புதன், 29 ஆகஸ்ட், 2012

மருத்துவமனையில் ஒன்பது பேர் பணியிடை நீக்கம் குழந்தயை எலி கடித்த

பணியில் அலட்சியமாக இருந்ததால், சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையின், நிலைய மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.,), பணியில் இருந்த டாக்டர் பார்த்திபன் உள்ளிட்ட ஒன்பது பேரை, அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், குறை பிரசவத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு, அவசர கிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் உடல்நிலை மோசமாகவே, கடந்த 26ம் தேதி, மாலை 5.45 மணிக்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.இத்தகவல் குழந்தை யின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை மறுநாள் காலையில் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, அன்றிரவு, சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டிலேயே குழந்தை யின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் : நேற்று முன்தினம் காலை, குழந்தையின் உடலை பெறச் சென்ற அதன் பெற்றோர், குழந் தையின் இடது கன்னத்தில், ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
குழந்தையின் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த அவர்கள், "இறந்த தங்கள் குழந்தையின் முகத்தை எலி கடித்து குதறியுள்ளது' எனக் கூறி, தங்கள் உறவினர்களுடன், மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின் அவர்கள், போலீசில் அளித்த புகாரின் காரணமாக, இறந்த பச்சிளம் குழந்தையின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. "பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் துறையின் திசு பரிசோதனை முடிவுகள் வந்த பின்தான், குழந் தையின் கன்னத்தில் எலி கடித்ததா அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக, இவ்வாறு ஏற்பட்டதா என்பது தெரிய வரும்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. விசாரணை:
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சம்பவம் குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரி வித்தது. உடனே, மருத் துவக் கல்வி துணை இயக்குனர் முத்துராஜன் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு, மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ., - செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.நேற்று காலை 10 மணிக்கு, சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சென்ற, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், குழந் தைகள் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதன்பின், மருத்துவமனை அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதிரடி:ஆலோசனை முடித்து அமைச்சர் கிளம்பிய சிறிது நேரத்தில், திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ., ரமேஷ், சம்பவத்தின்போது பணியிலிருந்த டாக்டர் பார்த்திபன் மற்றும் ஏழு மருத்துவப் பணியாளர்களை, அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தது.மருத்துவமனையில் இருந்த குழந்தையை, எலி கடித்து குதறும் அளவிற்கு, தங்கள் பணியில் அலட்சியாக இருந்ததால், டாக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால், அரசுமருத்துவமனைகளின் வளாகங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், இதேபோன்ற அதிரடி நடவடிக்கையை, போர்க்கால அடிப்படையில் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. உணவகங்கள் மூடல்: >இச்சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: *மருத்துவமனை விதிகளின்படி, பிரேதப் பரிசோதனை தேவைப்படாத இனங்களில், இறந்தவர் உடலை உடனே உரியவரிடம் ஒப்படைப்பதை மருத்துவ நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்க இயலாத நிலையில், உடலை சவக்கிடங்கில் மட்டுமே உரிய பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனை வளாகங்களில் நாய், பூனை, எலி முதலியவை வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்கவும், அதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*எலிகளை பிடிப்பதில் பழக்கமுள்ள இருளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
*மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவமனைகளிலேயே உணவு அருந்துவதால், நாய், பூனை, எலி தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே, மருத்துவமனை வளாகத்தில் உணவு அருந்துவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும் உணவகங்கள் உடனே மூடப்படும். உணவகங்களிலேயே உணவு அருந்துவது கட்டாயமாக்கப்படும்.*பார்வையாளர் நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

ஐகோர்ட்டில் மனு :
அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லை குறித்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். தனது மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்கக் கோரினார்.தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி முன் நேற்று வழக்கறிஞர்ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, "அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையை எலி கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தான் காரணம். இதுகுறித்து தாக்கல் செய்யும் மனுவை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என்றார். அதற்கு, "மனுத் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா?' என நீதிபதிகள் கேட்டனர். "மனு தயாராக இருக்கிறது. தாக்கல் செய்ய வேண்டும்' என்றார் வழக்கறிஞர்.இதுகுறித்து நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் பாதுகாப்பு தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நடத்துனர் சடையன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "மருத்துவமனைகளில் நாய், பூனை, எலிகள் தொல்லை உள்ளது. நோய் பரவாமல் தடுப்பதற்காக, மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் இருக்கும் போது, அவர்களை மருத்துவர்கள், ஊழியர்கள் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தான் ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் சிகிச்சைப் பெறுகின்றனர். அவர்கள் மத்தியில் ஒரு பய உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்கவும், எலி, நாய், பூனைத் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: