மீனம்பாக்கம் :சென்னையில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகருக்கு செல்லும் லுப்தான்சா பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டது. 340 பயணிகளுடன் விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலில், ‘பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற புதுச்சேரியை சேர்ந்த ஜோசப் (65), மனைவி மரியசெல்வி (60) ஆகியோர் லுப்தான்சா விமானத்தில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் எடுத்து செல்லும் துணி பொட்டலங்களில் 2 ஸ்பீக்கர் பாக்ஸ்களில் போதை பொருட்கள் உள்ளது‘ என கூறப்பட்டது. உடனே சுங்க அதிகாரிகள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, ‘லுப்தான்சா விமானம், வானில் பறக்க அனுமதி கொடுக்க வேண்டாம், புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்த சொல்லுங்கள்‘ என கேட்டு கொண்டனர். இதையடுத்து புறப்பட்ட இடத்திலேயே விமானம், திருப்பி கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
சுங்க அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ஜோசப், மரியசெல்வியை கீழே இறக்கி அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். இதற்கிடையே 45 நிமிடம் தாமதமாக லுப்தான்சா 338 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. ‘ஸ்பீக்கர் பாக்சுக்குள் போதை பொருள் கடத்தி வைத்திருக்கிறீர்களா‘ என்று தம்பதியிடம் கேட்டபோது, இல்லை என்றனர். இருப்பினும் சந்தேகம் தீராத சுங்க அதிகாரிகள், ஸ்பீக்கரை உடைத்து பார்த்தனர். அதற்குள், இருந்த 2 துணி பொட்டலங்களில் ஆற்றுமணல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த மணலுடன் ஹெராயின் கலந்திருக்கலாம் என சந்தேகத்தில் அதிநவீன கருவி மூலம் சோதித்தனர். ஹெராயினோ அல்லது போதை பொருளோ இல்லை, அது வெறும் மணல்தான் என்பது உறுதியானது. இதனால் ஆத்திரம் அடைந்த தம்பதியினர், கடத்தல்காரர்களையும் தீவிரவாதிகளையும் பிடிப்பது போல புறப்பட்ட விமானத்தை திருப்பி கொண்டு வந்து எங்களை கீழே இறக்கி, பலபேர் முன்னிலையில் சோதனை நடத்தி அவமானப்படுத்தி விட்டீர்கள். இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என்றனர். ‘தெரியாமல் நடந்து விட்டது, எங்களை மன்னித்து விடுங்கள் என்று அதிகாரிகள், மன்னிப்பு கேட்டு தம்பதியை சமாதானப்படுத்தினர். உங்களை மாற்று விமானத்தில் மும்பைக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கிருந்து, பிரான்சுக்கு நீங்கள் சென்று விடலாம் என்று கூறி ஜோசப் தம்பதியை மும்பைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக