புதன், 8 அக்டோபர், 2014

சிவகங்கை காளையார் கோவில் கோபுரம் தீ பிடித்தது ! அதிமுகவினரின் வெறியாட்டம் !

சிவகங்கை: ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைததாகக் கூறி அதிமுகவினர் வெடி வெடித்து நடத்திய கொண்டாட்டத்தில் காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோயில் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது. திருப்பணிக்காக அதில் அமைக்கப்பட்டிருந்த சாரங்கள் எரிந்து சாம்பலாகின. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்களும், பக்தர்களும் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ளது சொர்ண காளீஸ்வரர் கோயில். பழம்பெருமையும், ஆன்மிகச் சிறப்பும் கொண்ட இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான சீரமைப்பு பணி கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. கோபுரங்களில் சுதைகள் சீரமைப்பு மற்றும் பெயிண்டிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறன. இப்பணிகளுக்காக அனைத்து கோபுரங்களைச் சுற்றிலும் தென்னங்கீற்றால் மறைத்து சாரம் அமைக்கப்பட்டிருந்தது.
கோயிலின் முன்புறம் ராஜகோபுரம் மற்றும் சின்ன கோபுரத்தை சுற்றிலும் இச்சாரம் இருந்தது. நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக கூறி ஏராளமான அதிமுகவினர் திடீரென கோயில் முன்பு திரண்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாசுகளைக் கொளுத்தினர். உற்சாக மிகுதியில் அடுத்தடுத்து வெடிகளை வெடித்து கோஷமிட்டனர். அப்போது வானத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வெடித்துச் சிதறிய வாணவெடி தீ துகள்கள், ராஜகோபுரத்தின் மீதும் விழுந்தது. இதில் கோபுரத்தின் மீதிருந்த தென்னங்கீற்றில் தீப்பற்றியது. கீற்று எரிந்து உள்பகுதியில் உள்ள மூங்கில் கம்புகளிலும் தீ பரவியது. இதனால் சாரத்தின் ஒரு பகுதி தீயுடன் சரிந்து, அருகாமை சிறிய கோபுரத்திற்கும் தீ பரவியது. இதில் இரண்டு கோபுரத்தில் உள்ள சாரங்களும் முழுமையாக எரிந்தன. இதில் அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், பக்தர்களும் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சுமார் அரை மணிநேரத்திற்கு பின் வந்த சிவகங்கை தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர். அவர்கள் ஒரு லாரியில் கொண்டு வந்த நீர் போதவில்லை. இதனால் தீயை அணைக்க முடியவில்லை. மீண்டும் மற்றொரு லாரியில் நீர் கொண்டு வரப்பட்டது. அதற்குள் இரு கோபுரங்களின் சாரமும் முழுமையாக எரிந்து, அருகாமை பகுதிக்கும் தீ பரவ ஆரம்பித்தது. இதற்கிடையே, திடீரென அப்பகுதியில் வானம் கருத்து, மழை பெய்ய தொடங்கியது. இந்த திடீர் மழையால் தீ மேலும் பரவாமல் முழுமையாக அணைந்தது. அதிமுகவினர் கொண்டாட்டம் என்ற பெயரில் வைத்த வெடியில் கோபுர சாரங்கள் தீ பிடித்தது எரிந்ததால் ஊர் பொதுமக்கள், பக்தர்களை அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், கோயில் பக்தர்களும் திரண்டனர். அவர்கள் அதிமுகவினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கோயிலில் தீவிபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அதிமுகவினரை கைது செய்யவேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இங்கிருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பக்தர்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. எனினும் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளையார் கோயில் கோபுரப்பகுதியில் இருந்த சாரங்கள் தீப்பிடித்து எரிந்த தகவல் பல்வேறு ஊர்களுக்கும் பரவியது. இதைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்து மக்களும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் பொதுமக்களுக்கு கெடுதல் ஏற்படும் என்கிற தகவல் பரவியதால், பலரும் கோயிலுக்குள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு யாகங்கள் நடத்தவும் வேண்டுகோள் வைத்தனர். தீவிபத்து சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். dinakaran,com

கருத்துகள் இல்லை: