டெல்லி: கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் சட்ட
விரோதமாக சுரங்கங்கள் நடத்தி பல்லாயிரம் கோடி நாட்டின் சொத்தை
கொள்ளையடித்த ரெட்டி சகோதரர்களிடம் இருந்து பாஜக தலைவர் சுஷ்மா
சுவராஜுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்
தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ரெட்டி
சகோதரர்கள் எனப்படும் கர்நாடகத்தை ஆட்டுவித்த 3 பேரும் சுஷ்மா சுவராஜின்
தீவிர ஆதரவாளர்கள் ஆவர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதன் முதலாக
பெல்லாரி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து பாஜக
சார்பில் போட்டியிட்டார் சுஷ்மா.அப்போது சுஷ்மாவுக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து பிரச்சாரம் செய்தனர் ரெட்டி சகோதரர்கள். இதையடுத்து கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் சுஷ்மாவின் ஆதரவுடன் தான் ரெட்டிகள் முக்கிய இலாக்காக்களைப் பிடித்தனர். ஆட்சியையே ஆட்டுவித்தனர்.
அதே நேரத்தில் சட்ட விரோத இரும்பு சுரங்களை நடத்தி பெல்லாரியையே சுரண்டிவிட்டனர். பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான இந்த ரெட்டிகளில் 2 பேர் இப்போது சிறையில் உள்ளனர்.
இந் நிலையில் நிலக்கரி சுரங்க ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு பெருமளவில் லஞ்சம் தரப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலடியாக சுஷ்மா சுவராஜ் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார் லாலு பிரசாத். அவர் கூறுகையில், சுஷ்மா சுவராஜுக்கு ரெட்டி சகோதரர்கள் எவ்வளவு பணத்தை அள்ளித் தந்தனர் என்பது எல்லோருக்குமே தெரியும்.
ரெட்டி சகோதரர்களின் நடவடிக்கைகள், அவர்களது தொடர்புகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தினால் இவையெல்லாம் வெட்டவெளிச்சமாகும். அதற்கு பாஜக தயாரா?.
நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு தரும் சட்டம் நிறைவேறவுள்ளது. இந்த சட்டத்தைக் கொண்டு வரவிடாமல் தடுக்கத்தான் நிலக்கரி ஊழல் விவகாரம் என்று சொல்லிக் கொண்டு நாடாளுமன்றத்தையே நடத்த விடாமல் பாஜக ரகளை செய்து வருகிறது.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரும் சட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனையை ஆரம்பித்தவுடனேயே இவர்கள் நிலக்கரி ஊழல் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுவிட்டனர்.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஒரு மதக்கலவரத்தை நடத்தி மதரீதியில் மக்களை பிளவுபடுத்தி லாபம் பார்க்கும் திட்டத்தையும் பாஜக வைத்துள்ளது என்றார் லாலு.