புதன், 10 ஜூலை, 2013

இந்தியாவில் தங்கக்கட்டிகள்-காசுகள் விற்பனை நிறுத்தம்

இந்தியாவில் நடப்புக் கணக்கின் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று நிதி மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில், கணக்கு பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கட்டிகள், காசுகள் விற்பனையை நிறுத்தி வைப்பதாக அனைத்திந்திய ஆபரணக் கற்கள் மற்றும் நகை வர்த்தக கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரேஷ் சோனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசுக்கு நெருக்கடி வரும் காலங்களில் நகை வணிகர்கள் சமூகம் அரசுக்கு வேண்டிய ஒத்துழைப்பை அளிக்கும். சுயவிருப்பமாக எடுக்கும் இந்த முடிவின் மூலம் அரசுக்கு உதவ முடிவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். தங்க கட்டிகள் மற்றும் காசுகள் விற்பனையை நிறுத்தி வைக்கும் முடிவு ஆறு மாதங்களுக்கோ அல்லது அரசின் பற்றாக்குறை தீரும்வரையோ நடைமுறையில் இருக்கும். எனினும் அரசு மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதிக்கு உதவும் வகையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் உள்ள நகை வணிகர்களுக்கு அரசின் பற்றாக்குறையை விளக்க பனிரெண்டுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்த கூட்டமைப்பிற்கு கட்டுப்பட்ட வர்த்தக மையங்கள் அனைத்தும், தனியார்களுக்கோ, வர்த்தக நிறுவனங்களுக்கோ தங்கக் கட்டிகளையோ, காசுகளையோ விற்பதில்லை என்று அறிவித்துள்ளன.

உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட நகை வணிகம் சார்ந்த 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: