வியாழன், 9 அக்டோபர், 2014

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மட்டும் தாக்கல் ! ஏனைய முவருக்கும் தாக்கல் செய்யப்படவில்லை !

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்குமாறு அதில் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி மனு எதுவும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை அதிமுக வக்கீல்கள் இன்று தாக்கல் செய்தனர். இந்த மனுவில், எனக்கு 66 வயதாகிறது. எனக்கு பல உடல் உபாதைகள் உள்ளன. எனக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. என்னால் குறைந்தது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாத நிலை உள்ளது. எனவே நான் ஒரு பெண் என்பதையும், எனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் எனக்கு விதித்துள்ள தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.இதையே இனி முன்மாதிரியாக கொண்டு இந்தியாவின் சகல குற்ற வாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்தி வைக்குமாறு கோரலாமுங்கோ ? சீக்கிரம் வல்லரசாக இது தான் நல்ல வழி !
இந்த மனு நாளை அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று மூன்றரை மணி நேரம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆலோசனை நடத்திய ஜெயலலிதாவின் வக்கீல்கள் குழு நேற்றே டெல்லி புறப்பட்டு வந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் கிடைக்காவிட்டால் சுஷில் குமார் அல்லது கே.கே.வேணுகோபால் ஆஜராகலாம் என்றும் கூறுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் யாரையும் சந்திக்க மறுத்து வந்தார் ஜெயலலிதா. நேற்றுதான் முதல் முறையாக தனது வக்கீல்களை அவர் சந்தித்தார். நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில் உள்பட 5 வக்கீல்களை மட்டும் அவர் சந்தித்தார். பிற்பகல் 1 மணி முதல் நாலரை மணி வரையில் அவர்கள் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினர். ஜாமீன் எடுக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அவர்கள் ஜெயலலிதாவிடம் விளக்கினர். உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளது குறித்தும் அவர்கள் விளக்கினர். பின்னர் உரிய ஆவணங்களில் ஜெயலலிதாவிடம் கையெழுத்து பெற்ற பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இந்த சந்திப்பின்போது சசிகலா, இளவரசி ஆகியோரும் ஜெயலலிதாவுடன் இருந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறைக்கே நேரடியாக வக்கீல்கள் போய் அவரைப் பார்த்துப் பேசியுள்ளனர். பார்வையாளர் அறைக்கு ஜெயலலிதா வரவில்லை என்று தெரிகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து வக்கீல்கள் குழு டெல்லி விரைந்தது. இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்று மனுத் தாக்கல் செய்தால்தான் நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. அதன் பிறகு சனி, ஞாயிறு வருகிறது. திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை என்று தெரிகிறது. எனவேதான் அனைத்தையும் கருத்தில் கொண்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளது அதிமுக.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: