பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 1,136
பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பு விவரத்தை படிக்க படிக்க
ஏராளமான தகவல்கள், திகில் விஷயங்கள், அதிர வைக்கும் விவகாரங்கள்...
தீர்ப்பிலிருந்து கொஞ்சம் இதோ....
பெயர்: ஜெயலலிதா
தொழில்: முதல் அமைச்சர் (அரசு ஊழியர்)
முந்தைய சொத்து மதிப்பு: முதல்வர் ஆகும் முன் ஜெயலலிதா காட்டிய மொத்த
சொத்தின் மதிப்பு ரூ. 2 கோடி
லஞ்சப் பணத்தை வெள்ளையாக்க ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் தொடங்கிய
'டுபாக்கூர்' நிறுவனங்கள்!
1991-1996 காலகட்டத்தில் வருமானம்: முதல்வர் சம்பளம் மாதம் 1 ரூபாய். மற்ற
வகைகளில் ரூ. 9.91 கோடி (இதில் பல வங்கிகளில் வாங்கிய லோன்களும் அடக்கம்)
1991-1996 காலகட்டத்தில் செய்த செலவு: ரூ. 8.49 கோடி
மிச்சம் இருந்தது: ரூ. 1.4 கோடி
இந்த காலகட்டத்தில் ஜெ., சசி, இளவரசி வாங்கிய சொத்துக்களின் மதிப்பு: ரூ.
55 கோடி. இவர்களது செலவுகளையும் கணக்கில் சேர்த்தால் சொத்தின் அளவு
மொத்தம் ரூ. 63.5 கோடி
கேள்வி: வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவ்வளவு சொத்தும் பணமும்
எங்கிருந்து வந்தது?
சசிகலாவின் வருமானங்கள் மூலமாக இந்தப் பணம் வந்திருக்கலாமே என்று வாதாடக்
கூட முடியாது. காரணம், ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜெயலலிதாவின்
வீட்டில் சசிகலா வாழ ஆரம்பிப்பற்கு முன் அவரது சொத்து விவரங்கள் இவை தான்.
பெயர்: சசிகலா
தொழில்: ஏதும் இல்லை. அரசுத்துறையில் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த கணவர்
நடராஜனின் வருமானம் மட்டுமே
முந்தைய சொத்து மதிப்பு: 1987ம் ஆண்டு நடராஜன் வீடு வாங்கவே லோன்
வாங்கியுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க ரூ. 3,000 லோன் வாங்கியவர்
நடராஜன்.
நடராஜனின் தந்தை சாமிநாதன் மன்னையார் மற்றும் சித்தப்பா பழனிவேல்
ஆகியோருக்கு சேர்த்தே 24 ஏக்கர் நிலம் தான் இருந்தது. நடராஜனின் தாயார்
லீலாவதி பெயரில் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. ஆக, நடராஜன் தந்தை-தயாருக்கு
என சொந்தமாக இருந்தது 17.5 ஏக்கர் நிலம் மட்டுமே. இந்த நிலம் நடராஜனுக்கு
மட்டும் சொந்தம் அல்ல. உடன் பிறந்தவர்களுக்கும் பங்கு இருந்தது. இதன்மூலம்
நடராஜனுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை என்பது நிரூபணமாகிறது.
சசிகலாவின் தந்தை விவேகானந்தன் ஒரு நாட்டு வைத்தியர். அவருக்கும் 9
பங்காளிகளுக்கும் சேர்த்து இருந்த மொத்த நிலமே வெறும் 81 சென்ட் மட்டுமே.
இந்த சொத்தில் சசிகலா, வனிதா மற்றும் 6 சகோதரர்களுக்கு பங்கு இருந்தது.
இதனால் சசிகலாவுக்கும் பூர்வீகச் சொத்துகள் என சொல்லிக் கொள்ளும்படி
எதுவும் இல்லை.
மேலும் சசிகலா வருமான வரி கூட கட்ட வேண்டிய நிலையில் கூட இருந்தது இல்லை.
ஜெயலலிதாவுடன் வசிக்க ஆரம்பித்த பிறகே அவரது வருமானம் கிடுகிடுவென
அதிகரித்து வருமான வரி கட்டவே ஆரம்பித்தார்.
அப்படி என்றால் இளவரசி மூலமாக கிடைத்த வருமானத்தில் ரூ. 53.60 கோடி
சொத்துக்களை வாங்கியிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம்,
இளவரசியின் பொருளாதார நிலைமை இருந்த நிலை அப்படி...
பெயர்: இளவரசி
தொழில்: ஏதும் இல்லை
வருமானம், முந்தைய சொத்து மதிப்பு: இவரது கணவர் ஜெயராமன் உணவு வழங்கல்
துறையில் வேலை பார்த்த கிளார்க். வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க
இளவரசி தாக்கல் செய்த வருமான சான்றிதழில் கூறியுள்ளபடி ஆண்டு வருமானமே ரூ.
48,000 தான். அதாவது, மாத வருமானம் ரூ. 4,000 மட்டும் தான்.
(ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியானவர் ஜெயராமன்
என்பது குறிப்பிடத்தக்கது)
சரிப்பா, அப்படீன்னா சுதாகரன் என்ற மாபெரும் மனிதர் இருக்கிறாரே. அவரது
வருமானம் மூலம் சொத்துக்களை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர்
வாங்கியிருப்பார்கள் என்று வண்டு முருகன் வக்கீல் கூட வாதாட முடியாது.
காரணம்,
பெயர்: வி.என்.சுதாகரன்
தொழில்: அப்படி ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை
சசிகலாவின் அக்காள் வனிதாமணி- டி.டி.விவேகானந்தனின் மகனான சுதாகரன் வங்கி
கணக்கு ஆரம்பிக்கும் நிலைக்கு வந்ததே 1992-ம் ஆண்டு தான். இந்தக் கணக்கை
தொடங்க சுதாகரன் செலுத்திய பணமே வெறும் ரூ. 105 தான். நல்லா படிங்க 105
ரூபா தான்.
இவர் தான் ஜெயலலிதாவால் தத்து எடுக்கப்பட்டு, வளர்ப்பு மகனாக
அறிவிக்கப்பட்டு பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமணம்
நடத்தப்பட்டது.
இந்த நிலைமையில் இருந்தவர்கள் தான் அடுத்த 5 வருடத்தில் தமிழகம் முழுவதும்
306
சொத்துக்களுக்கு அதிபதி ஆகி உள்ளனர். அதன் விவரம் இதோ
இந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு ரூ. 2,847 கோடி என்றும்
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ
சரி, இந்தப் பணம் எப்படித்தான் வந்திருக்க வேண்டும்?
ரோடு காண்ட்ராக்ட், தொழிற்சாலைக்கு அனுமதி, அரசு ஊழியர் டிரான்ஸ்பர்,
அரசு பஸ்களுக்கு டயர் வாங்குவதில் கமிஷன், பத்திரப் பதிவுத்துறையில்
இருந்து தினமும் இவ்வளவு வர வேண்டும் என துறைவாரியாக பல வகைககளிலும் லஞ்சம்
வசூலிக்க முடியும். அரசின் சார்பில் கக்கூஸ் கட்டுவதில் இருந்து செத்தவரை
எரிக்கும் மின்சார மயானம் வரை எல்லா வகைகளிலும் எல்லா துறைகளிலும் லஞ்சம்
வாங்க பல பல வழிகள் கையாளப்படுகின்றன.
(உதாரணத்துக்கு ரோடு காண்ட்ராக்டில் எப்போதுமே 35 சதவீதம் கமிஷனாகவே
போய்விடும். அது எந்த ஆட்சியாக இருந்தாலும். ரூ. 10 கோடி மதிப்பில் போட
வேண்டிய சாலைக்கு ரூ. 3.5 கோடியை அமைச்சருக்கும் கவுன்சிலர்களுக்கும்
ஊராட்சி, நகராட்சி அதிகாரிகளுக்கும் கிளார்க், பியூன்களுக்கும் லோக்கல்
கட்சிக்காரர்களுக்கும் லஞ்சமாக தந்துவிட்ட காண்ட்ராக்டர் மிச்சமிருக்கும்
ரூ. 6.5 கோடியில் தான் ரோடே போடுவார். இவர்களுக்கு தேனை அள்ளித்
தந்துவிட்டு காண்ட்ராக்டர் புறங் கையையா நக்க முடியும்?. அவர் ரோடு போட
வேண்டிய பொருள்களின் தரத்தில் கையை வைப்பார். இதனால் தான் ரோடு
போட்டுவிட்டு ரோடு ரோலர் போகும்போதே அதன் சக்கரத்திலேயே பாதி ரோடும்
சேர்ந்து ஒட்டிக் கொண்டு போய்விடுகிறது)
துறைவாரியாக அமைச்சர்கள் தினந்தோறும் இவ்வளவு தர வேண்டும், வாரம் இவ்வளவு
தர வேண்டும், மாதம் இவ்வளவு தர வேண்டும், இத்தனை கோடி திட்ட ஒப்புதலுக்கு
இவ்வளவு பர்சன்ட் கமிஷன் வாங்கித் தர வேண்டும் என டார்கெட் வைத்தோ மற்றும்
நேரடியாகவோ தான் இந்தப் பணத்தை இவர்கள் வசூலித்திருக்க வேண்டும்.
லஞ்சத்தை செக்கிலோ, டிடியாகவோ வாங்க முடியாதே. இதனால் பெரும்பாலும்
பணமாகவோ, நகைகளாகவோ, அசையும்- அசையா சொத்துக்களாகவோ வந்திருக்க
வேண்டும்.
பணமாக வந்ததை வெள்ளையாக்க வேண்டுமே.. அதற்காகவே உருவாக்கப்பட்டன டுபாக்கூர்
நிறுவனங்கள். அவை இதோ...
i. M/s.J. Farm Houses;
ii. M/s.J.S. Housing Development;
iii. M/s.Jay Real Estate;
iv. M/s.Jaya Contractors and Builders;
v. M/s.J.S. Leasing and Maintenance;
vi. M/s.Green Farm Houses;
vii. M/s.Metal King;
viii. M/s.Super Duper TV (P) Ltd.,
ix. M/s.Anjaneya Printers Pvt. Ltd.,
x. M/s.Ramraj Agro Mills Ltd.,
xi. M/s.Signora Business Enterprises Pvt., Ltd.,
xii. M/s.Lex Property Development Pvt., Ltd.,
xiii. M/s.Riverway Agro Products Pvt., Ltd.
xiv. M/s.Meadow Agro Farms Pvt., Ltd.,
xv. M/s.Indo Doha Chemicals & Pharmaceuticals Ltd.,
xvi. M/s.A.P. Advertising Services;
xvii. M/s.Vigneswara Builders;
xviii. M/s.Lakshmi Constructions;
xix. M/s.Gopal Promoters;
xx. M/s.Sakthi Constructions;
xxi. M/s.Namasivaya Housing Development;
xxii. M/s.Ayyappa Property Developments;
xxiii. M/s.Sea Enclave;
xxiv. M/s.Navasakthi Contractors and Builders;
xxv. M/s.Oceanic Constructions;
xxvi. M/s.Green Garden Apartments;
xxvii. M/s.Marble Marvels;
xxviii. Vinod Video Vision;
xxix. Fax Universal;
xxx. Fresh Mushrooms;
xxxi. M/s.Super Duper TV.,
and xxxii. M/s.Kodanadu Tea Estate;
இந்த நிறுவனங்களில் எந்த பிஸினசும் நடக்கவில்லை என்பது தான்
குறிப்பிடத்தக்க விஷயம். இவை எதையும் தயாரிக்கவும் இல்லை, விற்கவும் இல்லை.
ஆனால், பணம் மட்டும் இந்த நிறுவனங்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்
கணக்குகளுக்கு வந்து குவிந்து கொண்டே இருந்தது.
இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்திச் செய்யவில்லை.
பொருள்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில்
மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன என்று
சசிகலா, இளவரசியின் ஆடிட்டர் பாலாஜி தனது வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளார்.
அதாவது இவை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்கள். லஞ்சமாக வந்த பணத்தை
வங்கிகளில் போடவும், அதை வெள்ளையாக மாற்றி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,
சுதாகரனின் கணக்குகளுக்கு மாற்றவும் மட்டும் இந்த நிறுவனங்கள்
உருவாக்கப்பட்டன.
இவ்வாறு ஜெயலலிதாவும் சசிகலாவும் மொத்தம் 52 வங்கிக் கணக்குகளைத்
தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த நிறுவனங்களுக்காக போலி பேலன்ஸ் ஷீட், லாப - நட்டக்
கணக்கு விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதும் நிரூபணமாகியுள்ளது.
லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணத்தை போயஸ் கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர்
ஜெயராமன் என்பவர் மூலமாக சசிகலா மூட்டைகளிலோ அல்லது பைகளிலோ கொடுத்து,
கூடவே பூர்த்தி செய்யப்பட்ட சலானையும் கொடுப்பார். அதை இந்த டிரைவர்
எடுத்துச் சென்று சசிகலா சொன்ன வங்கியிலு, சொல்லும் கணக்கில்
போட்டுவிட்டு வருவார். இதை ஜெயராமனே சாட்சியாக அளித்துள்ளார்.
நம்மைப் போன்றவர்கள் வங்கிக்குப் போய் வீட்டுக்கு ஒரு பத்தாயிரம் அனுப்ப
முயன்றால் பேன் கார்டு கொண்டு வா, ஈ கார்டு கொண்டு வா என்று வங்கிகளில்
ரூல்ஸ் பேசி திருப்பி அனுப்புவார்கள். ஆனால், ஒரு டிரைவர் மூட்டையிலும்
பையிலும் கொண்டு வந்த லட்சக்கணக்கான பணத்தை, கேள்வியே கேட்காமல் வாங்கி
கணக்கில் போட்ட வங்கி அதிகாரிகளை என்னவென்று சொல்வது.. அதாவது
அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் பணம் இது என்பதால் கப்சிப் என வாங்கி
வரவு வைத்துள்ளனர்.
இவ்வாறு இந்த நிறுவனங்களுக்கு வந்த பணம் பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,
சுதாகரன் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக