வியாழன், 30 ஆகஸ்ட், 2012

Jeyalalitha:சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அவர் பேசும்போது, ''எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன்.
 இருப்பினும் மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்றார் எம் எஸ் வி.

இருபதாம்  நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.
இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால் தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை” “இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும்  டி.கே. ராமமூர்த்தி.
இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த  எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். 


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “ஜெனோவா” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், ‘பணம்’ திரைப்படம் முதல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை  கூ.மு. ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை  எம்.எஸ்.வி.யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.


முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்;  மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்  எம்.எஸ்.வி. . ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர்  எம்.எஸ்.வி. . தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. . மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.


பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்  எம்.எஸ். விஸ்வநாதன்.


டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா’ என்ற பாடலில் வரும் சோக இசை  டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும்.   சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர்  டி.கே. ராமமூர்த்தி .  அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர்  எம்.எஸ். விஸ்வநாதன் . எதிர்பாராத சூழ்நிலையில்  சுப்பராமன்  இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமன்-க்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும்.


இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை  ராமநாதன், மகாதேவன்,  ஆதி நாராயண ராவ்,  சலபதி ராவ்,  தக்ஷிணாமூர்த்தி,  சுப்பைய்யா நாயுடு,  இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர்.


பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர்.  நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.  இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.


நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பது தான் உண்மை.


எனக்கு  நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன்.  காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன். 


விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.


தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10-வயது, 12-வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்ப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள்.  அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்க்கிறது. அந்த ராகம் தான் பிடித்க்கிறது.  அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள்.


நான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது.  ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது.


இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது.  இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்க்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது. இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.


“சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை மதி டி.கே. பட்டம்மாள்  கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரியிடம், “உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா” என்ற கேள்வி கேட்கப்பட்ட போது,  உடனே வீணையை எடுத்து “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா” என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள். அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி .


இசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு ப்பிவிட்டவர்கள்.  உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு.


இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.

இசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு.

சங்கீதத்தைப்  பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா?
இந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.


இசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள்.


இன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை
திருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார்.


ஒரு முக்கியமான கட்டத்தில், “ பலே ” என்று ஒரு குரல் கேட்டது.  அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை. 


லட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி,  இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான்.


தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.


இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் “பொற்காலம்” என்று சொல்வார்கள். அது போல, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது. 


இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய  எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்மா விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது.


சென்ற ஆண்டிற்கான பத்மா விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி.  கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

1963-ஆம்  ஆண்டு விஸ்வநாதன் - ராமமூர்த்தி-க்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது.


இசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட  விஸ்வநாதன்  ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: