திங்கள், 6 அக்டோபர், 2014

கலைஞர் வீட்டுக்கு அழகிரி வந்தார் ! அழகிரிக்கு மீண்டும் தென்மாவட்ட செயலர் பதவி ?

எந்த நேரமும் தி.மு.க.,வில் மீண்டும் சேர்க்கப்படலாம்' என, பல தரப்பினரும் எதிர்பார்க்கும் நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு, நேற்று காலை மு.க.அழகிரி வந்தார். அதனால், கருணாநிதியை சந்தித்து, அவர் பேசினாரா என்ற பரபரப்பு, தி.மு.க.,வில் உருவானது.அழகிரி, என் பிள்ளை என்பதை மறந்து, வெகு நாட்களாகி விட்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, லோக்சபா தேர்தலுக்கு முன் கூறியிருந்தார்.இதனால், கருணாநிதி மீது அதிருப்தி அடைந்த அழகிரி, 'இப்படியெல்லாம் சொன்ன கருணாநிதியை சந்திக்க மாட்டேன்' என, தன் ஆதரவாளர்களிடம் கூறி வந்தார்.இந்நிலையில், சமீபத்தில், கருணாநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'என் மகன் அழகிரிக்கு எதிரான வழக்கு, தி.மு.க., ஆட்சியில், சித்துாருக்கு மாற்றப்பட்டது' என, குறிப்பிட்டிருந்தார். அதனால், அழகிரிக்கு கருணாநிதி மீது இருந்த கோபம் குறைந்துள்ளது. மீண்டும் கட்சியில் தன்னை சேர்ப்பதற்கான, சமிக்ஞையாகவே கருணாநிதியின் அறிக்கையை அழகிரி கருதினார்.


இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அழகிரி, நேற்று காலை கோபாலபுரம் வீட்டிற்கு திடீரென சென்றார். வீட்டின் கீழ் அறையில் தங்கியிருந்த தன் தாயார் தயாளுவை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.தயாளுவை அழகிரி சந்தித்த போது, அழகிரியின் சகோதரர் மு.க.தமிழரசு உடனிருந்துள்ளார். அப்போது, அவரிடம் சில விஷயங்களை அழகிரி பதிவு செய்து விட்டு சென்றதாகவும், மாடியில் இருந்த கருணாநிதியையோ மற்றும் சகோதரர் ஸ்டாலினையோ அவர் சந்திக்கவில்லை என, கூறப்படுகிறது.அழகிரி தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் மு.க.தமிழரசு, கருணாநிதியிடம் சொல்ல, அது குறித்து கட்சியின் பொதுச்செயலர் அன்பழகனிடம் கருணாநிதி ஆலோசித்துள்ளார்.

மா.செ.,க்கள் கூட்டம்:

இதற்கிடையில், வரும், 8ம் தேதி, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, தி.மு.க., கூட்டியுள்ளது. சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ள அந்தக் கூட்டத்தில், அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது, சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதால் எழுந்த அரசியல் சூழ்நிலை உட்பட, பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: