''இதைப் பார்க்க சிவாஜி கணேசன் இல்லை!’
''அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா...''
''ராஜ்பவன் அருகே க்ளிசரின் விற்ற இருவர் கைது!''
''ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் டி.வி உண்டு.''
''அவார்டு கோஸ் டூ..''
''கமலின் உலக நாயகன் பட்டம் பறிக்கப்படுகிறது!''-
கண்ணீர் மல்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்ற
காட்சியைப் பார்த்து சமூக வலைதளங்களில் வந்து விழுந்த கமென்ட்களின்
சாம்பிள் இவை!
சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு மற்றும்
கைதுக்குப் பிறகு கோபம், கொந்தளிப்பு, சோகம், போராட்டம் என அ.தி.மு.க
உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில்
சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வான பிறகு அடுத்த நாள்
பதவியேற்புக்கு நாள் குறித்தார்கள். ஆனாலும் எந்த நேரம் என்பது படுரகசியமாக
இருந்தது. மீடியாவின் வெளிச்சம் படாமல் பூட்டிய அறைக்குள் பதவியேற்பை
நடத்தி முடிக்க முதலில் முடிவெடுத்தார்கள். அதனால்தான் கடைசி நேரம் வரை
சஸ்பென்ஸாக வைத்திருந்தார்கள். பதவியேற்பு நேரம் தெரியாமல்
பத்திரிகையாளர்கள் அல்லாடியபடியே இருந்தனர். சட்டத் துறை செயலாளர்
ஜெயசந்திரன் வழக்கத்துக்கு மாறாக கோட் சூட் காஸ்ட்யூமில் கோட்டையில்
தென்பட்டார். அப்போதே பொறி தட்டிவிட்டது. முக்கிய அதிகாரிகள் சிலர் மதியம்
12 மணிக்கே சத்தமில்லாமல் ராஜ்பவனுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அதன்
பிறகுதான் 1 மணிக்கு பதவியேற்பு விழா என்பது தெரிய வந்தது. அரை மணி நேர
இடைவெளியில் அவசர அவசரமாக மீடியாக்காரர்கள் ராஜ்பவனை நோக்கி படையெடுத்தனர்.
உள்ளே நுழைந்த மீடியாக்களுக்கும் நிறைய கெடுபிடி. பத்திரிகைகளுக்கும்
பாரபட்சம் காட்டினார்கள் செய்தித் துறையினர். ''வார பத்திரிகைகளுக்கு
அனுமதியில்லை'' என்றனர். போராடித்தான் உள்ளே நுழைந்தோம்.
ஒரே ஒரு அமைச்சர் பதவியேற்றாலே அதற்காக அழைப்பிதழ்கள்
அச்சடிப்பார்கள். பதவியேற்பின்போது பின்பற்றப்படும் சம்பிரதாயங்களையும்
பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் குறிப்பிட்டு தனி புத்தகம்
ஒன்றும் வழங்குவார்கள். விழா முடிந்ததும் தேநீர், சிற்றுண்டி விருந்தும்
உண்டு. இப்படி எந்தச் சடங்குகளும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப்
பதவியேற்றபோது நடைபெறவில்லை. பதவியேற்றவர்களின் உறவுகள்கூட ஆப்சென்ட்.
பதவியேற்பு நிகழ்ச்சி, கொண்டாட்டமாகத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக
இருந்தனர்.
ராஜ்பவன் தர்பார் மண்டபத்தில் கவர்னர் ரோசய்யா,
ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் ஆகியோர்
முகப்பில் அமர்ந்திருந்தார்கள். முன்பு ஜெயலலிதாவின் செயலாளர்களாக
இருந்தவர்களும் ஒரு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பதவியேற்பில் பங்கேற்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் பெயர் அறிவிக்கப்பட்டதும் மைக் போடியத்தின் முன்பு வந்து
நின்றார். ''ஓ.பன்னீர்செல்வம் ஆகிய நான்...'' என ரோசய்யா எடுத்துக்
கொடுக்க... பன்னீர்செல்வம் உறுதிமொழியைப் படிக்காமல் சட்டை பாக்கெட்டில்
இருந்து ஜெயலலிதாவின் படத்தை எடுத்து போடியத்தின் மீது வைத்து வணங்கிவிட்டு
உறுதிமொழியை வாசித்தார். அடுத்து, ரகசியகாப்பு பிரமாணத்தை வாசிக்க
முயன்றபோது கண்ணீர்துளிகள் திரண்டன. கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத்
துடைத்தார். பதவியேற்ற பிறகு ரோசய்யாவுடன் கைகுலுக்கினார். அவர் கொடுத்த
பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டு ஸீட்டில் போய் அமர்ந்தார். அவருடைய முதுகு,
ஸீட்டில் சாயவில்லை. அடுத்து ஒவ்வொருவராகப் பதவியேற்றபோதும் கண்ணீரை
கைக்குட்டையால் துடைத்தபடியே இருந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
பதவியேற்ற அமைச்சர்கள் பலரும் கண்ணீரோடுதான்
பதவியேற்றனர். பழனியப்பன், டாக்டர் சுந்தரராஜ், எஸ்.பி.சண்முகநாதன்,
ஆர்.பி.உதயகுமார், ரமணா, எம்.எஸ்.என்.ஆனந்தன், அப்துல் ரகீம் போன்றவர்கள்
அமைதியாக பதவியேற்றனர். பதவியேற்பு வாசகங்கள் அடங்கிய பேப்பரைப்
பார்த்துதான் எல்லோரும் உறுதிமொழி எடுத்தனர். கோகுல இந்திரா மட்டும்
அழுதபடியே அடிக்கடி கேமராக்களை நிமிர்ந்து பார்த்தபடியே பதவியேற்றார்.
கண்ணீரை அடக்க முடியாததால் கோகுல இந்திராவின் மூக்கில் இருந்து நீர்
கொட்ட... மூக்கை உறிஞ்சியபடியே அதை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார்.
பதவியேற்ற பிறகு பலரும் ரோசய்யாவிடம் கைகுலுக்கிவிட்டு போனார்கள். ஆனால்
கோகுல இந்திரா மட்டும் ஓ.பன்னீர்செல்வத்திடமும் கைகுலுக்கினார். ''முக்கூர்
சுப்பிரமணியன் ஆகிய நான்...'' என்று ரோசய்யா ஆரம்பிக்கும் முன்பே
முந்திக்கொண்டு பதவியேற்றார் முக்கூர் சுப்பிரமணியன். பதவியேற்ற
அமைச்சர்களில் அதிகம் கண்ணீர்விட்டதில் முதலிடம் முக்கூர்
சுப்பிரமணியனுக்குதான். பதவியேற்பு வாசகங்களைக்கூட படிக்க முடியாமல்
குலுங்கிக் குலுங்கி அழுதார். உறுதிமொழி பத்திரத்தில் அவர் கையெழுத்துப்
போடும் வரையில் அழுகை ஓயவில்லை. விஜயபாஸ்கரும் ரோசய்யா தொடங்குவதற்கு
முன்பே பதவி பிரமாணத்தை வாசிக்கத் தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தல்
தோல்வியைத் தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட ரமணாவுக்கு கடந்த 6-ம் தேதிதான்
மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அடுத்து 25-வது நாளில் மீண்டும் பதவி
பிரமாணம் வாசித்திருக்கிறார் ரமணா. பதவி ஏற்றுவிட்டு இருக்கையில்
அமர்ந்திருந்தவர்களும்கூட கைக்குட்டையை கண்களில் ஒத்தி எடுத்தபடியே
இருந்தனர். பதவி பிரமாண பத்திரத்தில்கூட கண்ணீர் துளிகள் விழுந்தன.
பதவியேற்பு முடிந்ததும் குரூப் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி. அதற்காகப்
பக்கத்துஅறைக்குப் போனார்கள் அமைச்சர்கள். கவர்னர் ரோசய்யாவுடன் புகைப்படம்
எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் ரோசய்யாவுக்கும்
ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரே மாதிரியான இருக்கைகள். குரூப் போட்டோவில்
வளர்மதி அழுதபடியே போஸ் கொடுத்தார். காமராஜ், செந்தில்பாலாஜி தலை
கவிழ்ந்தபடியே இருந்தனர்.
''அம்மா அவர்கள் தெய்வம். அந்தத் தெய்வம்
குடிகொண்டிருக்கும் கோயிலான தலைமைச் செயலகத்திலும் போயஸ் கார்டனிலும் நான்
செருப்புப் போட மாட்டேன்'' என்று சொல்லி செருப்பில்லாமல் இருந்தார்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். ஆனால், ''அம்மா இல்லாத மந்திரி சபையில் நான்
இருக்க மாட்டேன்'' என்றெல்லாம் ஸ்டன்ட் அடித்து பதவியேற்பை அவர் ஏனோ
புறக்கணிக்கவில்லை. கண்ணீரோடு நடந்த பதவியேற்பு விழா முடிந்தபோது ''அம்மா,
சிறையில் இருந்தாலும் இது அம்மா மந்திரிசபைதான்'' என ஒரு பத்திரிகையாளர்
கமென்ட் அடிக்க... ''அம்மா மந்திரிசபை இல்லீங்க... அழுகாச்சி மந்திரிசபை''
என இன்னொரு பத்திரிகையாளர் பதில் கமென்ட் அடித்தபோது சிரிப்பலை.
பதவியேற்ற பிறகு கோட்டைக்கு காரில் கிளம்பிப்போன
முதல்வர் பன்னீர்செல்வத்தைப் பார்த்து பலர் வணக்கம் வைக்க... பதில்
வணக்கம்கூட அவர் வைக்கவில்லை. கோட்டையில் ஜெயலலிதா இருந்த அறைக்குப்
போகாமல் தன்னுடைய அறைக்குப் போனார். இதைப் படம் எடுக்க முயன்றவர்களையும்
செய்தித் துறையினர் அரணாக இருந்து தடுத்து நிறுத்தினர்.
நெடுஞ்சாண்கிடையாய் காலில் விழுவது, இடுப்பை வளைத்து
வணக்கம் வைப்பது எல்லாம் விசுவாசத்தின் அளவுகோல். இதில் இப்போது கண்ணீரும்
சேர்ந்துகொண்டது.
- எம்.பரக்கத் அலி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார் vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக