ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தி.மு.க. ஊழல்! அ.இ.அ.தி.மு.க. ஊழல் ! அக்மார்க் உத்தம பாஜகவின் தமிழக அரசியல் கனவு !


தி.மு.க. ஊழல், அ.இ.அ.தி.மு.க. ஊழல் என்று பிரச்சாரம் செய்து
நாங்கள்தான் உத்தமபுத்திரர்கள் என்று கூறி உள்ளே நுழையத் துடிக்கும் பிஜேபி!
நாகப்பட்டணம் அக்.4- தி.மு.க.வையும், அ.இ.அ.தி.மு.க.வையும் ஊழல் கட்சிகள் என்று கூறி, நாங்கள்தான் உத்தமப்புத்திரர்கள் என்று மக்களை நம்ப வைத்து, அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் பிஜேபியின் தந்திரம் - திட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேற்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் எச்சரித்தார்.
நாகப்பட்டினம் அபிராமி திடலில் நேற்று (3.10.2014) மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது:
இப்போது ஒரு பெரிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக இதுவரையில் அகில இந்திய கட்சிகள் தேசியம் பேசக்கூடியவர்கள் யாரும் பதவிக்கு வர முடியவில்லை. எப்படியாவது ஆட்சியில் இருப்பவர்களைக் கீழே தள்ள வேண்டும்; அதுதான் மிக முக்கியம். அதை எதைச் செய் தாவது தள்ளவேண்டும் அதுதான் மிக முக்கியம். எதை எதையோ சொல்லிப் பார்த்தார்கள், அவர்களால் அது முடியவில்லை. இது பெரியார் பூமி எந்தகாலத்திலும் மதவாதிகள் இங்கு காலூன்ற முடியாது !
நீங்கள் தள்ளுவதற்கு உரிமை உண்டு என்கிற காரணத்தினாலேதான், சொல்லுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு!
இப்பொழுது கடைசியாக, யாரும் சுலபமாக ஏமாறக் கூடிய ஒரு செய்தி. அது என்னவென்று சொன்னால், ஊழல்! அதுதான் மிக முக்கியம். ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொன்னவுடன், நம்மாள்களும் ஆமாங்க, ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஊழல்களை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல;  ஊழலை ஒழிக்கவேண்டும்; ஊழல் இருக்கக்கூடாது; நேர்மையான ஆட்சி நடக்கவேண்டும். ஆனால், நண்பர்களே, நடுநிலையில் இருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்தக் கருத்துகளை ஏற்கவேண்டும் என்பது அவசியமில்லை. தள்ளலாம், கொள்ளலாம். ஆனால், நீங்கள் தள்ளுவதற்கு உரிமை உண்டு என்கிற காரணத்தினாலே தான், சொல்லு வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்கிற உணர்வோடு உங்கள் முன்னாலே இதனை நான் வைக்க விரும்புகிறேன்.
எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடிய தகுதி எங்கள் ஒருவருக்குத்தான் உண்டு
அரசியலில் இந்தக் கட்சி ஊழல் செய்தது; அந்தக் கட்சி ஊழலில் மாட்டிக் கொண்டது; அடுத்த கட்சி ஊழலில் சிக்கப் போகிறது. ஆகவே, இந்த இரண்டு கட்சியையும் ஒழித்துவிட்டு  நாங்கள் தான் ஊழலற்ற உத்தமப் புத்திரர்கள் என்று கூறி, பிரச்சாரம் செய்து நாம் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.  அண்ணன் எப்பொழுது சாவான்; திண்ணை எப்பொழுது காலியாகும் என்று நினைக் கிறார்கள்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடிய தகுதி எங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. இதனைப் பெருமையாகச் சொல்லவில்லை, வேதனையோடு சொல்கிறோம்.
மற்றவர்கள் எல்லாம் இந்த வேலைக்கு வரவில்லை. எல்லோருக்கும் அரசியல் பார்வை; எல்லோருக்கும் தேர்தல் கண்ணோட்டம்! எங்களுக்கு அடுத்த தேர்தல் கண்ணோட்டம் அல்ல நண்பர்களே, எங்களுக்கு அடுத்த தலைமுறை கண்ணோட்டம்; மானமுள்ள தலைமுறை; உரிமையுள்ள தலைமுறை; அந்தத் தெளிவான தலைமுறை; பகுத்தறிவு உள்ள ஒரு தலைமுறை; அந்தத் தலைமுறை வரவேண்டும் என்கிற உணர்வோடு சொல்கிறோம்.
இந்தக் கட்சி ஊழல் செய்தது என்று இவரை ஒழித்துவிடுவோம்; அந்தக் கட்சி ஊழல் செய்தது என்று அவரை ஒழித்துவிடுவோம். பிறகு நாம் வந்துவிடலாம் என்று வந்து உட்கார்ந்தால், அப்புறம் ரகுபதி ராகவ ராஜாராம், பஜீத பாவன சீதாராம்! என்பதிலே ரொம்பத் தெளிவாக இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும்.
சமஸ்கிருத வாரம் என்ன - சமஸ்கிருதமே நாட்டின் மொழியாக வரக்கூடிய அளவிற்கு வாய்ப்பை ஏற்படுத்தத் திட்டம் தீட்டுகின்றனர். இந்தி மொழியா - உடனே கதவை அகலமாகத் திறந்துவிடத் திட்டம்! நாங்கள் தாய்க்கழகம் மட்டுமல்ல, பொதுநிலையில் இருக்கின்றவர்கள்
இன்றைக்கு உருவாகி இருக்கிற சூழலைப் பயன் படுத்துகிறார்கள். எல்லா ஊழல்களும் ஒரே மாதிரியா? நிச்சயம் கிடையாது. ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு வரவேண்டிய நிலை வேறு!
இரண்டு சாராரும் கவனிக்கவேண்டும்; இரண்டு கட்சி நண்பர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் தாய்க்கழகம் மட்டுமல்ல, பொதுநிலையில் இருக்கின்ற வர்கள் என்கிற உரிமையை எடுத்துக்கொண்டு,  இந்தக் கசப்பான, வேதனையான உண்மையை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம். நடக்காததை, நடந்த மாதிரி பிரச்சாரம் செய்தார்கள் என்றால், அதையும் நம்மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
யாராவது பதில் சொல்லட்டும் இந்தக் கேள்விக்கு!
இன்றைய ஜனநாயகத்தில் இன்றைய தேர்தல் முறை இருக்கின்ற வரையில், இந்த ஊழலை எப்பேர்ப்பட்டவர் களாலும் ஒழிக்க முடியுமா? என்றால், முடியாது!
என்ன காரணம் என்று சொன்னால், தெளிவாக வேட்பாளர்கள், அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, அவருக்கு 75 லட்சம் ரூபாய் என்று ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள் என்றால், முன்பைவிட செலவு குறைவாக அல்லவா இருக்கவேண்டும்; ஒழுக்க மான அரசியல்வாதியாக இருந்தால்; ஜனநாயகம் திருந்தி இருக்கிறது என்றால், முன்பு எவ்வளவு உச்சவரம்பு வைத்தார்களோ, அதைவிட குறைவாக வைக்கலாமே! முன்பைவிட அதிகமான ரூபாயை வரையறையாக வைத்தால், அதற்கு என்ன காரணம்?
சரி, அந்த வரையறைக்குள்தான் வேட்பாளர்கள் கணக்குக் கொடுக்கிறார்கள் என்று யாராவது சொல்லட்டும்! உண்மையை மறைக்காமல், அவர்களுடைய நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும். நான் கையெழுத்துப் போட்டேன் பாருங்கள், அந்த வரையறைக்குள்தான் செலவு செய்திருக்கிறேன்; அதற்குமேல் செலவே செய்யவில்லை என்று சொல்லட்டுமே!


நான் சுயமரியாதைக்காரன்,  ஒரு சமுதாய விஞ்ஞானி!
அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, இது ஒரு பொது உண்மை. ஒரு விஞ்ஞானியினுடைய பார்வை; நான் சுயமரியாதைக்காரன், ஒரு சமுதாய விஞ்ஞானி. எனவே, அந்தப் பார்வையில் பார்த்து உங்களிடம் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். கேளுங்கள், சிந்தி யுங்கள்!  முடிவுக்கு வாருங்கள் என்றுகூட சொல்ல மாட்டோம்.
சாதாரண பஞ்சாயத்து உறுப்பினரிலிருந்து, நாடாளு மன்ற உறுப்பினர் வரையில் லட்சக்கணக்கான ரூபாயி லிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப் படுகின்றன.
பிறகு என்ன ஊழலைப்பற்றி பேசுவதற்கு யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? எல்லாவற்றையும்விட, ஆமாங்க, இதெல்லாம் ஊழல்தானுங்க என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக் கிறோம்? ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய், 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று சொல்வது இன்றைக்கு வெளிப்படை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதா, இல்லையா?
ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்வது- யாரை ஏமாற்ற?
எனவே, இவ்வளவும் கணக்கில் வருகிறதா, நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
வாக்கை விற்கக்கூடிய வாக்காளர்கள்; பொய் சொல்லி செலவை அதிகமாகச் செய்யக்கூடிய வேட்பாளர்கள்; இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு ஜனநாயகம், அதுமட்டுமல்ல, கட்சிக்கு தாராளமாக பணம் கொடுக்கலாம். அது கணக்குக் காட்டவேண்டிய அவசியமில்லை. அதை எந்த அரசியல் கட்சியும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். தகவல் அரசியல் சட்டத்தில்கூட, அந்தத் தகவல்களையெல்லாம் கேட்கக்கூடாது.
இவ்வளவையும் வைத்துக்கொண்டு, அப்புறம் என்ன ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்வது - யாரை ஏமாற்ற? முதலில் இந்த நடைமுறை மாறினால்தானே, ஊழலை ஒழிக்க முடியும்.
இவர் ஊழல் செய்தார் என்று, இவரை ஒழி! அடுத்து அவர் ஊழல் செய்தார் என்று அவரை ஒழிங்க! அடுத்தது நாங்க! இந்தியைக் கொண்டு வருவதற்கு, சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கு, தேசியம் பேசிக்கொண்டு மிகவும் சவுகரியமாக வருவோம் என்று சொல்லி இந்த நாட்டில் சுப்பிரமணிய சாமிகள் புறப்பட்டுள்ளனர். ஆரியம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டினுடைய வரலாற்றையே மாற்றிக் காட்டவேண்டும் என்பதற்குத் தயாராகிறார்கள்.
இப்பொழுது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் அடுத்ததாக வந்துவிடுவோம். மக்கள் எல்லோரும் எங்கள் பக்கம் திரும்பி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
அவர் வந்து இவரை நீக்கிவிடுவார்; அவருக்கு மிகவும் சந்தோஷம். அடுத்தது இவருடைய முறை. அதுதான் மிக முக்கியம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன மாறுதல் வந்தது?
அடுத்தது என்னாகும்? இந்த சிந்தனையை நாம் நன்றாக நினைத்து, நாங்கள் ஒருபோதும் மீண்டும் சுக்ரீவர் களாகவோ, வாலிகளாகவோ மாறுவதற்குத் தயாராக இல்லை. மாறாக, இரண்டு பேருமே உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் வரும்.
இன்றைக்கு அரசாங்கம் மாறியது; மோடி அரசாங்கம் வந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன மாறுதல் வந்தது? காங்கிரசு அரசாங்கத்திலிருந்து என்ன மாறுதல்? இங்கே நாகை மீனவர்கள் எப்பொழுது பார்த்தாலும் போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். மீனவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல் கிறார்கள். அதேநேரத்தில், மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன தேவை? படகுகள் இல்லாமல் அவர்கள் எப்படி தங்களுடைய தொழிலை செய்ய முடியும்? படகுகளை கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்; நாள்தோறும் ஒரு நாடகம் நடைபெறுகிறது.
மீனவர்களுக்கு வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கவேண்டுமா? முன்பு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு காணவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டாகிவிட்டது. சரி, இப்பொழுது வந்திருக்கின்ற அரசாங்கம், ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறதா இல்லையா? இதில் முன்பு இருந்த அரசாங்கத்தைவிட ஒருபடி மேலே போயிருக்கிறார்களா, இல்லையா?
அறிவு வயப்பட்டு சிந்திக்கவேண்டிய மிக ஆழமான ஒரு செய்தி!
ஈழப் பிரச்சினை, வெளிநாட்டு உறவுப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை; மொழியில் இரு மொழிக் கொள்கை; அண்ணா உருவாக்கினாரே, அந்த இருமொழிக் கொள்கை, இந்த  கொள்கையுடைய அரசு இருக்கின்ற வரையில்தானே இருக்கும். அவர்கள் வந்துவிட்டால் என்னாகும்? சமஸ் கிருதம் மேலே வந்து உட்கார்ந்துவிடுமே! வணக்கம் சொன் னால், அபராதம் போடுவார்கள். நமஸ்காரம் என்றுதானே சொல்லவேண்டும் என்பார்கள்.
இப்பொழுதே, காலில் விழுகின்ற கலாச்சாரம் வட நாட்டில் இருந்து வந்து விட்டதே! கயிறு கட்டுகின்ற கலாச்சாரம் வந்துவிட்டதே!
ஆகவே, நண்பர்களே! இது ஒரு தொலைநோக்கோடு பார்க்கவேண்டிய பிரச்சினை. இதை உடனடியாகப் பார்த்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியாது. உணர்ச்சி வயப்பட்டு சிந்தித்தாலும் தெரியாது. இது அறிவு வயப்பட்டு சிந்திக்கவேண்டிய மிக ஆழமான ஒரு செய்தி.
வடபுலத்தில் இருந்து நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்; குரங்கு அப்பத்தைப் பங்கிட்டதுபோல, மூன்றாவது ஆள் மத்தியஸ்தம் செய்து, அது எனக்கே சொந்தம் என்று சொல்வார்.
அய்யங்கார் வழக்குரைஞர் வேடிக்கையாக ஒருமுறை சொன்னார் என்ற கதையுண்டு.
அண்ணன் - தம்பி இரண்டு பேருக்கும் சொத்தைப் பிரிக்கின்ற வழக்கில், வழக்குரைஞரிடம் இந்த சொத்து எனக்கு வருமா? என் அண்ணனுக்கு வருமா? என்று  தம்பி கேட்டார்.
உடனே அந்த கெட்டிக்கார வழக்குரைஞர் சொன்னார்; உங்க இரண்டு பேருக்குமே வராது; எனக்குத்தான் வரும். இரண்டு பேரும் சண்டை போட்டு என்னிடம்தான் வருவீங்க! முழுச் சொத்தும் என்னைப் போன்ற வழக்குரைஞர்களிடம்தான் வரும் என்று சொன்னார்.
இது வேடிக்கையான கதையல்ல.
ஊழல் யார் செய்தாலும், தண்டனை என்றால், அவர்கள் தண்டனையை பெற்றுத் தீரவேண்டும்!
இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கக்கூடிய சூழல் என்னவென்று சொன்னால், இன்றைக்குத் தமிழ்நாட்டின் நிலை இதுதான். இதனை உங்களுக்குத் தெளிவாக நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
திராவிடர் கழகத்தினுடைய கண்ணோட்டத்தில் இவரை எதிர்க்கிறோம், அவரை ஆதரிக்கிறோம் என்ப தல்ல, ஊழலை நியாயப்படுத்துகிறோம் என்பதல்ல. ஊழல் யார் செய்தாலும், தண்டனை என்றால், அவர்கள் தண்டனையை பெற்றுத் தீரவேண்டும்.  மனமாற்ம் அடைய வேண்டும் திருந்த வேண்டும்; குற்றம் செய்யவில்லை யென்றால் அதற்குரிய வழிமுறை என்னவோ, அந்த வழிமுறையில்தான் செல்லவேண்டும், அதுதான் மிக முக்கியம்.
சட்டப்படி அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளைக் கையாளவேண்டுமே தவிர, பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்துக்கோ, பொது அமைதிக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இதைச் சொல்வதற்கு எங்களுக்கு முழு உரிமையும், கடமையும் இருக்கிறது.
நாளைக்குத் தலைகுப்புற கவிழ்ந்துவிடக்கூடாது
ஆகவேதான் இதனைத் தெளிவாகச் சொல்கிறோம்.
பெரியாருடைய காலத்திலேயே அய்யா அவர்கள் சுட்டிக்காட்டினார். நாங்கள் பெரியார் இல்லை. பெரியாரின் தொண்டர்கள். ஆகவே, பெரியார் தந்த புத்தி எங்களுக்கு இருக்கிறது. ஆகவே, அதை வைத்து சமுதாயத்திற்கு, இன்றைய காலகட்டத்திலே, தயவுசெய்து வெறும் அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள். லட்சியப் பார்வையோடு, கொள்கை பார்வையோடு, சமுதாயம் இன்றைக்குப் பெற்றிருக்கின்ற எழுச்சியெல்லாம் நாளைக்குத் தலைகுப்புற கவிழ்ந்துவிடக்கூடாது என்பதை எண்ணிப் பாருங்கள்.
இன்றைக்கு அதிகாரமெல்லாம் டில்லியில் குவித்து வைத்துக்கொண்டு, ஒரு ஆட்சி அங்கே மிகப்பெரிய அளவிற்கு வந்துவிட்டது என்று சொல்கின்ற நேரத்தில், இங்கு நமக்கு இதுவரையில் இருந்த வாய்ப்பு களையெல்லாம் அடியோடு மாற்றுவதற்கு, இதுதான் சரியான நேரம் என்று சொல்லி, திட்டமிடுகிறார்கள்.
கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று நினைக்கிறார்கள்
நான் சென்னையில்கூட உரையாற்றும்பொழுது சொன்னேன், ஒரு பாட்டு உண்டு; கடல் வற்றி கருவாடு தின்ன ஆசைப்பட்ட கொக்கு,
குடல் வற்றி செத்ததாம்
என்று ஒரு பழமொழி உண்டு.
அதுபோல், வடக்கே இருந்து வருகிறவர்கள் எல்லாம், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அதற்கு ஏமாறமாட்டார்கள்.
நீங்கள் அந்த ஆசையிலேயே குடல் வற்றி சாகவேண்டியதுதான்;  சாக வேண்டும் என்று ஆளை சொல்லவில்லை. இந்த முயற்சிகள் வெற்றி பெறாது என்று சொல்கிறோம். கறுப்புச் சட்டைக்காரன்; காவலுக்குக் கெட்டிக்காரன். அந்த உணர்வோடுதான் இதைச் சொல்லுகிறோம்.
நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் கைதட்டுகிறீர்களா? கல் எடுத்துப் போடுகிறீர்களா? என்பதைப்பற்றி எங் களுக்குக் கவலையில்லை. ஆனால், இன்றைக்கு நாங்கள் சொல்வது, நாளைக்கு நடைபெறும் என்று சொல்லகூடிய அளவிற்கு, தொலை நோக்கோடு, கவலையோடு சொல்கிறோம். மகிழ்ச்சியோடு அல்ல. அல்லது ஒரு சார்பு நிலை என்று எடுத்துக்கொண்டு சொல்லவில்லை.
அறிவுப் புரட்சியினால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம்!
இதனை நன்றாகப் புரிந்துகொண்டு, நம்முடைய சகோதரர்கள், நம்முடைய தோழர்கள் சிந்திக்கவேண்டும்.
வெறும் உணர்ச்சியைக் கொட்ட வேண்டிய நேரமல்ல; அறிவைப் பயன்படுத்தவேண்டியது மிக முக்கியம். பெரியார் இந்த இயக்கத்தை வெற்றி பெற வைத்ததே, ஆயுதம் தூக்கியல்ல; ஆயுதத்தைத் தூக்கு என்று சொல்லி யிருந்தால், இது எப்பொழுதோ தோற்றுப் போயிருக்கும். மாறாக, அறிவாயுதத்தைத் தூக்கு என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்; அதன் காரண மாகத்தான் இன்றைக்கும் இங்கே அமைதி நிலவுகிறது; அறிவுப் புரட்சியினால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொல்லி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வணக்கம்!

w.viduthalai.in/

கருத்துகள் இல்லை: