ஸ்ரீபெரும்புதூர் :போலி நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல்
மோசடி செய்த மூன்று ஈழத்தமிழர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இஞ்சினியர் ஆவார்
ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு
தங்க நகைகளுக்கு அடமான கடன் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் அதே
பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர், 5 தங்க வளையல்களை அடகு வைக்க எடுத்து
வந்தார். அவசரமாக பணம் தேவை ரூ. 1 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
கம்பெனி ஊழியர்கள் அந்த நபரிடம் வளையல்களை வாங்கி சோதித்து பார்த்தனர்.
அப்போது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. அடகு வைக்க
வந்தவரிடம் கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து
நிறுவன ஊழியர் வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். பைனான்ஸ்
நிறுவனத்தில் உள்ள கேமராவில் அந்த மோசடி நபரின் உருவம் பதிவாகியிருந்தது.
அதை வைத்து போலீசார் விசாரித்தனர். திருவான்மியூர் பாலவாக்கத்தில் பதுங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த விஜய ஸ்ரீகாந்த் (எ) கந்தபால் (42), கொழும்புவை சேர்ந்த பத்மநாபன் (52) என்பதும் கூட்டாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. விஜய ஸ்ரீகாந்த் இலங்கையில் இன்ஜினியரிங் முடித்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு அவர் திருச்சி வந்துள்ளார். அங்கு ஏற்றுமதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அங்கிருந்து 4 வருடங்களுக்கு முன்பு விஜய ஸ்ரீகாந்த் சென்னை வந்துள்ளார். அப்போது கொழும்பு பத்மநாபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இலங்கையில் இருந்து தங்க மூலாம் பூசப்பட்ட நகைகளை வாங்கி வந்து சென்னை மந்தைவெளி, போரூர், காஞ்சிபுரம், மாமல்லபுரம், மடிப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள பைனான்ஸ் நிறுனத்தில் அடகு வைத்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இருவரையும் கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக