சென்னையை சேர்ந்த பிரபல தொழில்
அதிபர் ரவிசங்கர்பிரசாத் (வயது 57).
இவர் ஆனந்த் ரீஜென்ஸி என்ற பெயரில் பல்வேறு இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இவருடைய ஓட்டல் ஒன்று ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநில பிராந்தியமான ஏனாமில் உள்ளது. இந்த ஓட்டலை பார்வையிடுவதற்காக ரவிசங்கர் பிரசாத் சென்றிருந்தார். நேற்று முந்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஓட்டலில் இருந்து வாக்கிங் செல்ல வெளியே புறப்பட்டார். அங்குள்ள கோதாவரி ஆற்றின் பாலம் அருகே சென்றவர் பின்னர் ஓட்டலுக்கு திரும்பவில்லை. அவர் கடத்தப்பட்டரா? அல்லது ஆற்றில் தவறி விழுந்து விட்டாரா? என்று தெரியவில்லை. இதுபற்றி ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக ஏனாம் போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
ரவிசங்கர்பிரசாத் ஓட்டலில் அதிகாலை 3 மணி அளவில் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். வெளியே போகும்போது வரவேற்பு கூடத்தில் இருந்த ஊழியரிடம் குடை ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.
பொதுவாக அதிகாலை 3 மணிக்கு யாரும் வாக்கிங் செல்ல மாட்டார்கள். இவர் அந்த நேரத்தில் சென்றது ஏன் என்பது மர்மமாக உள்ளது.
ஓட்டலில் இருந்து அமலாபுரம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள சுங்கக்சாவடியில் கண்காணிப்பு கேமிராவில் அவர் நடந்து செல்வது பதிவாகி இருக்கிறது. 4 மணி அளவில் குமரகிரி பகுதியில் அவர் நடந்து செல்வதை பார்த்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து முரமுல்லா என்ற இடத்தில் சிறிய பாலத்தில் அமர்ந்து தனது ஷூவை கழற்றி உள்ளார். அதையும் சிலர் பார்த்துள்ளனர். அதன்பிறகு தான் அவர் மாயமாகி இருக்கிறார். அவரை கண்டுபிடிக்க அனைத்து இடங்களிலும் தேடிவருகிறோம்.
ஏனாம் பகுதியை ஒட்டியுள்ள அமலாபுரம் பகுதி ஆந்திர மாநிலத்தை சேர்ந்ததாகும், எனவே அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் அங்கே ரவிசங்கர்பிரசாத்தை தேடிவருகிறார்கள்.
அவர் காணாமல் போனதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற தயாரிப்பாளரான எல்.வி.பிரசாத்தின் பேரனான ரவிசங்கர் பிரசாத், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., மயக்கம் என்ன, நண்பன் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக