சனி, 11 அக்டோபர், 2014

ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை ! சசிகலாமூலமே அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் பரிமாற்றம் !

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இதுவரை யாரையுமே சந்தித்து பேசவில்லை. முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள், மூத்த தலைவர்கள் என பலர் முயற்சி செய்தும், எந்த அ.தி.மு.க. பிரமுகருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் சந்திக்கவில்லை. அது போல அரசு அதிகாரிகளும் முயற்சி செய்து இந்த விஷயத்தில் ஏமாற்றமே அடைந்தனர்.
ஜெயிலில் அவர் அதிகம் பேசுவது சசிகலாவிடம் மட்டுமே இது தவிர தன்னை தினமும் பரிசோதிக்கும் டாக்டர்கள் குழுவினரிடமும், பாதுகாப்பு அதிகாரிகளிடமும் அவர் பேசுகிறார். மற்றபடி யாரிடமும் ஜெயலலிதா பேசுவதில்லை.
சிறை அறையில் பெரும்பாலும் அவர் ஆங்கிலப் புத்தகங்களை படிக்கிறார். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சசிகலாவிடம் பேசுகிறார்.
ஜெயலலிதா யாரையும் சந்திக்க மறுப்பதால், ஜெயலலிதாவை பார்க்க வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் சசிகலாவே சந்திக்கிறார். கட்சிக்காரர்கள் சொல்லும் தகவல்களை கேட்டு, ஜெயலலிதாவிடம் அவர் தெரிவிக்கிறார்.

இதையடுத்து ஜெயலலிதா தெரிவிக்கும் கருத்துகள், உத்தரவுகளை, சசிகலா தன்னை சந்திக்க வரும் அ.தி.மு.க.வினரிடம் தெரிவிக்கிறார். ஜெயலலிதாவின் உத்தரவுகள் இப்படித்தான் அ.தி.மு.க.வினரை எட்டுவதாக கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு ஜெயலலிதாவுக்கும், கட்சியினருக்கும் சசிகலா மட்டுமே ஒரு உறவுப்பாலமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சசிகலாவே நிர்வகித்து வந்தார். இதனாலே அவரை அனைவரும் சின்னம்மா என்றழைப்பதுண்டு. தற்போது அந்த நிர்வாகப்பணி பரப்பன அக்ரஹாரா ஜெயிலிலும் தொடர்கிறது.
சமீபத்தில் கர்நாடகா ஐகோர்ட்டு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்த பிறகு அ.தி.மு.க. வக்கீல்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச ஜெயிலுக்கு சென்றனர். அப்போது கூட அவர்களை சசிகலாவே சந்தித்து சில உத்தரவுகளை பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. நிர்வாகப் பணிகளை சசிகலா மூலம் உத்தரவிட்டு செயல்படுத்தும் ஜெயலலிதாவுக்கு, இளவரசியும் உதவியாக இருப்பதாக தெரிகிறது. இளவரசியின் மகன் விவேக், மருமகன்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் சிறையில் ஜெயலலிதாவுக்கு தேவையானவைகளை செய்து கொடுப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில் ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் போயஸ் கார்டன் வீட்டை இளவரசியின் 2 மகள்கள் கவனித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு சசிகலா, இளவரசியின் உறவினர்கள் பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: