாருக்கு பின்னால் தாதுமணல் விவகாரம் இருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் தென் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.கழக பிரமுகர்கள். அண்மையில் தமிழக அரசு தரப்பில், தாதுமணலை அரசே ஏற்று நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு அரசியல் பின்னணி உண்டு. இந்நிலையில், தமிழக அரசை பணியவைக்க தாதுமணல் பிஸினஸ் புள்ளிகள் சிலர்,  'சசிகலா புஷ்பாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களோ' என்கிற சந்தேகம்,  தென்மாவட்ட அ.தி.மு.கழக பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வைகுண்டராஜன் ஆசியுடன் அரசியல் களம் கண்ட சசிகலா புஷ்பா, தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திரும்பியிருப்பதன் பின்னணியில் தாதுமணல் விவகாரம் இருக்கலாம் என்பது அவர்களது கணிப்பு.

தென் மாவட்டங்களில் கடற்கரையோரம் உள்ள தாது மணலில் கார்னெட், தோரியம், சிர்கான், ரூட்டைல் உள்ளிட்ட பல்வேறு அரியவகை தாதுக்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த தாது மணலில் உள்ள தோரியம்,  அணு மின் உலைகளில் எரிபொருளாகப் பயன்படக் கூடியது. அதனால் இந்த மூலப்பொருள் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்று விடக்கூடாது என்பதால்,  இதனை மட்டும் தனியார் நிறுவனங்கள் பிரித்து எடுக்க அனுமதி இல்லை. அதனால் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் மத்திய அரசின் சார்பில் உள்ள ஆலையில் தோரியம் பிரிக்கப்படுகிறது. கார்னெட் உள்ளிட்ட பிற தாதுப்பொருட்களை தனியார் நிறுவனங்கள் பிரித்து எடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

அந்தவகையில், கடந்த 30 ஆண்டுகளாக, தாது மணல் பிஸினஸில் நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த வைகுண்டராஜன், தென்கோடி கடற்கரை ஊர்களில் கொடி கட்டிப் பறந்தார். கனிம வள ஏற்றுமதியை பொறுத்தவரை வைகுண்டராஜன் தொடர்புடைய நிறுவனங்களே, இந்திய அளவில் தலை சிறந்து விளங்கின. இதற்காகப்  பலமுறை மத்திய அரசின் விருதுகள் இந்த நிறுவனத்துக்கு கிடைத்திருக்கின்றன. அதே நேரம், அ.தி.மு.கவில் செல்வாக்கோடு வலம் வந்த வைகுண்டராஜன், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் யார், யாருக்கு கட்சியின் சார்பாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ‘சீட்’ கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார். அவரை பகைத்துக் கொண்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்கிற நிலைமை ஒரு காலத்தில் இருந்து.

கடந்த கால தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தாது மணல் பிஸினஸில் பிரபல டாடா நிறுவனம் கால்பதிக்க முயற்சித்தபோது, அதை தனக்கே உரித்தான அரசியல் தந்திரத்தால் முறியடித்தார். அவரது தொழில்களுக்கு உள்ளூர் மக்களால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவது உண்டு. சில இடங்களில் அந்த மனிதரின் நிறுவனத்தினர்,  தங்கள் அரசியல் செல்வாக்கால் சிக்கல்களை சரிசெய்வார்கள்.  லோக்கல் காவல்நிலையம் அல்லது கனிம வளத்துறையினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. ஆனாலும் சில சமயங்களில் லோக்கல் நபர்கள் ஒன்றிணைந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட முயற்சி செய்வார்கள். திடீரென அதுவும் பிசுபிசுத்துப்போகும். தாதுமணல் பிஸினஸில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டு வளர்ந்தார் வைகுண்டராஜன்.

ஜெயலலிதாவின் கோபம்...


இந்தநிலையில், அ.தி.மு.க தலைமைக்கு திடீரென வைகுண்டராஜன் மீதான நெருக்கம் குறைய தொடங்கியது. அவருக்கு தி.மு.கவிலும் லாபி இருந்த விவகாரம் தெரிய வந்ததால், அ.தி.மு.க அவரை ஒதுக்கி வைக்க முடிவு செய்தது.  அ.தி.மு.கவில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அல்லது அவரால் வளர்த்து விடப்பட்டவர்கள் ஒவ்வொருவராக ஒதுக்கப்பட்டனர். அவர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், தாது மணல் அள்ளும் சில தனியார் நிறுவனங்கள் அரசு வகுத்துள்ள எந்த விதிமுறையையும் கடைபிடிப்பதில்லை என்றும், இதனால் தமிழக அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஸ்குமார் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தார்.

அதையடுத்து, தமிழக அரசு சார்பாக  முதல்வர் ஜெயலலிதாவால், ஐ.ஏ.எஸ். அதிகாரியான ககன்தீப்சிங் பேடி,  கடற்கரைப் பகுதிகளில் தாது மணல் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பணிக்கப்பட்டார்.  ககன்தீப்சிங் பேடியும் ஒரு குழுவுடன் கடந்த 2013 ம் ஆண்டே நெல்லை கடற்கரைப் பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தினார்.

இந்த நிலையில், ககன்தீப்சிங் பேடி நடத்திய விசாரணைக்குப் பிறகு, தென் தமிழகத்தில் நடந்து வந்த தாது மணல் ஆலைகள் செயல்படுவதற்கும் தமிழக அரசு தடை விதித்தது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது வைகுண்டராஜன் தரப்பினர்தான். கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டி வந்த தொழில் முடங்கிவிட்டதால் வைகுண்டராஜன் தரப்பினர் அந்த தடையை நீக்க, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த பலனும் ஏற்படவில்லை.  இதனையடுத்து டெல்லியில் உள்ள மத்திய கனிம வள அமைச்சகம் மற்றும் அதிகாரிகளைத்  தொடர்பு கொண்டு,  தாது மணல் விவகாரத்தில் தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினார்கள். அங்கேயும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அம்பு...சசிகலா புஷ்பா! எய்தவர்கள் யார்?


இதுபற்றி நெல்லையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கூறும்போது, ''என்னை மாதிரி பலரும் கட்சி அரசியலில் வைகுண்டராஜன் தரப்பினரால் ஓரங்கட்டப்பட்டோம். மாநில அரசியலில் ஏறுமுகம் இறங்குமுகம் வரலாம். ஆனால், நிரந்தரமாக தாது மணல் பிஸினஸில் கொடிகட்டிப் பறக்க வேண்டுமானால், டெல்லியிலும் தனக்கு பவர் இருக்கவேண்டும், அந்த பவரை தாதுமணல் அள்ள 'பிஸினஸ் அம்பாஸிடர்' போல இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்தார் வைகுண்டராஜன். ஒருகாலத்தில், அவரின் ஆசியுடன் அதிமுகவில் அறிமுகம் செய்யப்பட்டு கிடுகிடுவென வளர்ந்திருந்த சசிகலா புஷ்பா, டெல்லியில் தனக்கென செல்வாக்குடன் வளர்ந்திருந்ததை அறிந்தது வைகுண்டராஜன் தரப்பு.

இந்த நோக்கத்துக்காக இவர்கள் சசிகலா புஷ்பாவை நாடியிருக்கலாம். இதேநேரம், தி.மு.கழக பிரமுகர்களுடனும் நட்பு வைத்திருந்தார் சசிகலா புஷ்பா.  அம்மாவுக்கு பிடிக்காதவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது.  இதை மீறிய காரணத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருந்தார் எங்கள் அம்மா. இதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்துகொண்ட சசிகலா, அவரின் நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கவேண்டும். அதன்பிறகுதான், திருச்சி சிவாவை விமானநிலையத்தில் அறைந்து ஒட்டுமொத்த மீடியாவையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். சசிகலா புஷ்பா அங்கே அப்படி நடந்துகொண்டது திட்டமிட்டு நடத்திய நாடகம். தாதுமணல் பிஸினஸ் புள்ளிகள் அவரை ஒரு அம்பாக எய்திருப்பார்களோ என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது" என்கிறார்கள்.

ஜெயலிதாவின் சந்தேக லிஸ்டில் சசிகலா புஷ்பா இடம்பெற்றது எப்படி?


முன்னதாக டெல்லியில் சசிகலா புஷ்பாவின் நடவடிக்கைகள் மீது அ.தி.மு.க தலைமையின் பார்வை பதியத் தொடங்கியது. அவரது நடவடிக்கைகள் தீவிரமாகக்  கண்காணிக்கப்பட்டன. இதைப் பற்றி அறியாத அவர், வழக்கம் போலவே செயல்பட்டார். டெல்லியில் நம்மை யார் கண்காணிக்கப் போகிறார்கள் என்கிற நினைப்பில் தி.மு.கவினருடன் நெருக்கமாக பழகத் தொடங்கினார். திருச்சி சிவா மட்டும் அல்லாமல் தி.மு.கவை சேர்ந்தவர்கள் அனைவரிடமும் சகஜமாக பேசிப் பழகினார். கனிமொழியுடன் டெல்லியில் ஷாப்பிங் சென்றதாகவும் பேசப்பட்டது. பொது இடங்களில் கனிமொழியை அடிக்கடி சந்தித்துப்  பேசுவதாகவும் கட்சித் தலைமைக்குத் தகவல் போனது. தாது மணல் பிஸினஸ் பிரமுகர்கள் சிலரும் சந்தித்ததாகப் பேச்சு உண்டு. இதனால் கடுப்படைந்த கட்சித் தலைமை, அவரது கட்சியின் பொறுப்புகளைப்  பறித்தது. அத்துடன் மாநிலங்களவை அ.தி.மு.க கொறடா பொறுப்பும் பறிக்கப்பட்டது.

ஆனாலும், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அதனால் அவரது எம்.,பி பதவியை பிடுங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த நிலையில், திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அடித்து சர்ச்சையை உருவாக்கியதால், அதன் பின்னணியில் அவரை ராஜினாமா செய்ய வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் சர்ச்சையாக்கி, அரசியல் விவாதத்தைக்  கிளப்பிவிட்டு அதிமுக தலைமையை முந்திக்கொண்டார் சசிகலா புஷ்பா.

வைகுண்டராஜனுக்கு புது அசைன்மென்ட்டா?
இப்போது சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய வைக்கும் பொறுப்பு வைகுண்டராஜனிடம்  கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அவரது உறவினர்கள் சிலர் மூலமாக இதற்கான நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இதன்மூலம் கார்டன் தரப்பு கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஏற்கெனவே, ‘தாது மணலை எடுத்து அதில் உள்ள பொருட்களைப்  பிரிக்கும் ஆலைகளை அரசே ஏற்று நடத்தும்’ என சட்ட மன்றத்தில் ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பட்ஜெட் உரையின் போது அதே அறிவிப்பு வெளியிடப்பட்டும்  இருக்கிறது.இது தாதுமணல் ஆலை அதிபர்கள் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எனவே தமிழக அரசுக்கு சங்கடம் உண்டாக்கும் தருணத்திற்காக தாதுமணல் மாஃபியா எதிர்நோக்கியிருந்த தருணத்தில்தான், திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் சசிகலா புஷ்பா. மறுநாள் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு, அவர் அதிமுக தலைமையால் கண்டிக்கப்பட்டார்.  இந்நிலையில் போயஸ்கார்டன் சென்ற மறுதினமே அதிமுக தலைமை மீது ராஜ்யசபாவில் சசிகலா  பரபரப்பான புகாரைக் கூற,  அதன் பின்னணியில் மணல் மாஃபியா தரப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்தே கார்டன் தரப்பு கொஞ்சம் இறங்கி வந்து எப்படியாவது அவரை ராஜினாமா செய்ய வையுங்கள் என்று மணல் மாஃபியா தரப்பினர் வலியுறுத்தியுள்ளனராம்.    

இந்தச் சூழலில்,  அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், தொழில் நலனைப் பாதுகாக்க ஆலை அதிபர்கள் முடிவு  செய்தும்  இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தொடர்ந்து சசிகலா புஷ்பாவிடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். முதல்வரின் முடிவுக்கு கட்டுப்பட்டு ராஜினாமா செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். ஆனால், இதுவரையிலும் சசிகலா புஷ்பா பிடிகொடுக்காமல் பேசி வருவதால் 'மணல் மனிதர்' உள்ளிட்ட பல்வேறு தொழில் அதிபர்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள். சசிகலா புஷ்பாவை பொறுத்தவரை, 'யார் என்ன சொன்னாலும் ராஜினாமா செய்வதில்லை' என்பதில் உறுதியாக இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதுபற்றி வைகுண்டராஜன் தரப்பினர் கூறும்போது, ''தமிழக அரசு தாதுமணல் பிஸினஸில் முடிவெடுத்துவிட்டது. இனி அதை சட்டரீதியாக சந்திக்க இருக்கிறோம். இந்த நிலையில், சசிலா புஷ்பாவை வைத்து நாங்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பாலிடிக்ஸ் செய்வதாக அ.தி.மு.கவில் ஒரு கோஷ்டியினர் வதந்தி பரப்பி வருகிறார்கள். சசிகலா புஷ்பா விஷயத்தில் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை அவர்களது உட்கட்சி பிரச்னை தொடர்புடையது. எங்களுக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை'' என்கிறார்கள்.
அவர்கள் இவ்வாறு கூறுகின்றபோதிலும், சசிகலா புஷ்பாவின் பின்னணியில் மணல் தரப்பு உள்ளது என்ற கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக,  நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வில், சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களான பணகுடி பேரூராட்சித் தலைவர் லாரன்ஸ், நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.ஆர் ஜெகதீஸ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.

- தேவராஜன், ஆண்டனிராஜ்    விகடன்.காம்

கருத்துகள் இல்லை: