வியாழன், 11 ஜூலை, 2013

அடியாட்களுடன் போலீஸ் ஏட்டு அடாவடி! மாமூல் கேட்டு டிரைவர்கள் மீது தாக்கு

கிருஷ்ணகிரி :"மாமூல்' தர மறுத்த லாரி டிரைவர்களை, போலீஸ் ஏட்டு,
அடியாட்கள் மூலம் தாக்கியதைக் கண்டித்து, பொதுமக்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், குருவிநாயனப்பள்ளியில், போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இது, ஆந்திர மாநில நுழைவுப் பகுதி. இங்கு, நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, ஏட்டு ராஜேந்திரன் பணியில் இருந்தார்.அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. லாரியை நிறுத்திய, ராஜேந்திரன் மற்றும் அவரது எடுபிடியாக இருந்த அடியாட்கள், டிரைவர்களிடம், மாமூல் பணம் கேட்டனர்.டிரைவர்கள், ஹீர்சியாபூரை சேர்ந்த பரம்ஜித் சிங், 42, குருவிந்தர் சிங், 43, ஆகியோர் லாரியை விட்டு இறங்கி, ஆவணங்களைக் காட்டி, அனைத்தும் சரியாக உள்ளதால், "மாமூல் தர முடியாது' என்றனர்.


தொடர்ந்து அடியாட்கள் மிரட்டினர். பயந்த டிரைவர்கள், 20 ரூபாயை மட்டும் கொடுத்தனர். ஆத்திரமடைந்த ஏட்டு ராஜேந்திரன் மற்றும் அடியாட்கள், லத்தியால் டிரைவர்களை தாக்கினர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து, போலீசில் புகார் செய்யப் போவதாகக் கூறிய டிரைவர்கள், லாரியை, கிருஷ்ணகிரி நோக்கி ஓட்டினர். பைக்கில் பின் தொடர்ந்து வந்த, அடியாட்கள் தாஸ், கோவிந்தன் ஆகியோர், லாரியை மறித்து, இரும்பு கம்பியால், முன் கண்ணாடியை உடைத்தனர்.அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை பிடித்து விசாரித்தனர். விவரம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த, போலீஸ் உயர் அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக, போலீஸ் அதிகாரி உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை, பொதுமக்கள் கைவிட்டனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: