ரவி கே. சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘யான்’ திரைப்படம்,
மும்பை தெருக்களில் பட்டப்பகலில் ஒரு பயங்கரவாதி துரத்தித் துரத்திச்
சுட்டுக் கொல்லப்படும் காட்சியிலிருந்து தொடங்குகிறது.
இந்தக் காட்சிகளைக் காவல்துறையின் கண்ணோட்டத்திலிருந்து ஒரு விதமாகவும்
இடையில் மாட்டிக்கொண்ட ஒரு இளைஞன், யுவதியின் கண்ணோட்டத்தில் வேறு
விதமாகவும் காட்சிப்படுத்திய விதம் அருமை. இயக்குநர், ஒளிப்பதிவாளர் (மனுஷ்
நந்தன்), எடிட்டர் (ஸ்ரீகர் பிரசாத்) ஆகிய மூவரும் பாராட்டப்பட வேண்டிய
காட்சி இது. துரதிருஷ்டவசமாக இப்படி மூவரையும் பாராட்டுவதற்கான காட்சி
படத்தில் திரும்ப வரவேயில்லை.
துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஸ்ரீலாவை (துளசி நாயர்) காப்பாற்றும்
சந்துருவுக்கு (ஜீவா) அவள் மீது காதல் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
வழக்கம்போல நண்பர்களின் மேதைமை வாய்ந்த யோசனைகளால் காதல் வளர்கிறது. பாட்டியிடம் செல்லமாக வளர்ந்து பொறுப்பில்லாமல் இருக்கும் சந்துருவை முன்னாள் ராணுவ வீரருக்கு (ஸ்ரீலாவின் தந்தையாக வரும் நாசர்) எப்படிப் பிடிக்கும்? வேலையோடு வருகிறேன் என்று சூளுரைத்துவிட்டுச் செல்லும் எம்.பி.ஏ. பட்டதாரிக்கு மும்பையில் வேலையே கிடைக்காமல் ஒரு ஏஜெண்ட் மூலம் பஸிலிஸ்தானில் வேலை கிடைக்கிறது.
வழக்கம்போல நண்பர்களின் மேதைமை வாய்ந்த யோசனைகளால் காதல் வளர்கிறது. பாட்டியிடம் செல்லமாக வளர்ந்து பொறுப்பில்லாமல் இருக்கும் சந்துருவை முன்னாள் ராணுவ வீரருக்கு (ஸ்ரீலாவின் தந்தையாக வரும் நாசர்) எப்படிப் பிடிக்கும்? வேலையோடு வருகிறேன் என்று சூளுரைத்துவிட்டுச் செல்லும் எம்.பி.ஏ. பட்டதாரிக்கு மும்பையில் வேலையே கிடைக்காமல் ஒரு ஏஜெண்ட் மூலம் பஸிலிஸ்தானில் வேலை கிடைக்கிறது.
தான் போதைக் கடத்தல் வலையில் சிக்கவைக்கப்பட்டிருப்பது அங்கே போய்
இறங்கும்போதுதான் தெரிகிறது. காதலனைக் காப்பாற்றக் காதலி புறப்பட, முதல்
காட்சியில் செத்துப்போன பயங்கரவாதி திரும்பிவர, நாயகன் எப்படித்
தப்பிக்கிறான் என்பதை இரண்டரை மணிநேரத்துக்கு மேல் இழுத்துச் சொல்கிறார்
ரவி.
எல்லாப் படங்களையும்போலவே இதிலும் இடைவேளையின்போது ‘திடுக்கிடும்’
திருப்பம் வருகிறது. அந்தத் திருப்பம் வரும்வரை சொல்வதற்கு இயக்குநருக்கு
அதிகம் இல்லை, ஒரு காதல், அதற்கு வரும் இடைஞ்சல் ஆகியவற்றை வைத்து
நேரத்தைக் கடத்துகிறார். சில காட்சிகள் இளமைத் துள்ளலுடன் இருந்தாலும் பல
காட்சிகள் அபத்தக் களஞ்சியம். இவ்வளவு பலவீனமான முதல் பாதி திரைக்கதையை
எப்படி யோசித்தார்கள் என்றே தெரியவில்லை.
இடைவேளைக்குப் பிறகு அந்நிய நாடு, போதைப் பொருள் கடத்தல், நாயகனுக்கு மரண
தண்டனை, நாயகனைக் காப்பாற்ற நாயகியின் முயற்சி என்று படம் வேகம்
எடுத்தாலும் லாஜிக் என்பது சுத்தமாக இல்லை. எம்.பி.ஏ. படித்த இளைஞன்
அவ்வளவு சுலபமாக வெளிநாட்டு வேலை என்னும் வலையில் விழுந்துவிடுகிறான்.
நான்கைந்து சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வைத்துக்கொண்டு
கதாநாயகி ஒரு தேசத்தின் மனசாட்சியை மூன்றே நாட்களில் அசைத்துவிடுகிறாள்.
கடுமையான சட்ட திட்டங்களும் கண்காணிப்பும் உள்ள ஒரு நாட்டிலிருந்து
சிறைச்சாலையிலிருந்து நாயகன் சர்வ சாதாரணமாகத் தப்பிக்கிறான். முன்பின்
தெரியாத ஊரில் திருவல்லிக்கேணி சந்துகளில் புகுந்து புறப்படுவதைப் போல
வில்லன்களைத் துரத்துகிறான். நகைச்சுவை இல்லாத குறையை இந்தக் காட்சிகள்
போக்குகின்றன.
படம் நீண்டுகொண்டே போகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் நேரத்தில்
பயங்கரவாதியைப் பிடித்துத்தரும் தேசியக் கடமையையும் ஆற்றுகிறான். மரண
தண்டனைக் கைதியான அவன் சிறையிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக உலவுவதோடு,
பொது விழா ஒன்றுக்குப் போய் வில்லனைக் காட்டிக்கொடுக்க லெக்சரும்
அடிக்கிறான். கடைசிக் காட்சியில் விமானத் தாக்குதலிலிருந்தும் தப்பி
வெற்றிக்கொடி நாட்டுகிறான். படம் வெளியானது 2014-ல்தானா என்று நமக்குச்
சந்தேகம் வந்துவிடுகிறது.
இளமைத் துள்ளல், ஆக்ரோஷமான சண்டை இரண்டிலும் ஜீவா நன்றாகத்தான் செய்கிறார்.
ஆனால் பல படங்களில் இந்த ஜீவாவை நாம் பார்த்துவிட்டதால் எதுவும் மனதைக்
கவரவில்லை. அவர் அழும்போது பார்வையாளர்களுக்குச் சிரிப்புதான் வருகிறது.
துளசிக்கு வழக்கமான நாயகி வேடத்தைக் காட்டிலும் சற்றே வலுவான வேடம். பாடல்
காட்சிகளில் தாராளவாதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் துளசி நடிப்பதற்கு
வாய்ப்புக் கிடைக்கும்போது குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாசருக்கு ஸ்டீரியோடைப் கண்டிப்பான அப்பா வேடம். மகளிடம் பேசும் போது
கடுமையிலிருந்து சிரிப்புக்குமாறும் தருணத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.
ஜெயப்பிரகாஷுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. தம்பி ராமையா, கருணாகரன்
ஆகியோர் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் நல்ல விஷயங்களும் உள்ளன. மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு சிறப்பாக
உள்ளது. குறிப்பாகப் பாடல் காட்சிகளிலும் பாலைவனக் காட்சிகளிலும். ஹாரிஸ்
ஜெயராஜின் இசையில் ‘ஆத்தங்கரை’, ‘நெஞ்சே நெஞ்சே’ பாடல்கள் மனதில்
நிற்கின்றன. வசனங்கள் பரவாயில்லை. “டயட்ல இருந்தா மெனு கார்டு கூடவா
பார்க்க கூடாது” என்ற வசனத்துக்கு பயங்கரக் கைத்தட்டல்.
முதல் பாதியில் சுவாரஸ்யமற்ற அபத்தங்கள். மறுபாதியில் நம்பகத் தன்மை அற்ற ஓட்டம். தமிழ்.ஹிந்து.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக