எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மிகி, புளோரைடு 1.5 மிகி மற்றும் 45 மிகி என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிகரித்ததற்கு அதிக அளவு தண்ணீரை எடுத்ததே காரணம் என்கிறார்கள். இப்படி நிலத்தடி நீரை மாத்திரம் பயன்படுத்தும் மாவட்டங்களில் ஏற்படும் நோய்கள் அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிக்கும் நீண்ட கால நோய்களாகவே உள்ளன.
தமிழகத்தின் 17 க்கும் மேற்பட்ட இடங்களில் கோகோ கோலாவும், பெப்சியும் போட்டி போட்டு தண்ணீரை உறிஞ்ச அரசு அனுமதி கொடுத்துள்ளது. நெல்லை போன்ற வாய்ப்புள்ள இடங்களில் ஆற்றையே அள்ளிக் கொடுத்துள்ளது. சென்னைக்கருகில் ஓடிக்கொண்டிருந்த பாலாறு, கொசஸ்தலை ஆறு போன்றன இன்று காணாமலே போய் விட்டன.
இந்த ஆய்வில் நாமக்கல், கோவை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போயுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வில் உள்ள வேணந்தூர் கிராமத்தில் 1500 அடி (தோராயமாக அரை கிமீ) தோண்டினால் கூட தண்ணீர் கிடைப்பதில்லையாம். அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்துக்கு லாரி லாரியாக தண்ணீரை எடுத்துக் கொடுத்துதான் இந்த நிலைமை. கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ராட்சத பம்பு செட்களை முதலாளிகள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஓடிக்கொண்டிருந்த நொய்யலாற்றை சாயப்பட்டறை கழிவுகளால் நிறைத்து விட்டு, நிலத்தடி நீரையும் காலி செய்யத் துவங்கி விட்டார்கள் அம்மாவட்டங்களின் முதலாளிகள்.
நைட்ரேட் அதிகரித்ததற்கு விவசாய உரங்களின் அதிக பயன்பாடு காரணம் என்கிறார்கள். தற்போது பல மாவட்டங்களில் விவசாயமே நடைபெறாவிட்டாலும், பசுமைப்புரட்சி காலகட்டம் துவங்கி பல ஆண்டுகளில் செயற்கை உரங்களை தேவையில்லாத அளவுக்கு விவசாயத்தில் திட்டமிட்டு அரசு இறக்கி விட்டதன் தொடர்ச்சியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் இருப்பது போல குடிநீரை ஏரி, குளங்களில் இருந்து அரசு எடுத்து மக்களுக்கு தர வேண்டும். ஆனால் ரியல் எஸ்டேட் போன்றவற்றை வளர்த்து விட்ட உலகமயமாக்கலால் ஏரி குளங்களை எல்லாம் பிளாட் போட்டு விட்டார்கள்.
தண்ணீர் விற்பனைதான் நிலத்தடி நீரை மாசுபடுத்தியதில் முக்கிய பாத்திரமாற்றுகிறது. பெரு நகரங்களில் கேன் தண்ணீர் குடிக்குமாறு மக்களை கட்டாயத்திற்குள்ளாக்க வேண்டி அரசு குடிநீர் விநியோகத்தினை விரிவடையும் நகரத்திற்கேற்ப விரிவுபடுத்தவில்லை. இருக்கும் விநியோகத்தையும் அபகரிப்பதற்கு பெக்டெல் என்ற பிரெஞ்சு முதலாளி தயாராக சென்னையில் காத்திருக்கிறான். திருப்பூரில் ஏற்கெனவே அது தனியார் கைக்கு போய் விட்டது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பொருளாதார பின்னடைவில் உள்ள உலக முதலாளியம் அனைத்தையும் விற்பனைப் பொருளாக மாற்றுகிறது. தண்ணீர், காற்று என அனைத்தையும் நயமான சரக்காக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.
நாம் குடிக்கும் கின்லே, அக்வாபீனா போன்றன எல்லாம் இதுபோன்ற நிலத்தடி நீரிலிருந்து தயாரிக்கப்படுபவைதான். ஆனால் ரிவர்ஸ் ஆஸமோசிஸ் சுத்தம், ஓசோனைஸ்டு தரம் என படித்த முட்டாள்களை ஏமாற்றுகிறார்கள் முதலாளிகள். சேவைத்துறையை தனியாருக்கு தரும் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்ட பிறகு நடக்கும் கல்வி தனியார்மயம், ரேசன் கடை அடைப்பு, மருத்துவமனை காப்பீட்டு திட்டம், அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் எலி பிடிக்க ஆள் போடுவது எனத் தொடரும் நிகழ்வில் தண்ணீர் தனியார்மயமும் உள்ளது. ஆனால் உயிராதாரமான தண்ணீரை மாசுபடுத்திய பிறகு மனிதர்களால் அதனை சரிசெய்ய இப்போது சாத்தியமா ? அதுவரை முதலாளிகளை சும்மா விடுவதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக