சனி, 13 ஜூலை, 2013

நெல்சன் மண்டேலா எப்படி சந்தோஷப்பட்டாரோ அந்த அளவுக்கு சந்தோஷம்! பரிதி இளம்வழுதிப் பேச்சு!

அதிமுக அரசின் சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரச் செயலாளர் பாரதி முருகன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்பி சீனிவாசன், வேடச்சந்தூர் எம்எல்ஏ பழனிச்சாமி, பழனி எம்எல்ஏ வேணுகோபால் உள்பட முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். >கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி கலந்துகொண்டு பேசியதாவது, இரண்டு வருடத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறேன். 27 வருடங்களுக்கு பிறகு மண்டேலா எப்படி மக்களைப் பார்த்து சந்தோஷப்பட்டாரோ அந்த அளவுக்கு இப்போது சந்தோஷம் அடைகிறேன். அதற்காக அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் என்ன தப்பு செய்தேன். 35 வருடமாக கட்சிக்காக உழைத்து பட்டிதொட்டிகளெல்லாம் போய் கட்சியை வளர்த்து வந்தேன். அதற்காக எனக்கு 6 முறை எம்எல்ஏ சீட் கொடுத்தார்கள். அதுவும் ஜெயக்கிற குதிரை, உழைக்கிற குதிரை என்று நினைத்துத்தான் கொடுத்தார்கள்.
கடந்த தேர்தலில் நான் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டேன். அதைக் கண்டறிந்து தலைவரிடம் சொன்னபோது, சம்மந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தார். ஆனால் இரண்டே நாளில் நடவடிக்கை எடுத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டனர். கட்சிப் பொருப்புகளில் இருந்தும் என்னை எங்கள் பகுதியில் நடக்கும் கூட்டத்திற்கு கூட அழைப்பதில்லை. அதற்குப்பிறகு எதற்கு அங்கு இருக்க வேண்டும் என்பதால்தான் அம்மாவிடம் வந்து சேர்ந்தேன். யார் பூனைக்கு மணி கட்டுவார்கள் என்று இருந்தார்கள். நான் கட்டிவிட்டேன். இன்னும் நிறைய பேர் வருவார்கள்.

அம்மாவைப்பற்றி பலமுறை தவறாக பேசியிருக்கிறேன். அப்படியிருந்தும், நான் போய் சேர்ந்தபோது, அன்பாக பேசி பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டார். ஏற்றுக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றி வா லட்சக்கணக்கான கட்சியினர் இருக்கின்றனர் என்றார். இனி அம்மா காலம்தான். எம்பி, எம்எல்ஏ என இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிவாகை சூடப்போகிறது. இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை: