விழாவில் இளையராஜா பேச்சு சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக இருந்தது.
அவர் பேசியது:கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களைத் தந்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு முதல்வர் இப்படி பெரிய பாராட்டுவிழா நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
சிறு வயதில், நான் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலம். அப்போது பள்ளிக்குப் போகும் நேரம் போக, மீதி நேரத்தில் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு ஹோஸ் பைப்பில் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலை.
ஸ்ரீதர் சார் என்றால் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஆசை. எங்களுக்கெல்லாம், எனக்கு, பாரதிராஜாவுக்கு, அண்ணன் பாஸ்கருக்கெல்லாம் அவர்தான் ஹீரோ. வெண்ணிற ஆடை படப்பிடிப்புக்காக அவர்கள் வைகை அணைக்கு வந்திருந்தபோது நானும் மற்றவர்களும் கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான்.
அந்த ஷூட்டிங்குக்காக முதல்வர் புரட்சித்தலைவி அவர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் போகும் (பாடிக் காட்டுகிறார்...) என்ற பாடலுக்கு அவர்கள் நடித்தார்கள்.
மிக அருமையான பாடல். என் நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது அண்ணன் எம்எஸ்வி அவர்களின் இசையைத்தான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒவ்வொன்றும் கேட்கத் திகட்டாதவை. என் உடம்பில் நாடி நரம்பிலெல்லாம் அந்த இசைதான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று எனக்குள் இருக்கும் இந்த இசை அண்ணன் எம்எஸ்வி போட்ட பிச்சைதான். அவர் தூ என துப்பியதுதான்..
அவர்களை வேறு என்ன சொல்லி வாழ்த்தினாலும் சரியாகாது. இசை வடிவங்களாகத் திகழும் இந்த மேதைகளை உரிய நேரத்தில் கவுரவித்த முதல்வர் அவர்களுக்கும், ஜெயா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு இளையராஜா பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக