புதன், 10 ஜூலை, 2013

பார்ப்பன பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள் !

பல்லக்கு போலிகளின் தனியார்மய எதிர்ப்பு முகமூடி மமதா பானர்ஜி என்றவொரு பாசிஸ்டின் கையால் கிழிபட்டது. மதச்சார்பின்மை முகமூடியோ ஒரு பார்ப்பன பாசிஸ்டின் கரத்தால் கிழிக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறது.
லது-இடது போலி கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற அரசியல் சாக்கடையில் தம் சொந்த விருப்பத்தின் பேரில்தான் இறங்கியிருக்கின்றனர் என்பது உண்மையே எனினும், அவர்களைத் திணறத் திணற அந்தச் சாக்கடைக்குள் முக்கி எடுப்பதற்கு ஒரு ஜெயலலிதா தேவைப்படுகிறார். நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல் கூத்துகள் போலிகளின் முக விலாசத்தை முற்றிலும் அம்பலமாக்கி விட்டன. தங்களுடைய மாநிலங்களவை வேட்பாளருக்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரி சென்னைக்குக் காவடி எடுத்த வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் காக்க வைத்து, பார்க்க மறுத்து, பிறகு ஆதரவு இல்லை என்று டில்லியில் அறிவித்து கதவை மூடிய பின்னரும் காம்பவுண்டுக்கு வெளியே காத்திருந்தனர் போலி கம்யூனிஸ்டுகள்.

பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள்.
ஐந்து வேட்பாளர்களை அறிவித்து, அதில் சரவணபெருமாள் கிரிமினலென்று அம்பலமான பின்னரும் விடாமல், மாற்று வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமளவுக்கு வாக்குகளைத் திரட்ட முடியாது என்று தெரிந்த பின்னர்தான், பிச்சைக்காரனுக்கு மிச்சம் மீதியை எறிவதைப் போல ஒரு இடத்தைப் போலிகளுக்கு விட்டெறிந்தார் ஜெயலலிதா. தன்னுடைய ஆசிபெற்ற தா.பாண்டியனுக்குப் பதிலாக ராஜாவை நிறுத்தியதன் காரணமாகத்தான் இந்த விசேட அவமதிப்பு என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. ஜெயலலதாவின் அவமதிப்புகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தில் அ.தி.மு.க. அடிமைகளை விஞ்சியவர்கள் போலிகள்.
பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக ஆதரித்த ஜெயாவுடன் 2001 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துவிட்டு, “அவர் மாறிவிட்டார்” என்று விளக்கமளித்தனர். மதமாற்றத் தடைச்சட்டம், கிடாவெட்டுத் தடைசட்டம், அரசு ஊழியர் மீதான அடக்குமுறை – என அடுக்கடுக்காக விழுந்தன செருப்படிகள். “தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தால் எலிக்கறி தின்கிறார்கள்” என்று சொன்னதற்காக இவர்களது எம்.எல்.ஏ.வின் வீடு தாக்கப்பட்டது. “தரிசு நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்காதீர்கள், நிலமற்ற விவசாயிகளுக்குக் கொடுங்கள்” என்று கேட்ட இவர்களை “நிலம் கேட்பீர்கள், பிறகு அதை உழுவதற்குப் பணம் கேட்பீர்கள்” என்று ஜெ எள்ளி நகையாடினார். இந்த ஆளும் வர்க்க, பார்ப்பனத் திமிரும் அவமதிப்புகளும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எள்ளளவும் கோபத்தை ஏற்படுத்தாமைக்கு ஒரே காரணம், அவர்களுக்கும் அ.தி.மு.க.வின் பிழைப்புவாத அடிமைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை – தோளில் போட்டிருக்கும் துண்டின் நிறத்தைத் தவிர.
தனியார்மய எதிர்ப்பையும் மதச்சார்பின்மையையும் வைத்துத்தான் போலிகள் தங்களைச் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள். தனியார்மய எதிர்ப்புமே வங்கத்தில் சந்தி சிரித்து விட்டது. எஞ்சியிருப்பது மதச்சார்பின்மை. இந்தியாவில் மிக மோசமான சந்தர்ப்பவாதக் கட்சிகூட வெறுத்து ஒதுக்கும் பாசிசக் கொலைகாரன் மோடியை “தனது அருமை நண்பர்” என்று திமிராகப் பிரகடனம் செய்து கொள்ளும் ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா. “அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா” என்று சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஏற்கெனவே பிரச்சாரம் செய்து வருகிறது. இதெல்லாம் தெரிந்துதான் போலி கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குகிறார்கள். நாளை மோடியை ஜெ ஆதரிக்கும் போது, “நாங்கள் ஜெயலலிதாவுடன்தான் கூட்டணி, அவர் மோடியுடன் கூட்டணி வைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இவர்கள் கூசாமல்பேசுவார்கள். போலிகளின் தனியார்மய எதிர்ப்பு முகமூடி மமதா பானர்ஜி என்றவொரு பாசிஸ்டின் கையால் கிழிபட்டது. மதச்சார்பின்மை முகமூடியோ ஒரு பார்ப்பன பாசிஸ்டின் கரத்தால் கிழிக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறது. vinavu.com

கருத்துகள் இல்லை: