பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்
நடத்தப்படுவதை கண்டித்து, ஜெயலிலதா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் திட்டமிட்டுள்ளனர்.
18 வருடங்கள் நீண்ட இழுத்தடிப்புடன் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும்
குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இந்த தீர்ப்பை
வழங்கினார்.
ஆனால் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்த
தொடங்கியுள்ளனர். தினம் ஒரு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது
நீதிமன்றம் தவறு, தாங்கள்தான் சரி என்பது இந்த போராட்டத்தின் உட்கருத்து.
மூத்த வக்கீலான ஆச்சாரியா இந்த போராட்டங்கள் குறித்து கருத்து கூறியபோது,
தீர்ப்பு சாதகமாக வந்தால் வரவேற்கவும் கூடாது, எதிராக வந்தால் போராடவும்
கூடாது. இதுதான் நீதிமன்ற நடைமுறை என்று கூறியிருந்தார். ஆயினும்
தமிழகத்தில் ஏனோ போராட்டங்கள் நடந்து வருகின்றன. அகில இந்தியாவும்,
தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை எள்ளி நகையாடி வருகிறது.
இந்நிலையில், அடுத்தகட்டமாக தீர்ப்பு கூறிய நீதிபதியையே விமர்சனம் செய்து
அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். வார்த்தைகளால் விவரிக்க
முடியாத வகையில், குன்ஹா விமர்சனம் செய்யப்படுகிறார். அவரை கன்னடர் என்று
ஒரு குரூப்பும், அவரை கிறிஸ்தவர் என்று மற்றொரு குரூப்பும் சேற்றை வாரி
இறைத்து வருகிறது.
இந்த போராட்டங்களை மீடியாக்களின் புண்ணியத்தால் கர்நாடக பார் கவுன்சிலும்
கவனித்துக்கொண்டுதான் உள்ளது. இந்நிலையில்தான், பொறுமை இழந்துபோன கர்நாடக
வக்கீல்கள் சிலர், இப்போராட்டங்கள் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடர முடிவு செய்துள்ளனர். மூத்த வக்கீல் தர்மபால் தலைமையிலான வக்கீல்கள்
குழு கர்நாடக ஹைகோர்ட்டில், இதுகுறித்து மனு தாக்கல் செய்ய முடிவு
செய்துள்ளது.
அதிமுகவினர் போராட்டங்கள் குறித்து சிறையில் இருந்தபடி, தினமும் 3 ஆங்கில
பத்திரிகை, 2 தமிழ் பத்திரிகைகளை படிக்கும் ஜெயலலிதாவுக்கு
தெரிந்திருக்கும். ஆயினும் அவர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று இதுவரை
கூறவில்லை. எனவே ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடர வக்கீல் குழு முடிவு செய்துள்ளது.
இருப்பினும் இந்த வழக்கில் மூலம், தமிழகத்தில் இருப்பதால், கர்நாடக
ஹைகோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியுமா என்ற சந்தேகத்தை
நிவர்த்தி செய்ய கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமாரிடம், தர்மபால்
தலைமையிலான வக்கீல்கள் குழு கருத்து கேட்டுள்ளது. இதை அட்வகேட் ஜெனரல்
பரிசீலனை செய்து வருகிறார். அவரது பதிலை பொறுத்து, வக்கீல்கள் குழு,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
/tamil.oneindia.in/
/tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக