வியாழன், 4 ஆகஸ்ட், 2016

2006 இல் காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதை வாசன்தான் தடுத்தார்.. கலைஞர் தயாராகத்தான் இருந்தார்!

பரபரப்பாக பேசப்பட்டுவந்த தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியிடம் குறித்த செய்தி இன்று பத்தோடு பதினொன்று என்றாகிவிட்டது. ஒருவேளை, தலைவர் இல்லாத நேரங்களில்தான் தமிழகத்தில் காங்கிரஸ் நன்றாக செயல்படுகிறது என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதோ என்னவோ, தலைவர் பதவிக்கு ஆளை நியமிக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸில் அடிக்கடி கலகக் குரல் எழுப்பி வரும் அதன் விவசாயப்பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜனை நாகர்கோவிலில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
தொடர்ந்து காங்கிரஸில் குழப்பம் நீடிக்க என்ன காரணம்?
காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர்கள் தான் முழு குழப்பத்திற்கும் காரணமே. காமராஜர் காலத்துல அந்தப் பதவி கிடையாது, தலைவருக்குத் தான் முழு அதிகாரத்தையும் கொடுத்திருந்தாங்க. ஆனா இப்படி பொறுப்பாளர் நியமிக்கப்பட்டதனால், இவங்க தான் தமிழ்நாடு காங்கிரஸ்னு நினைச்சிக்கிட்டு இப்போ, இங்க உள்ள சிலர் இந்தியிலேயும், இங்கிலீஷ்லயும் பேசி அவங்கள்ட்ட நல்லபேரை எடுத்து வச்சிருக்காங்க.


களத்தில் நின்னு வேலைப்பார்க்கிற அடிமட்ட நிர்வாகியையும், தொண்டனையும் இந்த பொறுப்பாளர்களுக்கு தெரியாது. தமிழ்நாட்டுல எத்தனை மாவட்டங்கள் இருக்கு என்றும், மாவட்ட பெயரும்கூட தெரியாத இப்படிப்பட்டவங்களைப் பொறுப்புல போட்டுருந்தா கட்சி எப்படி வளரும். மாநிலத் தலைவருக்கு முழு அதிகாரம் கொடுத்தாதான் காங்கிரஸில் குழப்பம் இருக்காது.
மாநிலத் தலைவர்தான் இன்னமும் நியமிக்கப்படலையே?...கோஷ்டி பூசல்லேயும் சிக்கி இருக்கே இதுக்கு முடிவே கிடையாதா?
இப்போ எல்லாருக்குமே மாநிலத் தலைவர் ஆசை வந்திடுச்சி. நான்தான் மாநில தலைவர், நான்தான் தலைவருனு சொல்லிட்டு திரியராங்க. ஆனா கட்சியை வளர்க்கணும் என்று ஒரு துளி எண்ணமும் அவங்களுக்கு இல்லை. இதனால், கோஷ்டிப் பூசலும் அதிகமாகிடுச்சி. தமிழ்நாடு காங்கிரஸில் ஒற்றுமை வரணும்னா, தலைவர் ராகுல் காந்தியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் வரணும். அவரே தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளரானால்தான் காங்கிரஸில் ஒற்றுமை வரும். கோஷ்டிப் பூசலும் ஒழியும். முழு அதிகாரத்தை ராகுலே வைத்துக் கொண்டு ஒரு குழு அமைத்து நிர்வகிக்கலாம்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு என்ன காரணம்?

கடந்த தேர்தல்ல ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் யாரையும் சரியாக வழி நடத்தவில்லை. யாரையும் தேர்தல் வேலையில் அதிகமா ஈடுபடுத்தினதாகவும் தெரியவில்லை. அவரே சத்தியமூர்த்தி பவன்ல இருந்துக்கிட்டு பேட்டி மட்டும்தான் கொடுத்துட்டு இருந்தாரு. சரியான திட்டமிடலும், பிரசாரமும் இல்ல. அதனால், தான் கடந்த தேர்தலில் காங்கிரஸிற்கு மிகப் பெரிய பின்னடைவு. ஆனால், காங்கிரஸிற்கு மிகப் பெரிய ஓட்டு வங்கி இன்னும் தமிழ்நாட்டுல இருக்கு. வரும் உள்ளாட்சி தேர்தல், ராகுல் தலையிட்டு திட்டமிட்டால் சரித்திர சாதனையை காங்கிரஸ் நிகழ்த்தும்.
காங்கிரஸை நம்பி எட்டு தொகுதியை மக்கள் கொடுத்திருக்காங்களே அவங்க நிலைமை?
கடந்த தேர்தல்ல திட்டமிட்டு வேலை செய்திருந்தா 41 தொகுதியிலும் காங்கிரஸ் வென்றிருக்கும். எந்த தலைவரும் ஒற்றுமையா வேலை பார்க்கவில்லை. இளங்கோவன் தமிழகம் முழுவதும் அனைத்து தலைவர்களுக்கும் பொறுப்பு கொடுத்து தேர்தலை சந்திச்சிருக்கலாம். வெறும் குஷ்புவை வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது. குஷ்புவை கிராமப்புறங்களில் யாருனே தெரியாது. சினிமா நடிகை என்றாலும் பேப்பர் படிக்கிறவங்களுக்கும், டி.வி.பாக்கிறவங்களுக்கும் தான் குஷ்புவை தெரியும். அடித்தட்டு மக்களிடம் காங்கிரஸை யார் கொண்டு செல்வது? எளிமையான எங்கள் தலைவர் ராகுலால் மட்டுமே தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் சுற்றுப்பயணம் செய்து அடித்தட்டு மக்களை அரவணைத்து, காங்கிரஸை கொண்டு செல்ல முடியும்.
2006 தேர்தல்ல காங்கிரஸ் இல்லன்னா திமுக ஆட்சியே பிடிச்சிருக்க முடியாது. அப்போதே, 5 அமைச்சர் பதவியை வாங்கியிருக்கலாம். கலைஞரே கொடுக்கத் தயாராக இருந்தாரு, ஆனா ஜி.கே. வாசன்தான் அதை தடுத்து விட்டார். வேற யாரும் அமைச்சரானால் தனக்கு மரியாதை இருக்காது என நினைத்து விட்டாரோ என்னவோ. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பிறகும், அதைப் பயன்படுத்த இங்குள்ள தலைவர்கள் விரும்பவில்லை. சட்டசபையிலே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்து ஆளும் கட்சியோடு அனுசரித்து போனாலே தொகுதிக்கு தேவையான திட்டங்கள் உடனடியாக நிறைவேறும். கடந்த முறை விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியை அனுசரிக்கவில்லை. அவரால், ஏதும் பண்ண முடியவும் இல்லை. அதனால், தொகுதி மக்களைக் கருத்தில் வைத்து  ஆளும் கட்சியை அனுசரிக்கலாம்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எப்படி போட்டியிடணும் என்று நினைக்கிறீங்க?
திமுக கூட்டணியிலேயே  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சினு பாதிக்குப் பாதி போட்டியிடணும். அப்படி போட்டியிடும் போது மிகப் பெரிய வெற்றி வாய்ப்பு கிடைக்கும். யாருக்குக் கொடுத்தால் ஜெயிக்குமோ, அவருக்கு சீட் கொடுக்கணும். இதுல தலைவர்கள் கோஷ்டினு நுழைக்கக் கூடாது.
இளங்கோவன் ராஜினாமா செய்த பின், புதிய தலைவரை நியமிக்க தாமதம் ஏன்?
கோஷ்டிப் பூசல் தான் தாமதத்திற்கு காரணம். மாநிலத் தலைவர் பதவியை உத்தேசமா 50 பேர் வரை கேட்டுட்டு இருப்பாங்க. அதுல யாருக்கு கொடுக்கணும், என்றே அகில இந்திய தலைமைக்கு பெரிய குழப்பமா இருக்கும். அதுவும் இல்லாமல் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி புகாரை சொல்லிட்டு இருக்காங்க. 50 வருஷமா காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கலை. இப்போ, புதுசா தலைவரை போட்ட உடனேயும் ஆட்சியை பிடிக்கப் போறதும் இல்லை. ராகுல் தன் பொறுப்பில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியை வச்சிருக்கணும். அப்படி என்றால் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தல்ல காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். திராவிட கட்சிகளுக்கு மாற்றே காங்கிரஸ்தான். ராகுல் காந்தி தமிழகத்தில் பொறுப்பெடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் திட்டமும் எனக்கு இருக்கு.
இனி த.மா.கா.வின் நிலை என்ன?
இதுக்கு முன்னவும் பலர் காங்கிரஸில் இருந்து பிரிந்து  போய் பல பேர்ல கட்சி வச்சிருந்தாங்க. அவங்க எல்லாம் இப்போ யாருனே மக்களுக்கு தெரியாது. அது போலத்தான் நாளைக்கு வாசன் நிலைமையும். அவர் கிட்ட முக்கியமான தலைவர்கள் யாரும் இல்ல. பாதி பேரு திமுகவுக்கு போயிட்டாங்க. மீதி பேரு அதிமுகவுக்கு போயிட்டாங்க.
இப்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி எப்படி இருக்கிறது?, சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா அடித்தார் என சொல்லி இருக்கிறாரே?
தமிழகத்தில் ஆட்சி, சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு. வட மாநிலங்களை ஒப்பிடும் போது சிறப்பாக இருக்கிறது. சசிகலா புஷ்பாவை முதல்வர் ஜெயலலிதா அடித்திருக்க மாட்டார். அதற்கு வாய்ப்பே இல்லை.  ஜெயலலிதாவின் அனுபவத்திற்கும், முதிர்ச்சிக்கும் தரம் தாழ்ந்து ஒரு எம்.பியை அடிச்சிருக்க மாட்டார். அந்த எம்.பி.பதவி ஜெயலலிதா கொடுத்ததுதானே.
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. அவர்களிடம் பேசி தமிழகத்திற்கான நதிதீர் பிரச்னையை தீர்க்க தமிழ்நாடு  காங்கிரஸ் முயற்சிக்கலாமே?
அப்படி ஒரு எண்ணம் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குக் கிடையாது. எண்ணம் இருந்தால்தானே முயற்சிப்பாங்க.
- த.ராம்
படங்கள்: ரா.ராம்குமார் விகடன்.காம்

கருத்துகள் இல்லை: