தமிழகத்தில் அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டங்களை உன்னிப்பாக
கவனித்து வருகிறது பாஜக தலைமை. குறிப்பாக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த
தகவல்களை கவனமாக டெல்லிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர் மத்திய உளவுத்
துறையினர். தேவை எனில், அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 355-ன் கீழ்
முதல்கட்டமாக மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு அதிகாரத்தை மட்டும் கையில்
எடுக்க பாஜக ரகசிய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்
பாகவத்தின் பேச்சை உற்று கவனிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். சில
மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி,
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக குடியரசுத் தலைவரிடம் மனு
ஒன்றை கொடுத்தார். தற்போது ஜெயலலிதா சிறையில் இருக்கும் சூழலில் இங்கு
கிட்டத்தட்ட அரசியல் நிலையற்றத் தன்மை ஏற்பட்டுள்ளதாகவே கருதுகிறது பாஜக
தலைமை.
இதன் தொடர்ச்சியாகவே மோகன் பாகவத் தனது பேச்சில், “தமிழகம், கேரளத்தில்
ஜிகாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துவிட்டன. மேற்குவங்கம், அசாம், பிஹார்
ஆகிய மாநிலங்களில் வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்” என்று
குறிப்பிட்டார். தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக
வளர்ந்துவரும் கட்சியாக இருக்கிறது. இங்கெல்லாம் கட்சியை வளர்க்கவும்,
ஆட்சியை கைப்பற்றவும் பாஜக தலைமை மிகப் பெரிய திட்டங்களைத் தீட்டி
வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களை சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்ள பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. இங்கு நடந்துவரும்
பல்வேறு துறையினரின் வேலைநிறுத்தம், கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட
போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பங்களை மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறது
பாஜக. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்த தமிழக எதிர்க்கட்சிகள்
விடுக்கும் அறிக்கைகளையும் ஆராய்ந்து வருகிறது. அத்துடன் குடியரசுத்
தலைவரிடம் சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனு, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு
ஆகியவற்றையும் முடிச்சு போட்டு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள
நினைக்கிறது.
அதன்படி, முதல்கட்டமாக அரசியல் சாசன சட்டத்தின் 355-வது பிரிவை மட்டும்
அமல்படுத்தி, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக
தெரிகிறது. ‘மக்களை காக்க எதுவும் நடக்கலாம்’
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்டபோது,
“மத்திய அரசு திட்டமிட்டு அரசியல் சாசனப் பிரிவு 355-ஐ நோக்கி செல்லவில்லை.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், தீவிரவாதம் தொடர்பானவற்றை நாங்கள்
கவனித்து வருகிறோம். தமிழக மக்களை பாதுகாக்க வேறுவழி இல்லை என்றால் இங்கு
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.
ரஜினி வீட்டில் ஆலோசனை
சமீபத்தில் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்ற தமிழிசை சவுந்திரராஜன், சுமார்
ஒரு மணி நேரம் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த
சந்திப்பு குறித்து தமிழிசையிடம் கேட்டபோது, “ஆமாம், சென்றேன். கொலு
விழாவுக்கு சென்றதால் அதுபற்றி வெளியே சொல்லவில்லை” என்றார்.
‘‘இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்பட்டதா?” என்று கேட்டதற்கு “ஆமாம்,
பேசினேன். ரஜினி ஊரில் இல்லாததால் அவரிடம் பேச முடியவில்லை. ரஜினி
வந்தவுடன் மீண்டும் வந்து சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். ரஜினிக்கும்
மோடிக்கும் நல்ல உறவு இருக்கிறது. பாஜகவின் திட்டங்களை அவர்
பாராட்டியிருக்கிறார். அதனால், அரசியல் பேசினோம்” என தெரிவித்தார். tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக